nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 31

காடுகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்ற பாதையில் நீண்ட வரிசையில் நகர்ந்து கொண்டிருந்த மக்கள்திரளை நோக்கி தாழ்ந்து பதிந்த விமானம் குண்டுகள் எதையும் தள்ளாமலேயே பேரிரைச்சலுடன் மீண்டும் மேலெழுந்தது. வானத்தை நோக்கி மேலெழும்பிய அது மீண்டும் சற்று உயரத்தில் போய் ஒரு முறை அந்த இடத்தை வட்டமிட்டது.

“பிள்ளையாரே காப்பாத்து”, “மடுமாதாவே நீ தான் துணை”, என்றும் மக்கள் எழுப்பிய அவல ஒலி இன்னும் ஓயவில்லை.

விமானம் மேற்குப் புறமாகப் போய் வானில் மறைந்தது.

முருகேசர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் எதுவுமே பேசவில்லை. விழிகள் பயத்துடன் விமானம் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தன.

“முருகேசர்! நிலைமையைப் பாத்தால் பயத்திலையே செத்துப் போவியள் போலை கிடக்குது. உலகத்திலை சாவுக்கு மிஞ்சி ஒண்டுமில்லை. எண்டைக்கோ ஒரு நாள் சாகப்போற நாங்கள் இண்டைக்கு செத்தாலென்ன.. நாளைக்குச் செத்தாலென்ன.. சாவு வாறநேரம் வரட்டும். பயத்திலை ஒவ்வொரு நிமிஷமும் சாகாமல் தைரியமாய் இரு”, என முருகரப்பு முருகேசருக்கு ஆறுதல் சொன்னார்.

முருகர் சொல்வது அவருக்கு நியாயமாகவே பட்டது. ஆனாலும் அவரால் பயத்தில் இருந்து விடுபடமுடியவில்லை.

பரமசிவத்துக்கு சிவம் உட்பட அவனுடன் நின்று களமாடும் போராளிகள் நினைவுக்கு வந்தனர்.

“எத்தினை இளம் பொடியளும் பெட்டையளும் சந்தோசமாய் விளையாடித் திரியிற காலத்திலை வெய்யிலையும் பனியிலையும் மழையிலையும் கஷ்டப்பட்டு சரியான சாப்பாடுமில்லாமல் நிண்டு சண்டை பிடிக்குதுகள். எத்தினை பேர் செத்துக் கொண்டிருக்குதுகள். முதல் அதுகளைப் பற்றி யோசி முருகேசு”, என்றார் பரமசிவம்.

தூரத்தில் விழும் குண்டுகளைக் கண்டே தாங்கள் இப்படி நடுங்கும் போது, அந்தப் பயங்கரத்துக்குள்ளேயே நின்று போரிடும் போராளிகளை நினைத்த போது முருகேசர் தன்னையறியாமலே, “அதுகள் தெய்வங்கள்!”, என வாய்விட்டுச் சொன்னார். “இந்தாருங்கோ.. கொஞ்சம் தண்ணி குடியுங்கோ”, எனக் கூறியவாறு பிளாஸ்ரிக் கேனில் கொண்டு வந்த நீரை ஒரு குவளையில் ஊற்றி அவரிடம் நீட்டினாள் பார்வதி.

அவர் ஆவலுடன் வாங்கி ‘மட மட’வெனக் குடித்தார். அந்த வெயில் நேரத்தில் அவருக்கு அது கூட அமிர்தமாயிருந்தது. சுருண்டு படுத்துவிட்ட பெருமாளுக்கு முத்தம்மா, ‘அஸ்தலீன்’ குளிசையைப் பம்பில் போட்டு உள்ளிளுக்கக் கொடுத்தாள்.

சில நிமிடுங்களிலேயே இழுப்பு சற்று குறைவடையத் தொடங்க அவர் எழுந்து அமர்ந்து கொண்டார்.

பரமசிவம் முருகரிடம், “அப்பு.. இந்த வெயிலுக்கு மாடுகளும் பாவம். ஆறிப்போட்டு  மதியம் திரும்ப வெளிக்கிடுவம்! இரவு பள்ளமடுவிலை றோட்டுக் கரையிலை ஒரு இடம் பாத்து தங்கிப் போட்டு விடியப்புறமாய் பாலியாத்துப் பக்கம் வெளிக்கிடுவம்”, என்றார்.

