leader

மாகாண சபைத் தேர்தலும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்!

பல வருடங்களாக நடத்தப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது போன்ற ஒரு தோற்றப்பாடு மஹிந்த அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வமாக தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக எவ்வித அறிவித்தலும் வெளியிடப்பட்டிராத போதிலும் பல்வேறு தரப்பினராலும் தேர்தல் தொடர்பான ஒரு வித வெப்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உட்பட்ட பல இனவெறி அமைப்புக்களாலும் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிகப்படாமல் தேர்தல் நடத்தப்படக் கூடாது எனப் பல எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பத்துக்கு மேற்பட்ட பிக்குகளின் அமைப்புக்கள் வடமாகாண சபைத் தேர்தலுக்கு எதிரான அமைப்பு என்ற பேரில் போராட்டங்களை நடத்தத் தயாராகி வருகின்றன.

அரசில் உள்ள இடது சாரிகள் உட்பட ஒரு சிலர் மாகாண சபைகளின் பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிக்கப்படக்கூடாது என மிக மெலிந்த தொனியில் குரல் கொடுத்துவருகின்றனர்.

எனினும் இரு வேறு எதிர்க்கருத்துக்களை வெளியிடும் அனைவரும் இலங்கை அரச அதிகாரத்தின் பங்காளிகள். இரு எதிரெதிரான கருத்தக்களும் ஒரே மூலஸ்தானத்திலிருந்து உருவாகி வெளிவந்து எதிர்த்திசையில் நின்று கூத்தாடுகின்றன.

இது ஒரு திட்டமிட்ட நாடகமாகும். ஒரு தரப்பு மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் தனிநாடு அமைப்பதற்கு அத்திவாரமாகிவிடும் எனவும், மறுதரப்பு காணி, பொலிஸ் அதிகாரம் நீக்கப்படக்கூடாது எனவும் வாதிடுகின்றன.

இதன் அடிப்படை நோக்கம் மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு எட்டப்பட முடியும் எனவும் அதைச் சில கடும் போக்கு வாதிகள் எதிர்க்கிறார்கள் எனவும் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச மட்டத்திலும் ஒரு கருத்தை நிலை நிறுத்துவதாகும்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் எவ்வகையிலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நியாயபூர்வமான தீர்வை முன்வைக்கவில்லை என்பதைத் தமிழ் மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்து வந்துள்ளனர். இதை முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தன் அனுபவத்தின் மூலம் அறிந்து வெளிப்படுத்தியிருந்தார். அவ்வாறே கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் ஒரு பொம்மையாக அடி பணிந்து நடந்து கொண்ட போதிலும் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. இன்று அவர் சேவலும் மயிலும் போற்றி என்ற அடிப்படையில் மஹிந்த காலில் ஜனாதிபதி ஆலோசகர் என்ற பெயரில் அமர்ந்துவிட்டார்.

இவை முதலமைச்சர்களின் பரிதாப அனுபவங்கள்!

இப்போ வடக்கு – கிழக்கு பிரிப்பு, 18 ஆவது திருத்தச் சட்டம், திவுனுகம சட்ட மூலம் என்பவற்றின் மூலம் மேலும் பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. எஞ்சிக் கிடக்கும் அதிகாரங்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநரின் ஒப்புதல் இன்றி நிறைவேற்றப்படமுடியாதவை.

இந்த நிலையில், மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் கூட இனப் பிரச்சினைத் தீர்வில் ஒரு சிறு நகர்வைக் கூட மேற்கொள்ள முடியாது என்பதைத் தமிழ் மக்கள் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளனர்.

