leader

ஊருக்கே உபதேசம் உனக்கில்லை; புத்தகாயாவும் இலங்கையும்!

இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள புனித போதிமரம் அமைந்துள்ள புத்தகாயாவில் ஒரு தொடர்வெடி குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஐம்பத்தியொரு நாடுகளின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நேபாள ஆலயம் அமைந்த பகுதியில் நான்கு குண்டுகளும் திபெத் நாட்டின் ஆலயம் அமைந்த பகுதியில் நான்கு குண்டுகளும் வளாகத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள 60 அடி உயர புத்தர் சிலையின் அருகே ஒரு குண்டுமாக 9 குண்டுகள் வெடித்துள்ளன.இதில் நேபாளம், திபெத் ஆகிய நாடுகளையும் சேர்ந்த ஒரு பிக்குவும் ஒரு யாத்திரீகருமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. அவர் இந்திய முகாஜுதின் அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தகைய மத அடிப்படையிலான வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மேற்கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் இப்படியான மனித குல விரோத நடவடிக்கைகள் வெறுக்கத்தக்கவையாகவும் நிறுத்தப்பட வேண்டியவையுமாகும்.

இலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவது, அவைகள் இருக்கும் இடங்களை விட்டு அகற்றப்படுவது, இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு விக்கிரங்களும், நகைகளும், பஞ்ச லோகத் தகடுகளும் அபகரிக்கப்படுவது, கிறிஸ்தவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டு வணக்கத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்ற மதவிரோத நடவடிக்கைகள் எவ்வளவு கேவலமான மனித குல விரோத நடவடிக்கைகளோ அவற்றைப் போன்றே புத்தகாயா தாக்குதலும் ஒரு அற்பத்தனமான, கோழைத்தனமான நடவடிக்கை தான்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இச் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததுடன் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்டவர்களுடனும் பிகார் முதல்வருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.

ஆனால் மூவின மக்களையும் கொண்ட இலங்கையின் அதிபர் என்ற வகையில் இலங்கையில் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படும் போதும், அவற்றை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போதும் அவர் தனது வருத்தத்தையோ கண்டனங்களையோ தெரிவிக்கவில்லை. அப்படியான மத விரோத ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்படவுமில்லை. அவர்கள் தொடர்ந்தும் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.அது மட்டுமன்றி சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த மேலாதிக்க சிந்தனைகளை வலுப்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் இந் நாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புத்தகாயா தாக்குதல் பற்றி விடுத்துள்ள கண்டனமானது பௌத்த மதத்திற்கு ஒரு நீதியும் ஏனைய மதங்களுக்கு வேறொரு நீதியும் என்ற அவரின் ஒரு தலைப்பட்ச இனவாத மதவாத சிந்தனைப் போக்கைக் காட்டுவதாகவே நோக்கமுடியும்.

இத் தாக்குதல் தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறி நடவடிக்கைகளை எடுத்துவரும் பொது பல சேனா, ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள தேசிய இக்கம் போன்ற இனவாத அமைப்புக்கள் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ அல்லது அதற்குச் சேதம் விளைவித்தாலோ ஆச்சரியப்பட எதுவுமில்லை. அவர்கள் ஒரு பங்களாதேஷ் தூதுவராலயத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி அதற்குச் சேதம் விளைவித்தவர்கள் என்பதை மறந்துவிட முடியாது.

அவர்கள் தொடர்பாக ஜனநாயக பிக்குகள் முன்னணியின் தலைவர் குறிப்பிட்டமையை இங்கு நினைவு கூர முடியும்.

“அவர்கள் உலகத்தில் இலங்கை இருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக உலகம் இலங்கைக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்”.

எப்படியிருப்பினும் புத்தகாயவில் இடம்பெற்ற இத் தாக்குதல் தொடர்பாக இரு கேள்விகள் எழுகின்றன.

  • இது இந்தியாவில் இந்திய ஆட்சிக்கெதிராக முஸ்லிம் தீவிரவாதிகளால் நடத்தப்படும் தொடர் குண்டுத் தாக்குதல்களில் ஒரு பகுதியா?

அல்லது

  •  இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளின் பௌத்த மத வெறியர்கள் அந்த நாட்டு அரசாங்கங்களின் ஆதரவுடன் முஸ்லிம் மக்கள் மீதும் முஸ்லிம் வழிபாட்டுது் தலங்கள் மீதும் நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிரான எச்சரிக்கையா?

எப்படியிருப்பினும் புத்தகாயாவில் இடம்பெற்ற தாக்குதல் எவ்வாறு நியாயமற்றதும் கண்டிக்கத்தக்கதுமோ அவ்வாறே பௌத்த மத வெறியர்கள் ஏனையோர் மீது நடத்தும் தாக்குதல்களும் நியாயமற்றவையும் கண்டிக்கத்தக்கவையுமே.

இவற்றை நாம் ஒரு கை ஓசையாகப் பார்க்க முடியாது.

ஒன்றின் எதிர்விளைவாகவே மற்றொன்று உருவாகின்றது என்பது விஞ்ஞான விதி.

ஒருவரின் இன, மத உரிமைகளில் மற்றவர்கள் தலையிடுவது, ஆதிக்கம் செலுத்துவது எப்போது முற்றாக நிறுத்தப்படுகின்றதோ அப்போது மட்டுமே இத்தகைய வன்முறைகளை நிறுத்த முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாயகத்திலிருந்து தமிழ்லீடருக்காக புருஷோத்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*