முருகரும், “ஓமோம்.. பெருமாளையும் முருகேசரையும் கொண்டு இப்ப போகேலாது.. ஆறிப் போட்டு போவம்”, என்றார்.

காலையில் காய்ச்சிய கஞ்சியின் மிகுதியை பார்வதி அவதானமாகப் பானையில் வி்ட்டு தாமரை இலையால் மூடிக்கட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவள் இருந்த கிண்ணங்களிலும் குவளைகளிலும் ஊற்றி எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தாள்.

“உது தான் மத்தியானச் சாப்பாடு.. சமாளியுங்கோ.. இனிப் பள்ளமடு போய்ச் சமைச்சுத் தான் அடுத்த சாப்பாடு”, எனக் கூறியபடியே பார்வதி முருகரிடம் கஞ்சியை நீட்டினாள்.

“அது பரவாயில்லை.. நீ உனக்கும் வேலாயியுக்கும் வைச்சுக் கொண்டு எங்களுக்கு ஊத்து”, என்றார் முருகர்.

கஞ்சியைக் குடித்து முடித்ததும் சுந்தரம் பரமசிவத்திடம் வந்து, “ஐயா.. நான் முன்னுக்குப் போய் ஒரு நல்ல இடமாய்ப் பாத்து புல்லைச் செதுக்கி ஆயத்தப்படுத்தட்டே?”, எனக் கேட்டான்.

“ஓ.. அதுவும் நல்லது தான்.. பள்ளமடுப் பக்கத்து புல்லு முள்ளு மாதிரி மேலிலை குத்தும்.. படுக்க ஏலாது”, என்றார்.

சுந்தரம் ஒரு மண்வெட்டியை எடுத்துத் தோளில் வைத்தவாறே,

“முத்தம்மா.. நீயும் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டுவாவன், போவம்” என அவளை அழைத்தான்.

அவள் தாயிடம், “அம்மா.. போகட்டே?, எனக் கேடடாள்.

“போ.. கவனம், சனத்துக்கை தம்பியைத் தவற விட்டிடாதை”, எனச் சொல்லி விடைகொடுத்தாள்.

தன் வாழ்க்கையிலேயே அவனைத் தவற விடுவதில்லை என முடிவு செய்திருந்த போது, சனத் திரளில் மட்டும் அவனைத் தவற விட முடியுமா? என நினைத்த போது மெல்ல அவள் முகத்தில் ஒரு புன்னகை பரவியது.

இருவரும் மக்களோடு மக்களாக நடக்கத் தொடங்கினர்.

மக்கள் வெள்ளம் மெல்ல, மெல்ல அசைந்து கொண்டிருந்த போதும்கூட அந்த வீதி திருக்கேதீஸ்வரம், தீர்த்தக் கரையை போல சன நெரிசரில் திணறிக்கொண்டிருந்தது. அதிலும் உழவு இயந்திரங்களும் மோட்டார் சைக்கிள்களும் கடக்கும்போது விலகி வழிவிடுகையில் ஒருவருடன் ஒருவர் இடிபட்டு நெரிபட வேண்டியேற்பட்டது.

எங்கே அவளைத் தவறவிட வேண்டி வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் அவளின் கையை சுந்தரம் இறுகப் பற்றிக் கொண்டான். அவள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. அந்த அசாதாரண சூழ் நிலையிலும் கூட அவனின் கைப்பிடியில் ஒரு சுகம் இருப்பதை உணர்ந்து கொண்டாள்.

அவர்கள் இருவரும் பாட்டா (செருப்பு) அணிந்திருந்த போதிலும் கூட மணல் நிறைந்த அறுத்தோடிகளைக் கடக்கும் போது, கால்கள் புதைந்து வெம்மை தகித்தன. மழை காலங்களில் உழவுயந்திரங்கள் புதைந்த தடங்கள் கால்களில் மோதி தடுக்கி விழுத்தப்பார்த்தன. அப்படி ஒரு இடத்தில் முத்தம்மா தவறாக காலை வைத்து விழவிருந்த போது சுந்தரம் அணைத்து இழுத்து எடுத்து காப்பாற்றிவிட்டான். நிலத்தில் விழுந்தால் பின்னால் வருபவர்கள் ஏறி மிதித்துவிடும் நிலை தான் அங்கு நிலவியது.

