mahinda_sampanthan1

மஹிந்த சொல்லே மந்திரம்; தடு(டம்)மாறுகிறது கூட்டமைப்பு!

கடந்த 60 ஆண்டுகளாக பல்வேறு பரிமாணங்களுடாக வளர்ச்சி பெற்றுவந்த தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆயுத வடிவெடுத்து உலகம் வியக்கும் வண்ணம் உச்ச கட்டத்தை எட்டி நின்றது. அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடியலை நோக்கிய வீரமிகு தலைமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் திகழ்ந்தனர்.

எனினும் தேசிய, சர்வதேச சக்திகள் காரணமாக தமிழ் மக்களின் வலிமை மிக்க ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வைத்து தோற்கடிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைப் போராட்டத்தைக் கைவிட்டுவிடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தலைமை சக்தியாக ஏற்று ஜனநாயக வழியில் உரிமைப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இன்று தமிழ் மக்களால் நம்பிக்கைக்குரிய ஒரே தலைமையாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை எவரும் மறந்துவிட முடியாது. இலங்கை அரசாங்கமும், சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டே ஒவ்வொரு நகர்வுகளும் மேற்கொண்டு வருகின்றன. அதாவது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தவிர்க்கமுடியாத சக்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் என்பதில் நாம் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு அல்ல. ஜனநாயக நடைமுறையில் நாடாளுமன்ற பலம் என்பது ஒரு முக்கிய அம்சமாகும். அதுவே ஜனநாயக வழிமுறையில் மக்கள் அங்கீகாரத்தின் ஒரு காத்திரமான வெளிப்பாடுமாகும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் அமைப்பாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவது மிக மிக அவசியமான தேவையாகும்.

ஆனால் போர் முடிந்து 4 வருடங்களாகும் நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யவில்லை. தமிழரசுக்கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட்டு அது வெற்றி பெற்றது.

ஆனால் மக்கள் தமிழரசுக்கட்சிக்கோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கோ, ரெலோவுக்கோ வாக்களிக்கவில்லை. அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்தனர்.

ஆனால் தமிழ் புத்திஜீவிகள் உட்படப் பல்வேறு தமிழ் உணர்வாளரக்ளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும்படி விடுக்கப்படும் அழுத்தங்கள் பொருட்படுத்தப்படாமலேயே விடப்படுகின்றன. காலத்துக்கு காலம் வெவ்வேறு சாட்டுப்போக்குகள் சொல்லப்பட்டுவருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்றதால் இந்திய, இலங்கை அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவாக விரும்பப்படமாட்டாது என்ற ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் தலைமைச் சக்தியைத் தீர்மானிப்பது தமிழ் மக்களா அல்லது இலங்கை அரசும் இந்தியாவுமா என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டியுள்ளது. இலங்கை, இந்திய அரசுகளைத் திருப்திப் படுத்தும் வகையில் நாம் செயற்பட்டால் அது உரிமைப் போராட்டமா அல்லது நிபந்தனையற்ற சரணடைவா என்பதுதான் கேள்வி.

உரிமைகளை இழந்தவர்களும் இழந்து கொண்டிருப்பவர்களும் தமிழ் மக்கள் தான். தமிழ் மக்களின் தலைமையைத் தமிழ் மக்கள் மட்டுமே தீர்மானிக்கமுடியும் என்பதை ஆணித்தனமாகச் சொல்லிவைக்க விரும்புகிறோம்.

அண்மையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையைச் சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தரப்பினர், முன்னாள் ஆயுதப் போராளிகளும் கூட்டமைப்பில் அங்கம் பெறுவதால் அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படுவதை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச விரும்பமாட்டார் என்பதால் கூட்டமைப்பினை கட்சியாகப் பதிவு செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜனாபதி தமிழ் மக்களுக்கு ஒரு சிறு உரிமை வழங்கப்படுவதைக் கூட விரும்பமாட்டார். அதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்போகிறதா?,

முன்னாள் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களுடன் பேசுவதை ஜனாதிபதி விரும்பமாட்டார் என்றால் மஹிந்த அரசு என்ன அடிப்படையில் விடுதலைப்புலிகளுடன் பேசியது?, என்ன அடிப்படையில் ஜே.வி.பியை தனது அரசில் ஒரு அங்கமாக இணைத்திருந்தது?

