bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 22

இரு புறங்களிலிருந்து பறந்துவந்த விமானங்கள் குண்டுகளை வீசிவிட்டு மேலெழுந்த போது தரையிலிருந்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் முழங்கத்தொடங்கின. உடனடியாகவே இரு கிபிர் விமானங்களும் வான்பரப்பைவிட்டு மறைந்தன.

பெரியபண்டிவிரிச்சான் பாடசாலைப் பக்கம் புகைமண்டலம் எழுந்தது. இப்போதெல்லாம் விமானத் தாக்குதல்கள் மக்களுக்குப் பழகிப்போய்விட்டன. ஒவ்வொரு வீடுகளிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. விமானங்கள் போய் சில நிமிடங்களிலேயே இயல்பு நிலை வந்துவிடும்.

புஷ்பம் புகைமண்டலம் எழும்பிய திசையைப் பார்த்து ஒரு பெரு மூச்சுடன், “பாருங்கோ சிவம்.. கோயிலுக்கு ஷெல் அடிச்சு எங்கடை குடும்பத்தையே அழிச்சாங்கள், இப்ப பள்ளிக்கூடங்களுக்கு விமானத் தாக்குதல் நடத்தி பிள்ளையளைக் கொல்லத் திரியிறாங்கள்” என்றாள்.
பண்டிவிரிச்சான் பாடசாலையில் முன்பொருமுறை புக்காரா விமானம் பரீட்சை மண்டபத்தின் மீது குண்டு வீசியது சிவத்தின் நினைவில் வந்து போனது.

“நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன எண்டு சொல்லுவாங்கள். இன அழிப்பு எண்டு வெளிக்கிட்டவங்கள் குழந்தையள், முதியவர்கள் எண்டு பாக்கவே போறாங்கள்?”, என்றான் சிவம். அப்போ பண்டிவிரிச்சான் பக்கமிருந்து வேகமாகச் சைக்கிளில் வந்த ஒருவரிடம் சிவம், “ஐயா.. குண்டு எவடத்திலை விழுந்தது?”, எனக் கேட்டான்.

“அது பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலை உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டிலை தான் விழுந்தது. ஆக்களுக்க ஒரு சேதமும் இல்லை. இரண்டு பசுமாடுகள் தான் செத்துப்போச்சுது” எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் அவர்.

அது ஏற்கனவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இயங்கிய வீடு. இப்போது அந்தக் காரியாலயம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இயங்கிய இடம் அது என்பது எங்கள் மக்களில் ஒருவராலேயே எதிரிக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நினைத்த போது சிவத்தின் மனதில் வேதனை பரவியது. எனினும் அந்தத தகவல் மிகவும் பிந்திப் போய்ச் சேர்ந்துள்ளது என்பதை நினைத்து அவன் சற்று ஆறுதலடைந்தான்.

சிவம் கந்தாசாமியிடமும் புஷ்பத்திடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான். புஷ்பம் நன்றி கலந்த ஒரு புன்னகையுடன் விடைகொடுத்தாள்.

அடுத்த இருவாரங்களில் இராணுவம் மூன்று முறை மீண்டும் பெரிய தம்பனையைக் கைப்பற்ற முயன்றும் முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பெரும் இழப்புக்களுடன் பின்வாங்கும் நிலையே ஏற்பட்டது. ஆனால் அப்படியான சந்தர்ப்பங்களிலெல்லாம் ‘கிபிர்’ தாக்குதல்கள், தொடர் எறிகணை வீச்சுக்கள் என்பன தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான் ஆகிய பகுதிகளிலுள்ள எஞ்சியிருந்த வீடுகளையும் துவம்சம் செய்து கொண்டிருந்தன. எனினும் இராணுவத்தால் ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை. மடு, தட்சிணாமருதமடு, பாம்பிட்டி ஆகிய பகுதிகளில் ஓரளவு அமைதி நிலவியதால் தமிழ்த் தினப் போட்டிக்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

தட்சிணாமருதமடு பாடசாலையில் நாடகப் போட்டிக்கு காத்தவராயன் நாட்டுக் கூத்து பழக்கப்பட்டது. அதிபர் பரமசிவத்தையே கூத்தைப் பழக்கிவிடும்படி கேட்டிருந்தார். அவர் சுந்தரசிவத்தையே அனுப்பிவிட்டிருந்தார். முத்தமாவின் தம்பி ராமு காத்தவராயன் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக பாடி நடித்தான்.

இரவில் ‘பெற்றோர் மாக்ஸ்’ வெளிச்சத்திலேயே நாட்டுக்கூத்து பழக்கப்பட்டது. தம்பியாருக்குத் துணையாக வரும் சாட்டில் ஒவ்வொரு நாளும் முத்தமாவும் வந்துவிடுவாள். சுந்தரசிவமும் ஒரு தனியான உற்சாகத்துடன் பழக்க ஆரம்பித்தான்.

