nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 23

சிவம் மரத்தின் மீது தொலைநோக்கியுடன் விட்டிருந்த போராளி விரல்களை விரித்து ஆறு எனச் சைகை செய்தான். பாதையின் இரு புறங்களிலும் மறைவாகப் படுத்திருந்த போராளிகள் படையினரின் வரவை மிகவும் அவதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.சிறு சத்தங்களிலிருந்து அவர்கள் நெருங்கி விட்டதைச் சிவம் புரிந்து கொண்டான். அவனின் விரல்கள் விசையை அழுத்தத் தயாராகியிருந்தன.

வந்த படையினரில் ஒருவன் ஏதோ ஒரு அசைவைக் கவனித்துவிட்டிருக்கவேண்டும். ஏதோ சிங்களத்தில் கத்தியவாறு சிவத்துக்கு எதிராகப் பாதையின் மறுபக்கத்தில் இருந்த பற்றையை நோக்கிச் சுட்டவாறு நிலத்தில் படுக்கமுயன்றான். ஆனால் நிலத்தில் விழுந்து படுப்பதற்கு முன்பே சிவத்தின் துப்பாக்கிக் குண்டு அவனின் பிடரியைத் துளைக்கவே அவன் அப்படியே சரிந்துவிட்டான். ஏனையவர்களில் இருவருக்கு மற்றப் போராளிகளின் குண்டுகள் பட்டாலும் எல்லோரும் நிலத்தில் நிலையெடுத்து திருப்பிச் சுட ஆரம்பித்துவிட்டனர்.

சண்டை எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்பாகவே தொடங்கி விட்டதால் அவர்களின் தாக்குதலும் பலமாக இருந்தது. போராளிகளின் குண்டுகள் அவர்களின் தலைக்கவசங்களில் பட்டுத்தெறித்தன.

படையினர் சுட்டவாறே பற்றைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். சற்றுத் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்த ஒருவன் எழுந்து ஆற்றை நோக்கி ஓட ஆரம்பித்தான். மரத்திலிருந்த போராளி அவனை நோக்கிச் சுட்ட போதும் அது படவில்லை. அவன் ஓடிப்போய் ஆற்றில் குதித்துவிட்டான். அவனுக்குப் பின்னால் ஓட முயன்ற இருவரைப் போராளிகள் சுட்டு விழுத்திவிட்டனர். கடைசியாக வந்த இருவரும் சண்டை தொடங்கும்போதே பின்வாங்கிக் காட்டுக்குள் ஓடிவிட்டனர். மரத்திலிருந்த போராளி அவர்கள் காட்டுக்குள் வெகுதூரம் ஓடி தொங்கு பாலத்தடிக்குப் போய்விட்டதாகக் கூறினான்.

அவர்கள் முள்ளிக்குளம் முகாமுக்குப் போனால் படையினர் காட்டுக்குள் தங்களைத் தேடி இறங்கக் கூடும் எனச் சிவம் கருதினான். எனவே போராளிகள் தங்கள் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்து விழுந்துகிடந்த படையினர் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டனர்.

சிவம் ஆற்றைப் பார்த்தபோது அதன் மறுகரையில் நீர் சிவப்பதைக் கண்டு கொண்டான். அந்த இடம் மிகவும் ஆழமான பகுதியாக இருக்கவேண்டும் எனவும் இவன் குதித்து நீந்தியபோது முதலை பிடித்திருக்கவேண்டும் எனவும் அவன் கருதினான்.

போராளி ஒருவனுக்கு தோளில் காயம்பட்டுவிட்டது. அதற்கு கட்டுப்போட்டு விட்டு தங்கள் இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர் போராளிகள். எந்நேரமும் ‘அம்புஸ்சில்’ அகப்படக்கூடும் என்பதால் மிகவும் அவதானமாகப் பாதைகளுக்குக்குச் சமாந்தரமாகப் பற்றைகளுக்கால் நடந்தனர்.

அவர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்று சிறிது நேரத்திலேயே உலங்குவானூர்தி வந்துவிட்டது. அது சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி சரமாரியாக வேட்டுக்களைத் தீர்க்க ஆரம்பித்தது. பின்பு உலங்குவானூர்தி கீழே இறங்குவது மரங்களின் மேலால் தெரிந்தது.

இறந்த படையினரின் சடலங்களைக் கொண்டு செல்லவே ஹெலி இறங்குகிறது எனச் சிவம் ஊகித்துக் கொண்டான்.

எனினும் தாங்கள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து அதிக தூரம் வந்துவிட்ட போதிலும் அவர்கள் தங்கள் நகர்வை மிகவும் அவதானமாகவே மேற்கொண்டனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போன்ற எந்தச் சிக்கலும் நடக்கவில்லை. அவர்கள் இரவு ஏழு மணியளவில் தங்கள் முகாமைச் சென்றடைந்தனர்.

உடனடியாகவே நடந்த சம்பவங்கள் பற்றி அறிக்கை எழுதித் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டு, தொலைத்தொடர்பு அறைக்குப் போனான்.

