leader

‘மே 18’ – மகாவம்சக் கொடூரத்தின் இரத்த சாட்சியம்!

வங்கக்கடலை வருடி வந்த உப்புக்காற்று முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்ட போது குருதி வாடையிலும் கந்தக நெடியிலும் சிக்கித் திக்கித் திணறுகிறது. ஓங்கியடித்த ஆழி நீர்ப்பரப்பும் தன் அலைக் கரங்களை ஒடுக்கிவிட்டு விம்மி விம்மித் தணிகிறது.

பார்க்குமிடமெங்கும் பிணக்குவியல்கள்: காணுமிடமெங்கும் குறை உயிரில் முனகும் ஜீவன்கள்; எரிந்து கருகிய கூடாரங்கள்; இடிந்து சிதைந்த குடியிருப்புக்கள்; சிதறிக் கிடக்கும் ஆடைகள்; பாவனைப் பொருட்கள்.

ஒரு புறம் இறந்து கிடக்கும் உடல்கள் மீதும், இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேலும் இரக்கமின்றி ஏறி ஓடும் இராணுவத்தினரின் உழவு இயந்திரங்கள்; மறுபுறம் உயிர் ஒன்றை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு நடக்கவும் தென்பின்றி தடுமாறிச் சாரை சாரையாக நகரும் மக்கள் கூட்டம்!

இறந்தவர்களின் உறவுகளைப் புதைப்பதற்கும் வழியில்லை; விழுந்து கதறி ஒப்பாரி வைக்கவும் நேரமில்லை!

முதியோர், குழந்தைகள், பெண்கள் உட்பட அத்தனை மனித ஜீவன்களும் வெறும் ஜடங்களாக்கப்பட்டு எங்கோ நகர்த்தப்படுகின்றன. துப்பாக்கி வேலிகளின் நடுவில் திசை தெரியாப் பயணம்!

“அவர்கள் மும் மணிகளின் மேன்மையை ஏற்றுக் கொள்ளாதவர்கள்! அவர்கள் கொல்லப்படுவதற்கே உரித்துடையவர்கள்”

பிட்சாபாத்திரம் ஏந்திய மக்கள் அங்கிகளால் வரையப்பட்ட மகாவம்சம் சொல்லும் தத்துவம் அது.

உணவு கொள்ள ஏற்றப்பட்ட அந்த திருவோட்டுக்குள்ளிருந்து வெளிக் கிளம்பிய அந்தத் தத்துவம் தன் சுயரூபத்துடன் வெறியாட்டம் ஆடியதன் சாட்சியமாக.

பெரும் பிணக்குவியல்கள்; குருதிக் குளங்கள்; இடிபாடுகள்; எரிந்து சிதைந்த எச்சங்கள்; நடைப் பிணங்களாக நகரும் மனித ஜீவன்கள்.

ஒரு சில நாட்களுக்குள் நாற்பதினாயிரம் உயிர்களைப் பலி கொண்டு, பல்லாயிரம் பேரை ஊனமுற்றவர்களாக்கி, இலட்சக்கணக்கானோரை ஏதிலிகளாக்கி எக்காளமிட்டுச் சிரிக்கின்றது மகாவம்ச மகாத்மியம்.

அக்கொலை வெறியாட்டத்தின் செஞ்சால்வை நாயகன் மஹிந்த ராஜபக்ஷ பெயர் சூட்டுகிறார்.

மனிதாபிமான நடவடிக்கை!

அகராதிகள் அர்த்தங்களை இழந்து தடுமாறுகின்றன.

வட பகுதியெங்கும் இறுதிக் கிரிகைகள் இல்லாத ஒப்பாரி வீடுகள்; கொழும்பு காலிமுகத்திடலில் வெற்றிவிழா!

தமிழர்களின் இரத்தமும் கண்ணீரும் வெற்றி விழாவாகி தெற்கை மகிழ்ச்சிக் கடலில் குளிப்பாட்டுகின்றன.

