mahinda-raja

மேடையில் ஆடும் 13வது திருத்தச் சட்டம்!

இன்று இலங்கையில் எங்கும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றியே பேச்சு! இது அரசியலமைப்பின் ஒரு திருத்தச் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இப்போது அது பிறந்த போது கிடைக்காத பரபரப்பும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது.

ஆட்சி பீடத்திலுள்ள கட்சிகளிடையெ கருத்துக்கள் வெடித்து ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திரமுன்னணி, ஜாதிக ஹெல உறுமய என்பன 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் தமிழீழம் அமைவதற்கு அடித்தளமாகிவிடும் எனத் துள்ளிக்குதிக்கின்றன.

இடதுசாரிகள், முஸ்லிம்காங்கிரஸ் ஆகியன 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படாமலே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ மாகாண சபைகளிடம் காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதை சிங்கள மக்கள் விரும்பமாட்டார்களாதலால் எல்லாம் இருந்தது இருந்தபடியே இருக்கட்டும் எனக் கூறிவிடுகிறார்.

ஆனால் இன்றைய அரசுத் தலைவரும், இலங்கையின் ஜனாதிபதியுமான மஹிந்தராஜபக்ஷ இப்பிரச்சினை தொடர்பாக எந்த ஒரு திட்டவட்டமான கருத்தையும் தெரிவிப்பதில்லை. எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் அவரவர் விருப்பத்துக்கு மேடையேற்ற அனுமதித்துள்ளார்.

13வது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்படாமல் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது எனக் கோரி கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட ஏறக்குறையப் பத்துக்கு மேற்பட்ட இனவாத அமைப்புக்கள் மாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான பிரசாரங்களை நடத்திவருகின்றன.

ஏற்கனவே காணி, பொலிஸ் அதிகாரம் தொடர்பாக மாகாண சபைகளிடம் எந்த ஒரு அதிகாரமும் வழங்கப்படவில்லை.

பொலிஸ் அதிகாரம் என்பது இலங்கையின் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்படும் ஒரு பதில் பொலிஸ் மா அதிபரின் கையிலேயே மாகாணப் பொலிஸின் கட்டுப்பாடு இருக்கும். அதாவது, ஜனாதிபதியின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்தின் கீழ் செயற்படும் ஒரு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டிலேயே மாகாணப் பொலிஸ் இயங்கும். அப்படியான நிலையில் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் உண்டு எனக் கூற முடியுமா? மேலும் 13வது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் பொலிஸ் ஆணைக்குழு, பொது நிர்வாக சேவை ஆணைக்குழு என்பவற்றின் கீழேயே பொலிஸ் திணைக்களமும் பொது நிர்வாக சேவையும் இயங்கும். அப்படியானால் இவற்றின் மீது மாகாண சபைக்கு என்ன அதிகாரம் இருக்க முடியும்?

மாகாணசபைகளின் காணி அதிகாரம் என்பன வார்த்தைகளால் பேசப்பட்ட போதும் அவை என்ன என்பது எவருக்குமே தெரியாது. மாகாண சபைகளுடன் எவ்வித தொடர்புமின்றி ஜனாதிபதி செயலணிக்குழு காணிகள் வழங்கும் அதிகாரத்தை தானே அரச அதிபர் மூலம் செயற்படுத்தி வருகின்றது. காணி அபிவிருத்தி அமைச்சினால் நியமிக்கப்பட்ட காணி சுவீகரிப்புப் பிரிவு தமிழ் மக்களின் காணிகளை இராணுவத் தேவைகளுக்காகவும் அபிவிருத்தி என்ற பேரில் வேறு தேவைகளுக்காகவும் சுவீகரித்து வருகிறது. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவின் பொறுப்பில் இயங்கும் நகர அபிவிருத்திச் சபை பொதுமக்களை அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றிவிட்டு அந்நிய நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கி வருகிறது.

இப்படியான நிலையில் காணி தொடர்பாக மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள் எவை என்பதைச் சுழியோடினாலும் கூட கண்டுபிடிக்க முடியாது.

அதாவது இன்றுள்ள நிலைமையில் கூட மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ், பொது நிர்வாகம் தொடர்பாக எவ்வித செயற்பாட்டு அதிகாரங்களும் இல்லை.

இப்படியாக இல்லாத அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி விமல் வீரவன்சவும் ஹெல உறுமயவும் ஏனைய இன வெறி அமைப்புக்களும் போராட்டங்களை நடத்திவருகின்றன என்றால் என்ன அர்த்தம்.