ஆனால் இதில் ஏதோ இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கவே மாகாண சபைகளுக்கான பொலிஸ், காணி அதிகார சர்ச்சை உருவாக்கப்பட்டது. அதற்கு இந்தியாவும் 13வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக தன் கவலையைத் தெரிவித்து ஒத்தூதியுள்ளது. முன்பு வடக்கு கிழக்கு பிரிப்பு, 18வது திருத்தச் சட்டம், திவுனுகம சட்டமூலம் என்பன கொண்டுவரப்பட்டு 13வது திருத்த சட்டம் முடமாக்கப்பட்ட போது ஏற்படாத கவலை இப்போது இந்தியாவுக்கு வந்திருப்பது விந்தையல்லவா?, இலங்கை அரசின் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளை இந்தியா ஏதோ ஒரு விதத்தில் நியாயப்படுத்துவதும், இலங்கையைக் காப்பாற்ற பல மனித குல விரோத நடவடிக்கைகளுக்கு ஆலவட்டம் வீசுவதும் இந்தியாவுக்கு இதுதான் முதல் தடவையல்ல.

மாகாண சபைகளால் எவ்வித பயனுமில்லை என்றால் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் பங்குபெற வேண்டுமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாகப் பங்கு பெறத்தான் வேண்டும், அதிகாரத்தை முழுமையாகவும் உறுதியாகவும் கைப்பற்றவும் வேண்டும்.

அதற்கு இரு காரணங்களும் உண்டு.

ஒன்று – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளாவிடில் அரசின் அடி வருடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி, தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேலும் வலுப்படுத்த மாகாண சபைகளைப் பயன்படுத்த முடியும்.

இரண்டு – மாகாணசபைகளின் போலித்தன்மையை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அம்பலப்படுத்த மாகாண சபைகளையே பல்வேறு முனைகளில் பயன்படுத்த முடியும். அதற்கு உறுதியான, விட்டுக்கொடுக்காத, இலட்சியப் பற்றுள்ள, தலைமை அவசியம்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதும், அதன் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றுவதும் தவிர்க்கமுடியாத ஒரு தேவையாகும்.

எனினும் எவ்வித அதிகாரமுமன்றி, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அனுகூலமாகப் பயன்படுத்த முடியாத மாகாண சபையை எமது உரிமைப் போராட்டத்துக்கு சாதகமான முறையில் பயன்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்க முடியாது. அப்படிப் பயன்படுத்த முனையும் போது தொடுக்கப்படும் நெருக்கடிகளை உடைத்துக் கொண்டு முன் செல்வது ஒரு ஜீவ மரணப் போராட்டமாகவே அமையும்.

அதற்கு நேர்மையான, இலட்சிய உறுதி கொண்ட, அரசியல் சாணக்கியம் மிக்க, அரசியல் வியுகங்களை அமைத்து நீண்ட கால இலக்கை நோக்கி குறுகிய கால இலக்குகளை வகுத்து முன்னேறக் கூடிய ஆற்றல் கொண்ட ஒரு தலைமையும் அத் தலைமையுடன் தளம்பாமல் நின்று பிடிக்கக் கூடிய உறுப்பினர்களும் அமையவேண்டும்.

தமிழ் மக்களால் இது வரை நடத்தப்பட்ட ஜனநாயகப் போராட்டங்கள், ஆயுதப் போராட்டங்கள் என்பன தொடர்பான தெளிவான பார்வையும், வெற்றி தோல்விகளை தமிழ் மக்களின் நலன்கள் தொட்பான நிலைப்பாட்டில் நின்று விமர்சன ரீதியாக அணுகி அந்த அனுபவங்களை அறிவாகக் கொண்டு முன் செல்லும் வகையில் தலைமை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

திடீர் திடீரெனத் தோன்றும் தலைமைகளால் எமது உரிமைப் போராட்டம் நலிவடையக் கூடிய ஆபத்துத் தொடர்பாக மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

இவ்வகையான ஒரு தலைமையை மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் உருவாக்க முடியுமா என்பது இன்று கேள்விக்குரிய பிரச்சினையாகவே உள்ளது. ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டின் கீட், பரந்துபட்ட ஐக்கியத்தின் மூலம் ஒரு தலைமையை உருவாக்குவதை விடுத்து சில செயற்கையான தலைமைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த தலைமை என்ற பார்வையிலிருந்து பிறழ்ச்சியடைந்து ஒரு கட்சியோ அல்லது ஒரு சில கட்சிகளையோ தலைமைச் சக்தியாக முன்னிலைப்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது. இதற்கென பல முரண்பாடுகள் தோன்றியுள்ளமையும் வெளிவர ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக மாகாணசபைக்கான முதலமைச்சர்கள் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் பல கருத்து மோதல்கள் தோன்றியிருப்பதாகத் தெரியவருகிறது.