தனது நாட்டு மக்களைத் தானே கொன்று குவித்த நாட்டுத் தலைவனாகக் கொடியேற்றி தனது வெற்றியை உலகுக்குப் பறைசாற்றுகிறார் மஹிந்த ராஜபக்ஷ.

முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டதாக அவர் துள்ளியடிக்கிறார்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் விடுதலையை போராட்டத்தின் ஒரு கட்டம் முடிந்துவிட்டது.

ஆனால் – அது முடிவல்ல!

அது ஒரு வடிவத்தின் முடிவு!

எனினும், அது வெடிக்கும்! இன்னொரு வடிவத்தில் வெடிக்கும்! இலங்கையில் எல்லைக்குள் நடந்த போராட்டம் எல்லைகளை விரிவாக்கி இன்னும் அகன்று வெடிக்கும்!

முன்பைவிடப் பன்மடங்கு பலத்துடன் மூசி எழும்!

1905இல் ரஷ்யாவின் செனற். பீட்டஸ்பேர்க்கில் வெடித்த பெரும் புரட்சி தோற்கடிக்கப்பட்டது. அந்தத் தோல்வி 1917இல் பெரும் வெற்றியாகி சோவியத் ஒன்றியத்தினை விடுதலை செய்தது.

1927 ல் சங்காயில் இடம்பெற்ற தொழிலாளர் புரட்சி பேரழிவைச் சந்தித்தது. அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் 1949இல் சீன தேசத்தை விடுவித்தது.

கியுபாவில் ஹவானா இராணுவ முகாம் தாக்குதல் தோல்வியடைந்தது மட்டுமின்றி பிடல் காஸ்ரோவை சிறைக்கே அனுப்பியது. அதே கஸ்ரோவின் தலைமையில் கியுபா 1952இல் விடுதலை பெற்றது.

எனவே தோல்விகள் எல்லாம் தோல்விகளல்ல! அவை பாடங்களைக் கற்றுத் தரும் பல்கலைக்கழகங்கள்!

தோல்விகள் அனுபவங்களைப் பிரசவிக்கின்றன. அனுபவங்கள் அலசப்படும் பொது அவை அறிவாகின்றன. அறிவு ஆயுதமாகும் போது அற்புதங்கள் உருவாகின்றன.

தோல்விகள் தூர ஓடுகின்றன; வெற்றிகள் வீடு தேடி வருகின்றன.

முள்ளிவாய்க்கால் இழப்புக்கள் பேரிழப்புக்கள் தான்! ஈடு செய்ய முடியாத இழப்புக்கள் தான்!

ஆனால், அவை ஒப்பாரிகளுடன் ஓய்ந்துவிடுவதில்லை!

ஆண்டுத் துவஷங்களுடன் அடங்கி விடுவதில்லை; நினைவு நிகழ்வுகளுடன் நீர்த்துப் போய்விடுவதுமில்லை.

அவை விடுதலைக்குக் கொடுக்கப்பட்ட விலைகள்.

எங்கள் விடுதலை வேட்கை என்ற அணையாத தீபத்துக்கு என்றென்றும் நெய் ஊற்றி சுடர் விட்டுப் பிரகாசிக்கச் செய்பவை. எங்கள் ஒவ்வொரு இரத்த அணுக்களிலும் வீரியம் ஊட்டி வீரம் செறிப்பவை.

முள்ளிவாய்க்காலில் விலையாகிப் போய்விட்ட எங்கள் உயிர்ப்புக்களே,
நாங்கள் உங்களை வணங்குகிறோம்!

அந்த வணக்கத்தின் பேரழுச்சியில் மகாவம்ச மாயை பற்றியெரியும்! விடுதலைத் தீ விளாசி எரியும்!

அன்று இலங்கையில் எழுந்த தீ!

இன்று உலகெங்கும் பற்றியி எரிகிறது! உங்கள் நினைவுகளுடன்!

 – தாயகத்தில் இருந்து தமிழ்லீடருக்காக புருஷோத்மன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*