leader

மே 18இல் உறுதி கொள்வோம்!

மே 18, உலகத் தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள். தமிழினம் காலங்காலமாக சந்தித்துவந்த அவலங்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல அமைந்த மிகப் பெரிய இன அழிப்பின் அடையாளமான நாள் அது.

உலக அரங்கில் நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரிய சாதனைகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஒரு இனத்தின் விடுதலைக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு அர்ப்பணிப்புக்கள் எமது தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. மிக நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் மக்களின் முழுமையான ஆதரவு பலத்துடன் முப்பது ஆண்டுகளைக் கடந்தும் தனது விடுதலைப் பயணத்தைத் தொடர்ந்தது.

மே 18, போர் ஓய்வு நிலையினை அடைந்த போதிலும் அது நிகழ்த்திச் சென்ற தாக்கம் இன்றுவரையில் அசைக்கமுடியாத அளவிற்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் கூட்டுமுயற்சியாக தமிழின விடுதலைப் போரை அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இன்று சர்வதேச அரங்கில் ஈழத்தமிழினத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்ற நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்துதான் எமது விடுதலைப் போராட்ட அழிப்பிற்கு பிரதான சூத்திரதாரிகளாக விளங்கியிருந்தன என்பதை வரலாறு மறந்துவிடப்போவதில்லை.

தமிழினத்தின் மீதான தொடர் அடக்குமுறையின் தொடராக தமிழ்த் தலைமைகள் ஜனநாயக வழியில் நீதி கேட்டு முன்னெடுத்த போராட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிப் போனதன் காரணமாகவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுத வழியில் தோற்றம் பெற்றது. போராட்டம் தொடங்கிய காலந்தொட்டு படி நிலை படி நிலையாக வளர்ச்சி கண்டு இறுதியில் முப்படைகளையும் கொண்ட மரபுவழிப் போராட்ட அமைப்பாக மிகப் பாரிய வளர்ச்சி கண்டு நிமிர்ந்து நின்றது.

கால நீட்சியில் காட்டிக்கொடுப்புக்கள், கழுத்தறுப்புக்கள் என்பவற்றின் துணையுடன் அளப்பெரிய தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் எல்லாமும் வீண்போயினவா? என்று ஏங்கும் வகையில் விடுதலைப் போராட்டம் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டிருக்கின்றது.

நாற்பதாயிரத்தை அண்மித்த மாவீரர்களின் உயிர்கொடைகளாலும் பல்லாயிரம் போராளிகளின் அர்ப்பணிப்புக்கள் நிறைந்த தியாகங்களாலும் தேசவிடுதலைப் போராட்டம் நிகழத்திய தாக்கம் தமிழினத்திற்கான விடுதலைத் தேவையை சர்வதேச அரங்கில் உணர்த்தியிருக்கின்றது.
ஆனாலும் கூட, இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்கள் பேரினவாத சக்திகளால் பறிக்கப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்பிலான கரிசனையை காட்டுவதற்கோ, இழக்கப்பட்ட உயிர்விலைகள் தொடர்பில் கேள்வி எழுப்பவோ சர்வதேசம் துணிந்து முன்வரவில்லை, ஆரோக்கியமான தாக்கம் எதனையும் செலுத்தவில்லை என்ற கவலைக்குரிய விடயம் இன்றுவரை தொடர்வது வேதனை தரும் விடயமாகும்.

போரை முடிவுக்கொண்டுவரவேண்டும் என்று முழு மூச்சுடன் செயற்பட்ட இந்தியாவும் சர்வதேச சக்திகளும் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றமை தொடர்பில் எந்தவித கரிசனையையும் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையானவிடயமாகும். இன்று, பேரினவாத அரசுக்கு எதிராக உலகம் திரும்பியிருப்பதாக தோற்றங்காட்டப்படும் செயற்பாடுகள் கூட முற்றிலும் சுயநலம் சார்ந்தவையே என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை உடன்பட மறுத்து முரண்டுபிடிப்பதனை அடுத்து தமக்குச் சாதகமான நிலைப்பாட்டினை இலங்கை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று கருதுவதன் வெளிப்பாடே இலங்கை அரசின் மீதான அண்மைய அழுத்தங்களுக்கு காரணமாகும்.

மேலைத்தேய நாடுகள் இலங்கை மீது படையெடுத்த காலத்தில் இருந்து இன்றுவரையில் தமிழினத்தின் மீதான அடக்குமுறை தொடர்ந்தே வந்திருக்கின்றது. தொடர்ந்தும் அடிமை வாழ்வு, அவல வாழ்வு என்று நீண்ட தொடர் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான ஒரு அரிய நிகழ்வாகவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினை தமிழ் மக்கள் கருதினார்கள். அதன் விளைவாகவே தேசிய விடுதலைப் போராடத்திற்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு மக்கள் முன்வந்தார்கள்.