முத்தம்மாவுக்கு அவன் அணைத்த போது கூச்சத்தில் உடல் ஒருமுறை சில்லிட்ட போதும் அவள் ஒருவாறு சமாளித்தபடி,

“தடக்குப்பட்டுப் போனன்”, என்றாள்.

“பரவாயில்லை, பிடிச்சிட்டன் தானே, கவனமாய் காலை வை”, என்றுவிட்டு சுந்தரம் அவளின் கையை இறகப் பற்றியவாறே நடந்தான். அவள் தடக்குப்பட்டபோது அவளின், ‘பாட்டா’ தவறிவிட்டதை அவள் அவனிடம் சொல்லவில்லை. அப்படி சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. நகர்ந்து கொண்டிருக்கும் சன சமுத்திரத்தில் அதை எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.

சிறிது தூரம் எதுவுமே பேசாது நடந்த சுந்தரம், “பாலம்பிட்டியிலையிருந்து பெரியமடு, இப்ப பெரியமடுவிலையிருந்து பள்ளமடு, பிறகு பள்ளமடுவிலையிருந்து பாலியாறு இப்பிடியே அடுத்தடுத்து இடம்பெயர்ந்ததால் இது எங்கை போய் முடியும்?”, என அவளிடம் கேட்டான்.

அவள் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள், “எங்களுக்கு இடப்பெயர்வு எண்டாலே மரத்துப் போச்சு”

“என்ன மரத்துப்போச்சோ?”

“ஓ.. ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி மூண்டிலை எங்கடை குடும்பம் மலையகத்திலையிருந்து இடம்பெயர்ந்தது. அப்ப சிங்களக் காடையர் சித்தப்பாவை வெட்டிக்கொண்டுபோட்டாங்கள். பிறகு வவுனியாவில இருக்கேக்க நான் பிறந்தன். அங்கையிருந்து பிறகு இடம்பெயர்ந்து புவரசங்குளம் வந்தம். அடுத்த இடப்பெயர்விலை மடு வந்தம். மடுவிலை அண்ணாவைப் பறிகுடுத்தம். பிறகு தட்சினாமடு. அங்கை கிளைமோரிலை அண்ணான்ரை பிள்ளை செத்தது. இப்ப இது.. இப்பிடியே எங்கடை வாழ்க்கை சாவும் இடப்பெயர்வுமாய் போச்சுது”

சுந்தரம் திரும்பி அவளின் முகத்தைப் பார்த்தான். அவள் கண்கள் லேசாய் கலங்கியிருந்தன.

சுந்தரம் தன் கைப் பிடியை இறுக்கியவாறே, “இனி நெடுக இடம்பெயர முடியாது”,

“அப்ப…?”

“இடம் பெயராமல் இருக்க வழி தேட வேணும்”,

சுந்தரத்தின் குரலில் ஒரு உறுதி தொனித்தது. அவன் வார்த்தைகள் அவன் போராளியாக இணைவதற்கான ஒரு முன்னறிவித்தல் போலவே அவளுக்குத் தோன்றியது. அப்படி ஒரு நிலைமை வருமானால் அவனைத் தடுத்துவிட்டுத் தானே போகவேண்டும் என அவள் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.

எனினும் இருவரும் எதுவுமே பேசாமல் நடந்தனர். அவர்களின் கைகள் மட்டும் இறுகப் பிணைந்திருந்தன.

