bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 24

சிறப்புத்தளபதி திடீரென மயங்கி விழுந்துவிட்டாரெனவும், பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் நினைவு திரும்பவில்லையெனவும், அவரை அவசரமாக அம்புலன்சில் கிளிநொச்சியில் இயங்கும் பிரதான மருத்துவப் பிரிவு முகாமிற்குக் கொண்டு சென்றுவிட்டனர் எனவும் சிவம் அறிந்த போது அதிர்ந்தே போய்விட்டான். அவன் அப்படியான ஒரு நிலைமை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்திய போதும் அவர் அதைப் பொருட்படுத்துவதில்லை. அவர் நித்திரை கொள்வதை அவன் என்றுமே கண்டதில்லை. நோய்த் தாக்கம் அதிகமாகும் போது கூட அதைப் பொருட்படுத்தாமல் பணியாற்றிக் கொண்டேயிருப்பார்.

சாப்பிடும் போது கூட வரைபடத்தை வைத்து ஏதாவது அடையாளமிட்டவாறோ அல்லது வோக்கியில் ஏதாவது தொடர்பு எடுத்துக் கொண்டோ தான் உணவு உட்கொள்வார். ஒவ்வொரு காவலரணிலும் எந்த எந்தப் போராளிகள் நிற்கின்றனர் என்பதும் எது எதிரியின் நகர்வுக்கு சாதகமான இடம் என்பன போன்ற விடயங்களும் அவர் கண் முன் படமாக விரிந்திருக்கும்.

வேட்டுச் சத்தங்களையும் குண்டோசைகளையும் வைத்துக் கொண்டு நிலைமைகளைக் கணக்கிட்டு அணிகளுக்கு கட்டளை வழங்கும் அவரின் ஆற்றலைக் கண்டு சிவம் பலமுறை ஆச்சரியப்பட்டதுண்டு.

குடாரப்பு மாபெரும் தரையிறக்கத்தை அடுத்து இராணுவக் காவல் வரிசையை உடைத்து நாற்புறமும் இராணுவம் சூழ்ந்திருக்க முப்பது நாட்கள் நடுவில் நின்று களத்தை வழிநடத்திய வீரமும் அர்ப்பணிப்பும் நிறைந்த போராட்டத்தின் போது அவன் அவரின் அருகில் நின்றே களமாடியிருக்கிறான். அவர் போராளிகளுடன் தானும் ஒரு போராளியாக களத்தில் இறங்கிவிடுவார். களத்தில் பின்னடைவு ஏற்படும் போது மின்னல் வேகத்தில் திட்டங்களை மாற்றி வெற்றியை நோக்கி நகர்த்தத் தொடங்கி அச் சந்தர்ப்பத்தில் பல சண்டைகள் கைகலப்பு எனச் சொல்லுமளவுக்கு மிகவும் நெருக்கமாகவே நடந்தன.

அவற்றை உடைத்து எதிரியைத் திணறடிப்பதில் அவரின் கட்டளைகள் மந்திரசக்தி கொண்டவை போன்றே விளங்கும். ஒரு சமயம் அவரை இன்னும் பத்து நிமிடங்களில் பிடித்துவிடுவோம் அல்லது கொன்றுவிடுவோம் எனப் படையினர் தங்கள் தலைமையகத்துக்கு செய்தி அனுப்புமளவுக்கு இவரை நெருங்கிவிட்டனர். ஆனால் பத்து நிமிடங்களில் தங்களில் பலரைப் பலி கொடுத்துவிட்டு பின்வாங்கி ஓடியதுதான் அவர்களின் சாதனையாக முடிந்தது. ஆனையிறவைக் கைப்பற்றுவதில் பிரதான பங்கை வகித்தது அந்தத் தரையிறக்கமும் அந்த முப்பது நாள் மரணப் பொறிக்குள் நின்று நடத்திய சண்டையும் தான் என்பதைச் சிவம் ஒரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டான்.