தமிழர் தாயகம் மீதான ஒவ்வொரு கட்ட நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போதும் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் ஒவ்வொன்றிலும் அனைத்தையும் இழந்தபோதிலும் கொள்கைப் பற்றுடன் போராளிகள் நிலை கொண்டிருந்த பகுதிகளை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இடப்பெயர்வுகள் ஒவ்வொன்றின் போதும் இழக்கமுடியாத பாரிய இழப்புக்களை மக்கள் சந்தித்தார்கள். ஆனாலும் போராட்டத்திற்கான ஆதரவு நிலையில் அவர்கள் விலகிக்கொள்ளவேயில்லை. ஈவிரக்கமற்ற அரச இயந்திரம் முடிந்தவரையில் தமிழ் மக்களின் குரல்வளையை நசுக்கத் தவறவில்லை. பொருளாதாரத் தடை, மருந்துத் தடை, மக்களை இலக்குவைத்து தாக்குதல் என நீண்ட மிக மோசமான நெருக்கடிகளை எல்லாம் எமது மக்கள் எதிர்கொண்டார்கள்.

காலாகாலமாக ஆட்சி பீடம் ஏறிய ஒவ்வொரு இனவாத அரசாங்கங்களும் தமிழ் மக்களை தமது நாட்டு மக்களாக கருதாமல், எதிரிகளாகக் கருதி அவர்களை கொன்று குவிப்பத்தில் தீவிரம் காட்டியது. பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பகிரங்கமாக சர்வதேச சக்திகளும் உதவி புரிந்தன. முள்ளிவாய்க்கால் வரையில் நம்பிக்கையுடன் நகர்ந்த தமிழ் மக்களுக்கு முடிந்தளவிற்கு பாரிய அவலத்தையே அள்ளிவீச்சியது பேரினவாதம். கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். மனித குலம் சந்திகக் கூடாத சந்திக்க முடியாத பேரவலம் வன்னியில் நிகழ்ந்தேறியது.  மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டமையை இன்றுவரையில் வெற்றிவிழாக் கொண்டாடி மகிழும் நிலையில் தான் சிங்களப் பேரினவாதிகளின் மன நிலை காணப்படுகின்றது.

தாயகத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிப்புக்கள் விடுக்கப்பட்டாலும், வீதிகளை புனரமைத்து வர்ணங்கள் தீட்டப்பட்டாலும் மக்களின் இழந்து போன வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கான எந்தவிதமான ஆரோக்கியமான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் என்ற பத்திரிகைச் செய்திகள் நாளுக்கு நாள் ஊடகங்களை நிறைத்துவருகின்ற போதிலும் எதுவும் ஆரோக்கியமானதாக இல்லை என்பதே கண்கூடான விடயமாகும். இந்த நிலையில் அனைத்தையும் இழந்து வறுமைச் சகதிக்குள் வாழும் எமது மக்களின் வாழ்வியலை மேம்படுத்த என்ன என்ன வழிகள் உள்ளனவோ அவற்றை இனங்கண்டு அவற்றின் ஊடாக முடிந்தளவு காரியமாற்ற எமது உறவுகள் முன்வரவேண்டும்.

நிற்க,
முள்ளிவாய்க்கால் வரையில் தொடர்ந்த தமிழ்மக்களின் ஒருமித்த பலம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிதைக்கப்பட்டிருக்கின்றது என்றே கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தாயகத்தில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு மக்கள் வாய்திறந்து சுதந்திரமாக கருத்து வெளியிடக் கூட முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். புலத்தில் இனத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுத்துவந்த தமிழ் மக்களுக்கு தலைமை தாங்குகின்றவர்களுக்கு இடையில் வலிந்து திணிக்கப்பட்ட பிணக்குகள் தமிழ் மக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை நிலவுவதாக தோற்றங்காட்ட வைக்கப்பட்டிருக்கின்றது.

புலத்தில் உள்ள தமிழ் மக்களின் சக்திக்கு அஞ்சிய பேரினவாதிகளின் திட்டமிட்ட சதிநடவடிக்கையின் தாக்கமும் புலத்தில் பிரிவினைக்கு சில காரணங்களாகவும் அமைந்திருக்கின்றது. எமது தாங்கு சக்திகள் சிதறடிக்கப்பட்ட நிலையில் எமது இனம் ஒற்றுமையாக இருந்து சாதிக்கவேண்டிய ஒரு இக்கட்டான நெருக்கடியான நிலையில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம். இனிவரும் காலங்களில் நாங்கள் முன்னெடுக்கப்போகின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளும் தான் இழக்கப்பட்ட உயிர்விலைகளுக்கான அறுவடையினைப் பெற்றுத்தரப்போகின்றன.

ஒருமித்த பலம் ஒற்றுமை மட்டுமே, ஒருமித்த பலத்தின் மூலமே சர்வதேசத்தின் கதவுகளை நாங்கள் வலுவாகத் தட்டமுடியும். வன்னியில் நிகழ்ந்தேறிய மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கையின் போது இழந்த பல்லாயிரம் உயிர்கள், அவயவங்களை இழந்த பல்லாயிரம் பேரின் இரத்தங்கள், உறவுகளைத் தொலைத்த பல்லாயிரம் உறவுகளின் கண்ணீர்கள், பல கோடி பெறுமதியான சொத்துக்கள் எல்லாவற்றுக்கும் ஒரு பதிலை காலம் வழங்கியே ஆகவேண்டும். எங்கள் உரிமைகளை நாங்கள் வென்றெடுக்க தனித்தனியாக நின்று எதனையும் சாதித்துவிட முடியாது. முடிந்தவரையில் சேர்ந்து நின்று குரல் கொடுப்போம்.. எங்கள் பலத்தினை மீண்டும் நிலை நாட்டுவோம்.. இழந்துவிட்ட உரிமைகளை மீண்டும் பெற்று நிர்ப்போம்..

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*