பொதுவாகவே தமிழரசுக்கட்சிக்கு காலம் காலமாக தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுபவர்களைப் புறமொதுக்கிவிட்டு, கனவான்களைத் தேடிப்பிடித்து தலைமையைக் கையளிக்கும் பொறுப்பு உள்ளது. 1965ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசில் பங்கு வகித்த போது முன் பின் தமிழரசுக்கட்சியின் தொண்டர்களே அறிந்திராத திருச்செல்வம் கி.யு.சி அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவரால் டட்லி செல்வா ஒப்பந்தத்தை நான்கரை வருடங்கள் ஆட்சியில் பங்கு வகித்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

வேறு எந்த வாழ்வாதார உதவியையும் கூட தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. கடைசியாக இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் கூட அறிந்திராத சுமந்திரன் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். அவரோ மஹிந்தராஜபக்ஷவுடன் கிரிக்கட் விளையாடி தன் வீரத்தை வெளிப்படுத்தினார். அது மட்டுமன்றி வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை ஒரு இன சுத்திகரிப்பு எனவும் அதற்காக தமிழ் மக்கள் வருத்தம் தெரிவிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது ஒரு முஸ்லிம் கூடக் கொல்லப்படவுமில்லை. காயப்படுத்தப்படவுமில்லை. அதை ஒரு இனச்சுத்திகரிப்பு எனச் சொல்லுமளவுக்கு அவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் குரலை ஒலித்துள்ளார். அப்படியானவர் பல நூறு தமிழ் மக்கள் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவற் படையினரால் பலி கொள்ளப்பட்ப்பட்டதற்காக முஸ்லிம் மக்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் என ஏன் கூறவில்லை.

இப்படியாக தொண்டர்கள் புறமொதுக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்படும் கனவான்களை தமிழரசுக்கட்சி தலைமையில் இருத்தியதால் சந்தித்த கசப்பான அனுபவங்கள் ஏராளம்.

மேலும் கனவான்களைச் சிம்மாசனம் ஏற்றுவதற்காக தமிழரசுக்கட்சியின் ஆரம்ப உறுப்பினர்களு்ம, விசுவாசமான தமிழின உணர்வாளர்களுமான ஊர்காவற்றுறை வி.நவரத்தினம், கிளிநொச்சி சிவசுந்தரம், மட்டுநகர் ராஜதுரை போன்றவர்களுக்கு நெருக்கடிகள் கொடுத்து அவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற வைத்தமையையும் நாம் மறந்துவிட முடியாது.

எனவே தமிழரசுக்கட்சி இப்படியான நரித்தந்திரங்களை கைவிட்டு, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கனவான்கள் அரசியலுக்குள் அமிழ்த்திவிடாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைமையளிக்கும் சக்தியாகப் புனரமைக்க வேண்டும். இந்தியாவோ, அந்நிய உளவு நிறுவனங்களோ எம்மை வழிநடத்துவுமளவிற்கு நாம் நிலை தாழ்ந்து போகக் கூடாது.

எனவே மாகாண சபைக்கான வேட்பாளர்கள், முதலமைச்சர் வேட்பாளர் போன்ற தெரிவுகள் என்பன, தமிழ் மக்களின் உறுதியின் சின்னமாக, ஐக்கியத்தின் சின்னமாக, உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் வலிமையின் சின்னமாக எமது மக்களின் உயிர்ப்பலி உட்பட்ட இழப்புக்களும் வீண் போகாத வகையில் உயர்வான தேசியத்தை நேசிப்பவர்களை மையப்படுத்தியதாக அமையவேண்டும்.

இது இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு! உயிர்க்கொடைகளால் வளர்த்த இலட்சிய நெருப்பு. இது வேறு எந்த ஒரு சக்தியின் நலனுக்காகவும் விலை போவதை எந்த ஒரு தமிழனும் அனுமதிக்கப்போவதில்லை.

தாயகத்தில் இருந்து தமிழ்லீடருக்காக புருஷோத்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*