அவன் அவரின் மேல் எல்லையற்ற அன்பும் மரியாதையும் வைத்திருந்த போதிலும் அவர் தனது உடல் நிலை தொடர்பாக அக்கறைப்படாமை அவனுக்குள் கோபத்தை ஏற்படுத்தியது.

அவன் ஏதோ ஒரு இனம்புரியாத சோர்வுடன் தளபதியின் இடத்திற்குப் போனான்.

ஏதோ எழுதிக் கொண்டிருந்த அவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“வாங்கோ! சிவம்” என்றார்.

“சிறப்புத் தளபதிக்கு…” என ஆரம்பித்துவிட்டு அவன் இடைநிறுத்தினான்.

“பிரச்சினையில்லை.. மயக்கம் தெளிஞ்சிட்டுதாம்.. எண்டாலும் அவசர சிகிச்சைப் பிரிவிலை தான் வைச்சிருக்கினமாம்”

சிவம் ஒரு நிம்மதிப் பெருமூச்சைவிட்டான்.

“ஏதோ.. அவர் கெதியாய் வந்திட்டால் நல்லது!” என்றான் சிவம்.

அதைக் கேட்டதும் அவரின் முகம் சற்று மாறியது. பின்பு அவர், “அது சரிவராது போலை கிடக்குது”, என்றார்.

சிவம் திடுக்குற்றவனாக, “ஏனன்ணை?,” எனக் கேட்டான்.

“நாளைக்கு வேறை ஒரு சிறப்புத்தளபதி பொறுப்பேற்க வாறார்!”

“அது பிரச்சினையில்லை.. அவருக்கு சுகம் வந்தால் சரி”

“அதைப் பற்றி நாங்கள் யோசிக்கவேண்டியதில்லை, அவரின்ரை தன்னம்பிக்கையே அவர சுகப்படுத்திவிடும்”, என்றார் தளபதி உறுதியான வார்த்தைகளில்.

அன்றிரவு வவுனியாவிலிருந்து பெருந்தொகையான படையினர் இரணை இலுப்பையை நோக்கி கொண்டுவந்து குவிக்கப்படுவதாகவும் அவர்கள் ஒரு நகர்வு முயற்சியை மேற்கொள்ளக் கூடும் எனவும் இராணுவம் கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து ‘வேவு’ தகவல் கிடைத்தது.

சிறப்புத் தளபதி இல்லாத நிலையில் பகுதித் தளபதியே பொறுப்பேற்று சண்டையை நடத்தவேண்டியிருந்தது. தகவல் கிடைத்ததுமே ஒரு போராளியை அனுப்பி சிவத்தை அழைப்பித்தார் அவர்.

இருவரும் அது பற்றி ஆலோசனை நடத்தினர்.

படையினர் முன்னேறக் கூடிய இருபாதைகள் இருந்தன.

ஒன்று சின்னத்தம்பனை ஊடாக பெரிய தம்பனை நோக்கி நகர்வது. மற்றையது வலையன்கட்டு ஊடாக முள்ளிக்குளம் நோக்கிவருவது. எப்படி வருவார்கள் என்பதைப்பற்றி ‘வேவு’ தகவல் பெறமுடியாமலிருந்தது. எனவே இரு பகுதிகளையும் கண்காணிப்பது என முடிவு செய்தனர். இரு முனைகளிலும் சண்டையை மேற்கொள்ள ஆளணி போதாத நிலையிலும் வேறு வழியின்றி போரை எதிர்கொள்ள முடிவு செய்தனர்.

மலையவனின் தலைமையில் ஒரு அணியை எப்பக்கமும் நகரும் நிலையில் தயார்ப்படுத்தி வைத்திருந்தனர்.

அதிகாலை நான்கு மணியளவில் எறிகணை வீச்சு ஆரம்பமாகியது.

படையினர் தம்பனைப் பக்கமாக ஒரு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போன்று சண்டை உக்கிரமாக இருக்கவில்லை.