சிறு குழந்தைகள், முதியவர்கள் கூட ஒரு மாபெரும் அவலத்தின் சாட்சியங்களாக தள்ளாடி நடந்து கொண்டிருந்தனர். வெய்யில் தாங்க முடியாமல் ஒரு மூதாட்டி மயங்கிவிழுந்துவிட்டார். அவரைத் தூக்கிக் கொண்டுபோய் ஒரு நிழலில் படுத்தினர். யாரோ ஒருவர் கொண்டு வந்த நீரை அவரின் முகத்தில் தெளிக்க மெல்ல அவர் கண்விழித்தார். அவரால் பேச முடியவில்லை. அவர் குடிக்க நீர் தரும்படி சைகையால் கேட்டார். கிழவி நீரை வாங்கிக் குடித்துவிட்டு அப்படியே அந்த இடத்திலேயே படுத்துவிட்டது.

அந்தக் காட்சி முத்தம்மாவுக்கு தந்தை பெருமாளை நினைவுக்குக் கொண்டுவந்தது.பரமசிவத்தின் வண்டில் மட்டும் இல்லாவிடின் தன் தந்தையின் நிலையும் அப்படித்தான் இருந்திருக்கும் என அவள் எண்ணிக்கொண்டாள்.

ஒரு தாய் இடுப்பில் ஒரு குழந்தையுடன் நடக்க இன்னொரு பிள்ளை அவள் சேலையைப் பிடித்தவாறு நடந்து வந்தது. அந்தப் பிள்ளை வெய்யில் சூடு தாங்காமல் கதறி அழுதது.

“சனியன், கத்தாமல் வா”, என்றவாறே தாய் அதன் முதுகில் ஒரு அறை வைத்தாள். குழந்தை வெம்பியவாறே நடந்தது. அவளின் நெற்றியில் பொட்டோ கழுத்தில் மஞ்சள் கயிறோ இல்லாத நிலையில் அவள் கணவனை இழந்தவளாக இருக்கவேண்டுமென சுந்தரம் ஊகித்துக் கொண்டான்.

அவர்கள் இருவரும் பள்ளமடு வந்து சேர நேரம் பிற்பகல் மூன்று மணியைத் தாண்டிவிட்டது. களைப்பாற ஒரு மர நிழல் தேடிய போது அது சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொண்டனர். வீதிக் கரையில் வரண்டுபோய் நின்ற புவரச மரங்களின் கீழ் மக்கள் குவிந்துபோயிருந்தனர். பலர் அப்படி இடம் கிடைக்காத நிலையில் வெட்ட வெளியிலேயே குந்திவிட்டனர்.

சுந்தரம் நீண்ட தூரத்திற்குப் பார்வையை ஓட விட்ட போது எங்கும் மனிதத் தலைகளே தெரிந்தன. இரவு தங்குவதற்கு வெட்ட வெளியில் கூட ஒரு இடத்தை ஏற்பாடு செய்துவிட முடியாது போலவே அவனுக்குப்பட்டது.

ஏற்கனவே பள்ளமடுவில் பரப்புக்கடந்தான், ஆண்டாங்குளம், கறுக்காதீவு, அடம்பன் ஆகிய மக்களும் வந்து குவிந்துவிட்டனர். தள்ளாடி இராணுவம் அடம்பன் பகுதியால் முன்னேறுமானால் முழுப் போராளி அணிகளுமே சுற்றிவளைக்கப்படும் அபாயம் உண்டு. எனவே அடம்பன் மிக வலிமையாகவே பலப்படுத்தப்பட்டிருந்தது.

அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆலங்குளம் பள்ளமடு வீதியாலேயே இடம்பெயர்ந்தனர்.

அடம்பன் கள்ளியடி வீதியின் பாதுகாப்பு பல விதங்களிலும் பலப்படுத்தப்பட்டிருந்ததால் அவ் வீதியால் மக்கள் இடம்பெயர அனுமதிக்கப்படவில்லை.

எனவே வெட்ட வெளிகளெல்லாம் பள்ளமடுவில் மக்கள் குவிந்து போயிருந்தனர். அந் நிலையில் சுந்தரமும் முத்தம்மாவும் ஒரு இடம் தேடியலைந்து சோர்ந்தேவிட்டனர்.

பிரதான வீதியில் இடம் கிடைக்காது என்று திட்டவட்டமாகத் தெரிந்த நிலையில் விடத்தல் தீவு போகும் பாதையில் நடக்க ஆரம்பித்தனர்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*