முதலாவது – சிங்கள மக்களை இன மேலாதிக்கப் போக்கிலிருந்தும், தமிழ் மக்களுக்கு எதிரான இன வெறிச் சிந்தனையிலிருந்தும் இறங்கவிடாமல் பாதுகாப்பது. அதற்கான சஞ்சீவியாக அவர்கள் உபயோகிப்பது நாடு பிரிந்து தனிநாடு அமைந்துவிடும் என்பது தான். தனி நாடு அமையுமோ இல்லையோ என்பதை விட இவர்கள் தனிநாட்டுப் பூச்சாண்டியைக் கைவிடப் போவதில்லை. விலை வாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வு, எரிபொருள் மின்சார விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் கொதிப்படைந்து அரசுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்கத் தனிநாட்டுப் பூச்சாண்டி காட்டி அவர்களைத் திசை திருப்ப வேண்டியுள்ளது.

எனவே மஹிந்த ராஜபக்ஷ, அவர்களுக்குப் போதிய ஊக்கமளித்துத் தட்டிக்கொடுப்பார்.

இரண்டாவது – இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் வலுத்துவருகின்றன. எனவே அரசுக்கு எப்படியோ ஏதாவது ஒரு தீர்வை முன்வைக்க வேண்டியுள்ளது. எவ்வித அதிகாரப் பகிர்வையும் கொண்டிராத, ஆளுநரின் கட்டளைக்கு அப்பால் விரலைக் கூட அசைக்க முடியாத மாகாண சபையின் தேர்தலை நடத்தி 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு வழங்கிவிட்டதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி உண்டு. வடக்கு மாகாண சபை தமிழர் கைக்கு கிடைத்தால் தமிழர்களிடம் அதிகாரத்தைப் பகிர்ந்து விட்டதாகக் கூற முடியும். ஆனால் 13வது திருத்தத்தின் போலித்தன்மையை மறைக்க, அது ஏதோ தமிழர்க்கு அள்ளிக் கொடுப்பதாக ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்பு மூலம் ஏதோ மாகாண சபைகள் மூலம் பெரும் விமோசனம் கிட்டப் போவது போன்ற ஒரு மாயை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.

இந்தியாவும் இதை ஒரு வரப்பிரசாதமாகக் காட்டி தமிழர் தரப்பை ஏற்றுக்கொள்ளும்படி தூண்டலாம். அது மட்டுமன்றி அரசுடன் நிற்கும் தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் கூட இந்த மாகாண சபைத் தேர்தலை தங்கள் துரோகங்களை மறைக்கும் ஒரு கவசமாகவும் பயன்படுத்த முடியும்.

எனவே இன்று மேடையேற்றப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்ற கூக்குரலும் பறிக்கப்படக்கூடாது என்ற ஒப்பாரியும் ஒரு மூலஸ்தானத்திலிருந்து பிறப்பெடுத்தவை ஒரே நோக்கத்தைச் செயற்படுத்த முன் வைக்கப்படுபவை.

இந்த நேரத்தில் தமிழ் மக்களின் கடமை என்ன என்ன கேள்வி எழத்தான் செய்கிறது. அடிப்படையில் இத்தகைய போலியான சர்ச்சைகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் மாகாண சபை ஏற்கனவே பற்கள் பிடுங்கப்பட்டு கிழடு தட்டிவிட்டது. அது மட்டுமின்றி அது சுயம் என்பது இல்லாத ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்ட வெறும் பொம்மை. அதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை.

எனினும் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றால் அதில் தமிழர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பது முக்கியமாகும். அப்படி இல்லையெனில் அரசோ, அரசின் அடிவருடிகளோ ஆட்சியைக் கைப்பற்றினால் தமிழ் மக்கள் அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு விட்டனர் எனப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பாகிவிடும்.

இங்கு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமை உணரப்படவேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நேர்மையாகக் குரல் கொடுக்கும் சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்தி அரசு சார்பான சக்திகளைத் தூக்கியெறிய வேண்டும். இங்கு கட்சிகளும் கட்சிகளின் கொடிகளுமல்ல முக்கியம். தமிழ் மக்களின் உரிமை நோக்கிய ஐக்கியமே இன்றைய தவிர்க்க முடியாத தேவை.

இதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணரத் தவறினால் மீண்டும் அது ஒரு வரலாற்றுத் தவறை இழைத்த குற்றத்துக்கு ஆளாக வேண்டி வரும். தமிழ் மக்களால் ஒதுக்கப்படும் நிலையும் உருவாகலாம்.

தாயகத்தில் இருந்து தமிழ்லீடருக்காக புருஷோத்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*