எட்டு மணிவரையும் கடுமையான சண்டை இடம்பெற்ற போதிலும் அதன் பின் சண்டையின் வேகம் தணிய ஆரம்பித்துவிட்டது. பதினொரு மணியளவில் படையினர் முற்றாகவே பின்வாங்கிவிட்டனர். ஆனால் மாலைவரை எறிகணை வீச்சு தொடர்ந்து இடம்பெற்றது.

பண்டிவிரிச்சான் மக்கள் முழுமையாகவே இடம்பெயர்ந்து மடுவை வந்து சேர்ந்தனர்.

அடுத்த நாள் புதிய சிறப்புத் தளபதி வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

அன்று மாலையே எல்லா அணிகளின் தலைவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி களநிலைமைகளை முழுமையாகக் கேட்டறிந்தார்.

வரை படத்தை வைத்துக் கொண்டு எதிரி முன்னேறக்கூடிய பாதைகள், இதுவரை முன்னேறிய பாதைகள் என்பவற்றைப் பற்றி விபரம் கேட்டு அறிந்து கொண்டார்.

அடுத்த நாள் பெண்கள் படையணி வரவழைக்கப்பட்டது. ஒன்றுவிட்டு ஒரு காவலரண்களில் பெண் போராளிகள் நிறுத்தப்பட்டனர். சிவத்தின் அணியினரும் தம்பனை முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டனர். சிவம் எப்போதுமே முள்ளிக்குளம் போன்ற காட்டுப் பிரதேசங்களில் போரிடுவதையே விரும்பினான். எனினும் சிறப்புத் தளபதியின் கட்டளைக்கமைய தன் அணியை தம்பனை முன்னரங்கிற்கு நகர்த்தினான்.

அடுத்த இரண்டு மாதங்களாக குறிப்பிடும்படியான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. அதிகாலையில் சில சமயங்களில் செல் வீச்சு இடம்பெறுவதும் படையினர் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்வதும், எதிர்த்தாக்குதல் தொடுக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் பின்வாங்குவதுமாக நாட்கள் கழிந்தன.

ஆனால் பண்டிவிரிச்சானில் மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் விமானக் குண்டு வீச்சுக்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டன.

சிவத்தைப் பொறுத்த வரையில் ஏதோ ஒரு பெரும் நடவடிக்கைக்கு இராணுவம் தம்மைத் தயார்ப்படுத்துவதாகவே தோன்றியது.

பரமசிவத்தின் மிளகாய்த் தோட்டம் அந்த முறை எதிர்பார்த்ததுக்கு மேலாகவே காய்த்துக் கொண்டிருந்தது. அப்படியான விளைச்சலை அவர்கள் சா விளைச்சல் என்று கூறுவதுண்டு.

முத்தம்மா, முத்தம்மாவின் தாய், பார்வதி, வேறு இரு பெண்கள் என எல்லோரும் பழம் ஆய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

வேலாயியும் பார்வதியும் கதைத்துக் கொண்ட வார்த்தைகள் முத்தம்மாவின் காதிலும் விழுந்தது.

பார்வதி, “வேலம்மா.. இவன் மூத்தவனுக்கு ஒரு காலியாணத்தை முடிப்பமெண்டால் அவன் இயக்கம், போராட்டமெண்டு போனவன் வீடு வாசலுக்குக் கூட வாறேல்லை. என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.. இவன் இளையவனுக்கும் இருபத்தெட்டு வயதாய்ப் போய்ச்சுது”, என்றாள் ஒரு பெரு மூச்சுடன்.

“மூத்தவரைப் பாத்து சரிவராதுங்கம்மா.. சின்னவரை எங்கயாச்சும் பாத்து முடிச்சுவிட வேண்டியது தான்”, என்றாள் வேலாயி.

முத்தம்மா காதைக் கூர்மையாக்கிக் கொண்டாள்.

