Bapasi-1024x682

தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்திற்கு திறந்த மடல்!

என்றும் ஈழத்தமிழனுக்காக ஆறுதல் கரம் தந்து ஆதரவு தரும் தமிழக உறவுகளுக்கு வணக்கம்,

நாம் நிமிர்வாக எழுந்து நின்றபோதும் எமது தோள்களோடு தோள் நின்றவர்கள் நீங்கள், நாம் இரத்தச் சகதிக்குள் அமிழ்ந்தபோதும் துடித்தவர்கள் நீங்கள். எங்கள் வலிகளை புரிந்து கொள்வதற்கு இடையே இன்னொரு மொழி தேவையில்லை என்கின்ற ஆறுதலுடன் உங்களுடன் எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முற்படுகின்றோம்.

ஈபிடிபியின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்.மாநகரச சபை மற்றும் யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டார்கள் சங்கத்தினால் புத்தகக் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறியமுடிகின்றது.

தமிழகத்தில் விற்பனையாகின்ற புத்தங்களை ஈழத்தில் காட்சிப்படுத்தும் நடவடிக்கை ஆரோக்கியமானதாகத் தென்பட்டாலும் அது உள்நோக்கம் கொண்டது என்பதை தெளிவுபடுத்த முடியும்.

ஈழப்போராட்டம் தோற்றம் பெற்ற காலத்திற்கு முன்பாகவிருந்து இன்றுவரையில் ஈழத்தமிழன் படுகின்ற அவலங்களை படம்பிடித்துக் காட்டுவதிலும் பதிவுகளை வெளியிடுவதிலும் தமிழகத்தின் பங்களிப்பு அளவிடமுடியாததாகவே இருந்திருக்கின்றது. ஈழத்தமிழர்களுக்கான எழுத்து ஊடகத்திற்கான வழிகாட்டுதலாக அடையாளமாக தமிழகப் படைப்புக்கள் அமைந்துவந்திருக்கின்றன என்பதை மறுத்துவிட முடியாது. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கத்தினை அழைப்பது உள்நோக்கம் கொண்டது என்பதை ஆதாரப்படுத்துகின்றோம்.

கடந்த ஆண்டு ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த திருவிழா நிகழ்வினை ஒட்டி தென்னிந்தியத் திரையிசைப் பாடகர் உன்னிகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தமை நினைவிருக்கலாம். அவ்வாறு அழைக்கப்பட்டிருந்த உன்னிகிருஷ்ணன் இசை நிகழ்சி ஒன்றில் பங்கேற்றுக்கொண்டிருந்த வேளை அழையா விருந்தாளியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உன்னிகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி அதனைப் படம் பிடித்து ஊடகங்களின் ஊடாக அரசியல் இலாம் தேட முற்பட்டதுடன் உன்னிகிருஷ்ணனை ஈழத்தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவராகக் காட்ட முற்பட்டிருந்தார்.

அதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆளுகையின் கீழேயே தற்போதைய யாழ்.மாநகர சபை நிர்வாகமும் உள்ளது ஆகையால் இங்கு அழைக்கப்படுகின்ற தமிழக ‘Bapasi’ அமைப்பில் அங்கம் பெறுகின்றவர்கள் ஈழத்தமிழ்த் தேசியத்திற்கெதிரானவர்களாக காட்டப்படுவதற்கோ அல்லது அவர்கள் ஈழத்தேசியத்திற்கெதிரானவர்களாக ஆக்குவதற்கோ குறித்த தரப்பு முற்படுவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் உள்ளன.

இது காலவரையும் இவ்வாறான முயற்சி எதுவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது இந் நடவடிக்கை எடுக்கப்படுவதன் பின்னணியில் முக்கிய விடயம் ஒன்று உள்ளது என்பதையும் தங்களுக்குச் சுட்டிக்காட்டலாம். மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழக பதிப்புத் துறையை யாழ்ப்பாணத்திற்கு இழுத்து கண்காட்சி நடத்துவதன் ஊடாக அரசியல் இலாபம் தேடுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இலங்கை அரச தரப்பு பயன்படுத்த முற்படுகின்றது. வடக்கு தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினைச் சிதறடிப்பதற்கு முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அரச தரப்பு இதனையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவதனை அனுமதிக்க வேண்டாம் என்று அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

யாழ்.இந்தியத் துணைத் தூதரகமும் ஈபிடிபியின் ஆளுகையின் கீழ் உள்ள மாநகர சபையும் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு இசை நிகழ்ச்சியினை நடத்துவற்கான அறிவிப்பினை விடுத்திருந்தன. குறித்த நிகழ்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பங்குகொள்வார் என்று யாழ்.மாநகர சபை அறிவித்தலும் விடுத்திருந்தது. ஆனாலும் உண்மை நிலையினை அறிந்து கொண்ட மதிப்புக்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் அந்த நிகழ்வில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

என்றுமில்லாதவாறு தமிழகம் எழுச்சி பெற்று ஈழத்தமிழனுக்காக குரல்கொடுத்துவருவதை இலங்கையின் அதிகாரவர்க்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தமிழக உணர்வுகளைச் சிதைப்பதற்கு அல்லது உணர்வாளர்களை ஓரங்கட்டுவதற்கு இவ்வாறான விடயங்களை கையிலெடுப்பதற்கு இலங்கை அரச சார்பினர் முயன்று வருகின்றனர்.

எனவே,
யாழ்ப்பாணக் கண்காட்சி தொடர்பில் ‘BAPASI’ அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தீர்க்கமான நியாயமான தீர்மானத்தினை மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைகொள்கின்றோம்.

தமிழன் வீழ்ந்துவிடவில்லை என்பதற்கு தமிழகமே இன்றுள்ள எஞ்சிய சாட்சியம்.

நன்றி

தமிழ்லீடர் ஆசியர் பீடம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*