மருத்துவப் பிரிவு முகாமுடன் தொடர்பை ஏற்படுத்தி கணேசின் நிலைமை பற்றி விசாரித்தான். கணேசின் உடல் நலம் சற்றுத் தேறி வருவதாகவும் அடிக்கடி சண்டை நிலவரங்களை விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இராணுவம் தம்பனையில் பின்தள்ளப்பட்ட பின் கணேஸ் வெகு உற்சாகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

சிவம் ஒருவித திருப்தியுடன் தனது இடத்துக்குத் திரும்பினான்.

முத்தம்மாவின் தமையன் வீரய்யனின் மகளும் அந்தக் கிளைமோர் தாக்குதலில் பலியாகியிருந்தாள். வீரய்யன் சின்னபண்டிவிரிச்சானைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அவர்கள் இடம்பெயர்ந்து மடுவில் தங்கியிருந்தனர். வீரய்யனின் மகள் பேச்சுப் போட்டியில் பங்கு கொண்டு முதல் பரிசு பெற்றிருந்தாள். அவள் பரிசைக் கொண்டு சென்று தன் தாயிடம் காட்டும் ஆவலுடன் வந்து கொண்டிருந்த போது அவளின் உயிர் கொடூரமாகப் பறிக்கப்பட்டுவிட்டது.

முத்தமாளின் குடும்பமும் சுந்தரசிவம் உட்பட பரமசிவத்தின் குடும்பமும் அன்றே வீரய்யன் வீட்டுக்கு வந்துவிட்டனர்.    வீரய்யனின் மனைவி இரவு முழுவதும் கதறுவதும் பின் சற்று ஓய்வதும் பின் எழுந்து கதறுவதுமாகத் துடித்துக் கொண்டிருந்தாள். முத்தம்மாவும் அவளுடன் சேர்ந்து கத்திக் கொண்டிருந்தாள். வீரய்யன் இடிந்து போய் ஒரு மரத்தில் சாய்ந்தவாறு அமர்ந்துவிட்டான்.

பெருமாளுக்கு அதிர்ச்சியில் மீண்டும் முட்டு இழுக்கத் தொடங்கிவிட்டது. அவர் பம்மை இழுத்துவிட்டு ஒரு மரத்தின் கீழ் போய் படுத்துவிட்டார். முத்தம்மாவின் தாய் மருமகளை மடியில் கிடத்தி தலையை வருடி ஆறுதல் படுத்திக் கொண்டிருதாள்.

பரமசிவமும் சுந்தரசிவமும் ஓடியாடி வெளிவேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

உயிரிழந்த பிள்ளைகளில் பதினொரு பேர் கிறிஸ்தவப் பிள்ளைகள் அவர்களின் திருப்பலி ஒப்புக் கொடுப்பு காலை பத்துமணிக்கு மடுத் தேவாலயத்தில் ஏற்பாடாகியிருந்தது.

திருப்பலி ஆராதனையின் பின் அருட்தந்தை ஆற்றிய உரையில் கூடியிருந்த அனைவருமே கண்ணீர் விட்டனர். இடையிடையே விம்மல் ஒலிகளும் எழுந்தன.

வெண்ணிற ஆடையில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த பதினொரு பிஞ்சுகளின் ஆன்ம இறைப்பாறலுக்காக அனைவரும் மனமுருகி வேண்டிக்கொண்டனர்.

வீரய்யனின் மகளின் மரணச் சடங்குகள் முடித்துக் கொண்டு திரும்பப் பிற்பகல் மூன்று மணியாகிவிட்டது. அதற்குள் பார்வதி பாலம்பிட்டிக்குப் போய் உணவு தயார் செய்து சுந்தரத்தின் மூலம் அனுப்பிவிட்டாள்.

வீரய்யனின் மனைவியும் முத்தம்மாவும் சாப்பிட மறுத்துவிட்டனர். பரமசிவம் ஆறுதல் கூறி அவர்களைச் சிறிதளவு சாப்பிட வைத்தார்.

சுந்தரம் முத்தம்மாவிடம் சென்று, “நான் போட்டுவரட்டே?”, எனக் கேட்டான்.

அவள் அவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமலே, “இப்பிடியே இவங்கள் எங்கடை சனத்தை நெடுகவும் கொண்டு போட்டுக்கொண்டிருந்தால் என்ன கணக்கு?”, எனக் கேட்டாள். அவளின் முகத்தில் சோகத்தை மீறிய ஒரு கோவம் பரவியிருப்பதை அவன் அவதானித்தான்.

அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

அவன் மெல்ல, “ம்.. இயக்கம் தான் என்ன செய்யிறது?, அங்காலை முன்னேறுற இராணுவத்தை மறிச்சு அடிபட வேணும். இஞ்சாலை கிளைமோர் வைக்கிறங்களைக் கவனிக்கவேணும்”, என்றான்.

“அப்பிடி ஆக்கள் காணாதெண்டால் நான், நீங்கள் எங்களப் போல இளசுகள் எல்லாரும் களத்தில இறங்க வேண்டியது தானே?”