“ஓ.. நானும் அப்பிடித்தான் யோசிக்கிறன்”, என்றாள் பார்வதி. ஏனோ முத்தம்மாவின் முகம் அவளையறியாமலே வாடியது. நெஞ்சில் ஏதோ ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது.

சுந்தரசிவத்துக்கு பேசும் பெண் நிச்சயமாய் தானாய் இருக்காது என அவள் நம்பினாள். ஆனால் சுந்தரத்தை மறந்துவாழ வேண்டிவரும் என நினைத்த போது, “ஓ”, வெனக் கத்தி அழவேண்டும் போலிருந்தது. அப்படியொரு நிலைமைய ஏற்பட்டால் மிளகாய் கன்றுக்கு அடிக்கும் கிருமி நாசினியைக் குடித்துவிட்டு செத்துப் போகவேண்டியது தான் என முடிவெடுத்தாள். எனவே சுந்தரம் மருந்துப் போத்தலைப் புதைத்து வைக்கும் இடத்தைப் பார்த்து வைக்கவேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

எல்லோரும் ஆய்ந்த பழங்களையும் வாங்கி ஒரு கடகத்தில் கொட்டிக் கொண்டு அவள் கொட்டிலை நோக்கிப் போனாள். அங்கு சுந்தரம் பழங்களிலிருந்து செங்காய்களைப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தான்.

முத்தம்மா தான் கொண்டுவந்த பழங்களை குவியலில் கொட்டிவிட்டு புறப்படத் திரும்பினாள்.

ஒவ்வொரு முறையும் பழங்களைக் கொண்டுவரும் போது ஏதாவது கேலியாகக் கதைத்துவிட்டுப் போகும் அவள் எதுவுமே பேசாமல் முகத்தை ‘உம்’, என வைத்திருந்தது அவனுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

“ஏய்.. ஏன் ஒண்டும் பேசாமல் போறாய்…?”

அவன் ஒரு முறை அவள் முகத்தை உற்றுப்பார்த்த போது அவளின் கண்கள் கலங்கிவிட்டன. அவள் மெல்ல, “ஒண்டுமில்லை” என்றாள்.

அவன் சற்று அழுத்தமாகவே கேட்டான்.

“உனக்கும் எனக்குமிடையிலை ஒண்டுமில்லையே?”

அவள் ஒருவித தயக்கத்துடன், “கெதியிலை அப்பிடித்தான் வரும் போலை”, என்றாள்.

“நீ என்ன சொல்லுறாய்?”, அவனின் வார்த்தைகள் திகைப்புடன் வெளிவந்தன.

“உங்களைக் கலியாணம் கட்டி வைக்கப் போகினமாம்!”

“நல்லது தானே…?”

“உங்களுக்கு நல்லது.. எனக்கு?”, என்றுவிட்டு விம்மத் தொடங்கினாள் முத்தம்மா.

“ஏன் உனக்கு என்னைக் கட்ட விருப்பமில்லையே?”

அவள் பெரு விரலால் நிலத்தைக் கீறியவாறு, “உங்களுக்கு என்னையே கட்டித்தரப் போகினம்”, என்றாள் தளதளத்த குரலில்.

அவன் உறுதியாகச் சொன்னான், “கட்டித்தர வைப்பன்”

“சத்தியம் பண்ணுங்கோ!”

“சத்தியம்”, என்றுவிட்டு அவன் சத்தியம் செய்யும் சாட்டில் அவளின் கையைப் பிடித்தான்.

அவள் நாணத்துடன், “கையை விடுங்கோ”, என்றாள்.

அவன் மெல்லிய சிரிப்புடன், “அப்ப உன்னக் கைவிடச் சொல்லுறியே?” எனக் கேட்டான்.

“ஐயோ.. இப்ப கையை மட்டும் விடுங்கோ..” என்றுவிட்டு கையை இழுத்துக் கொண்டு வெளியே போனாள். மனம் எல்லையற்ற இன்பத்தில் துள்ளியது.

ஆனால் சில நாட்களில் அவர்களின் கனவில் இடி விழும் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*