ஆயுதக் குழுவான ஐரிஷ் விடுதலை இராணுவத்துடன் பேச்சு நடத்தித்தான் அயர்லாந்து விடுதலை பெற்றது. ஆயுதக் குழுவான பாலஸ்தீன விடுதலை முன்னணியுடன் பேச்சுக்களை நடத்தித்தான் பாலஸ்தீன சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. கொசோவா விடுதலை முன்னணியுடன் பேச்சுக்களை நடத்தித்தான் கொசோவா தனிநாடாகியது.

இவையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சிலருக்குத் தெரியாமல் போனதேன்?

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுக் கூட்டத்தில் உரையாற்றிய சம்பந்தன் அவர்கள், தந்தை செல்வா ஆயுதப் போராட்டத்தை என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை என மீண்டும் மீண்டும் உரத்த குரலில் முழங்கினார்.

ஏன் அவரால் அந்த இடத்தில் அப்படியான ஒரு கருத்து அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது என்பதுதான் கேள்வி. முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் அங்கு தமிழ் மக்கள் மத்தியில் ஐக்கியம் கட்டிவளர்க்கப்பட வேண்டுமெனத் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதற்கான பதிலாகத் தான் சம்பந்தர் மேற்படி கருத்தை வெளியிட்டாரா? என்ற சந்தேகம் எழுகிறது. அதாவது முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் தான் ஐக்கியப்படப்போவதில்லை எனத் தெரிவிப்பதற்காகவே தந்தை செல்வா ஆயுதப் போராட்டத்தை ஏற்கவில்லை எனத் தெரிவித்தாரா என எண்ணத் தோன்றுகிறது.

ஆயுதப் போராட்டம் வானில் உருவாகி மழையில் கரைந்து மண்ணில் விழுந்ததல்ல. அல்லது சில இரத்தவெறி பிடித்த மனி நோயாளிகளால் உருவாக்கப்பட்டதுமல்ல.

அஹிம்சைப் போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்டபோது, தமிழ் இளைஞர்கள் வீடுவீடாக வேட்டையாடப்பட்டபோது, இனக்கலவரங்களால் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டபோது எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆயுதப் போராட்டத்தினை தமிழ் இளைஞர்களின் கைகளில் ஒப்படைத்தது யார் என்பதை சம்பந்தன் அவர்கள் மறந்திருந்தாலும் வரலாறு மறந்திருப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை.

ஒப்பற்ற அர்ப்பணிப்புக்களுடனும் உயிர்த்தியாகங்களுடனும் இலட்சிய உறுதியுடனும் நடத்தப்பட்ட எமது ஆயுதப் போராட்டத்தையோ ஆயுதப் போராளிகளையோ கொச்சைப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. ஆயுதப் போராட்டம் என்பது ஜனாதிபதியிடம் பின்கதவால் சென்று பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் விவகாரமுமல்ல. அது எடுத்துக்கொண்ட இலட்சியத்துக்காக உயிர் உட்பட எதையும் இழக்கத் தயாரான புனித வேள்வி.

ஆயுதப் போராட்டத்தை இழிவுபடுத்தும் எவரும் எமது மாவீரரை அவமதிக்கும் கீழ்த்தரமான குற்றவாளிகள் எனவே நாம் கருதுகிறோம்.

கிளிநொச்சிக் கூட்டத்தில் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தாம் கூட்டமைப்பின் ஐக்கியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், பிழையானவர்கள் கையில் தலைமை போய்விடும் என்பதற்காகவே அதை பதிவு செய்யத் தயங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அப்படியானால் பிழையானவர்களை ஏன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் வைத்திருக்கிறீர்கள். அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டியது தானே?

தமிழ் புத்திஜீவிகளைப் போலவே ஒட்டுமொத்தமான தமிழ் மக்களும் தமிழர்கள் ஒரே அணியில் நிற்கவேண்டுமென்றே விரும்புகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி வெளியே நிற்கும் தமிழ் உணர்வாளர்களும் கூட ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒரு பொதுக் கொள்கையின் அடிப்படையில் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாகப் பதிவு செய்யப்படவேண்டும்.

இது வெறும் தேர்தல் தொகுதி பங்கீட்டுப் பிரச்சினையல்ல. தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை அவர்களின் அடையாளத்துக்கான பிரச்சினை. இவ்வாறான ஒரு ஐக்கியத்தை ஏற்க மறுக்கும் எவரும் தனிமைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களால் புறக்கணிக்கப்படுவது நிச்சயம்.

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*