அவளின் வார்த்தைகள் அவனைத் திகைக்க வைத்துவிட்டன. அப்படி அவளுள் ஒரு ஆவேசம் எழும் என அவன் எதிர்பார்க்கவேயில்லை.

அவன், “அப்பிடியான நிலைமை கிட்டடியிலை வரும் போலை தான் கிடக்குது?” என்றான் ஒரு பெருமூச்சுடன்.

“இல்லை.. அப்பிடி நிலைமை வந்திட்டுது..” என்றாள் உறுதியாக.

“சரி. யோசிப்பம், நான் நேற்றுக்காலைமை போனதுக்கு தோட்டப்பக்கம் போகேல்லை. ஒருக்கால் போட்டுவாறன்.”, என்றுவிட்டுப் புறப்பட்டான் சுந்தரம்.

அன்று மிளகாய்ப் பழம் பிடுங்க வேண்டிய நாள். எப்படியும் எட்டுச் செலவு முடியுமட்டும் முத்தம்மாவும் தாயும் வரப்போவதில்லை எனவே மறுநாளாவது பழம் பிடுங்க வேறு ஆட்களை ஒழுங்கு பண்ணவேண்டியிருந்தது. ஆனால் அப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுமே சொந்தம், நட்பு, அயல் போன்ற உறவுகளால் மரண வீடுகளுடன் சம்பந்தப்பட்டவையாகவேயிருந்தன.

எனினும் எப்பிடியாவது ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்தவனாக வேகமாகச் சைக்கிளை மித்தித்தான்.

முதன் நாள் ஆழ ஊடுருவும் படையணியினர் இருவர் காட்டுக்குள் கொல்லப்பட்ட செய்தி அன்று காலையிலேயே ஊரெங்கும் பரவிவிட்டது. சிறுவர் சிறுமியரின் இழப்பில் இடிந்து போயிருந்த மக்களுக்கு அந்தச் செய்தி சற்று நம்பிக்கையைக் கொடுத்தது.

எல்லா மரணச் சடங்குகளுக்கும் சென்றுவிட்டு வந்து மதியத்தின் பின்பே முத்தையா கடையைத் திறந்தார். ஒரு பழைய குடைச் சேலையை எடுத்தக் கிழித்து ஒரு கறுத்தக் கொடி செய்து கடை வாசலில் கட்டிவிட்டார். அந்த ஊர்களில் அவருக்கென உறவுக்காரர் எவருமே இல்லாத போதும் அந்தச் சின்னஞ் சிறிசுகளின் இழப்புக்கள் அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

சிறிது நேரத்தில் முருகரப்புவும் முருகேசரும் கடைக்குவந்துவிட்டனர்.
முருகேசர், “உந்தப் பெரிய காட்டுக்கை எங்கடை பொடியள் குண்டு வைச்சவங்களைத் தேடிப்பிடிச்சுச் சுட்டுப்போட்டாங்கள்”, எனப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

முருகரப்பு, மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டார். அது எப்பிடி நடந்திருக்குமெனவும், அதை யார் செய்திருப்பார்கள் என்பதையும் அவர் சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடனேயே ஊகித்துவிட்டார். ஆனால் அது பற்றி அவர் வெளியே எதுவும் பேசவில்லை. ஆனால் சிவத்தைப் போல மக்களையும் மண்ணையும் நேசிக்கும் ஒரு பிள்ளையைப் பெற்றமைக்காக பரமசிவத்தை மனதுக்குள் போற்றிக் கொண்டார்.

அவர்கள் இப்பிடிக் கதைத்துக் கொண்டிருந்த போது பெரியமடு நோக்கிய பாதையில் போராளிகளின் சில வாகனங்கள் மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்தன. முன்னால் ஒரு ‘பிக்கப்’ வாகனமும் நடுவில் ஒரு ‘அம்புலன்ஸ்’ வாகனமும் பின்னால் ஒரு ‘பஜிரோ’வும் வேகமாக அவர்களைக் கடந்து சென்றன.

அவற்றை வியப்புடன் அவதானித்த முருகரப்பு, ”முன்னாலை போற ‘பிக்அப்பிலை’ நிக்கிற பொடியள் சிறப்புத்தளபதியின்ரை ‘பொடிகாட்’ மாரெல்லே?” என்றார்.

“அதுக்கை அவரைக் காணேல்லை”, என்றார் முருகேசர்.

முத்தையா சற்று அச்சமடைந்த குரலில், “அம்புலன்சும் போகுது இப்பிடி வேகமாய் ஒரு நாளும் போறேல்லை”, என்றார்.

எதற்குமே அசைந்து கொடுக்காத முருகப்பர் மனதில் கூட ஒரு மெல்லிய பதட்டம் பரவியது.

“எதோ பெரிய பிரச்சினை போலை கிடக்குது. எதுக்கும் நான் ஒருக்கால் தட்சிணாமருதமடுப் பக்கம் போட்டுவாறன்”, என்றவாறு எழுந்து புறப்பட்டார் முருகப்பர்.

(தொடரும்) 

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*