தமிழ்த் தினப்போட்டி வெகு சிறப்பாகவே இடம்பெற்றது. நாட்டுக்கூத்து எது எது சிறந்தது என இலகுவில் முடிவு செய்ய முடியாதவாறு கடுமையான போட்டியாகவிருந்தது.

தட்சிணாமருதமடு காத்தவராயனும், சின்னப்பண்டிவிரிச்சான் ஞானசௌந்தரியும், பெரிய பண்டிவிரிச்சான் சந்தோமையர் கூத்தும் என கடும் போட்டி நிலவியது. ஞான சௌந்தரி முதல் இடத்தையும் காத்தவராயன் இரண்டாவது இடத்தையும் ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் பெற்றுக்கொண்டன. ஆனால் சிறந்த நடிகனுக்கான பரிசு ராமுவுக்கே கிடைத்தது. இரண்டாவது பரிசு ஞானசௌந்தரியாக நடித்த பற்றிமா என்ற பெண் பிள்ளைக்கே கிடைத்தது.

சின்னப்பண்டிவிரிச்சான் அதிபர் தனது நாடகம் பரிசு பெற்றதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தாள். சின்னப்பண்டிவிரிச்சான் பாடசாலை இடம்பெயர்ந்து மடுவில் இயங்கிய போதும் முதல் பரிசு பெற்றது அவளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது.

விழா முடிந்து திரும்பிச் செல்லும் போது பேருந்துக்குள் பற்றிமாவைத் தன்னருகிலேயே அமர்த்தியிருந்தாள். அந்தப் பழைய பேருந்து மெல்ல மெல்ல தட்சிணாமருதமடு – மடு பாதையில் ஓட ஆரம்பித்தது.

இரண்டாம் கட்டையில் பேருந்து போய்க்கொண்டிருந்த போது தான் எதிர்பாராத அந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

திடீரென தாக்கிய கிளைமோர் வெடியில் பேருந்து நொருங்கியது. பேருந்தில் வந்த இரு பாடசாலைகளின் ஆசிரியைகளும், மாணவ மாணவியரும் உடல் சிதறித் தூக்கி வீசப்பட்டனர்.

எங்கும் சிதறிய குருதியில் அந்த இடமே சிவந்துபோனது. காயப்பட்ட மாணவ, மாணவியரின் அலறல் காட்டு மரங்களையே நடுங்க வைத்தது. சத்தம் கேட்டு நாலாபக்கங்களிலுமிருந்து மக்கள் கூடிவிட்டனர். சில நிமிடங்களில் போராளிகளும் அங்கு வந்துவிட்டனர்.

போராளிகள் உடனடியாகவே காயப்பட்டவர்களைத் தங்கள் வாகனங்களில் ஏற்றி மருத்துவப் பிரிவுக்கு அனுப்பினர். பதின்நான்கு மாணவ, மாணவியரும் சின்னப்பண்டிவிரிச்சான் அதிபரும் உயிரிழந்துவிட்டனர். அதிபர் பரிசு பெற்ற மாணவியை அணைத்த நிலையிலேயே இருவரும் உயிரிழந்திருந்தனர்.

சிவம் அது ஆழ ஊடுருவும் படையினரின் வேலை என்பதைப் புரிந்து கொண்டான். அவன் உடனடியாகவே தளபதியின் இடத்திற்குப் போனான். அவரும் மலையவனுடன் மேலும் போராளிகள் இருவரையும் கொண்டு காட்டுக்குள் இறங்கும்படி கட்டளையிட்டார்.
அந்தப் பரந்த காட்டுக்குள் அவர்களைத் தேடிப்பிடிப்பது சாத்தியமில்லை என்பதை அவன் அறிவான். ஆனால் அவர்கள் திரும்பும் போது எப்பிடியும் முதலைக்குடாவில் தான் அருவியாற்றைக் கடக்கவேண்டுமாகையால் அந்த இடத்தை இலக்கு வைப்பதாக முடிவு செய்தான்.

சிவம் தனது அணியையும் கொண்டு முதலைக்குடா நோக்கி குறுக்குப்பாதையால் முதலைக்குடா நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

தமிழ்த்தின விழாவில் தங்கள் பிள்ளைகளின் திறமைகளைப் பார்த்து மனம் மகிழ்ந்த அந்தக் கிராமங்களின் மக்கள் அதே நாளிலேயே தங்கள் செல்வங்கள் இரத்த வெள்ளத்தில் சிதறிக்கிடப்பதைக் கண்டு கதறினர். எவருக்கு எவர் ஆறுதல் சொல்வது என்று தெரியாத நிலை.

பரமசிவம், முருகரப்பு ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

எந்த ஒரு அதிர்ச்சியையும் தாங்கும் மனவலிமைம பெற்ற பரமசிவம் கூடக்கண்கலங்கிவிட்டார்.

காயப்பட்டவர்களுக்கு மருத்துவப்பிரிவுப் போராளிகள் அவசர முதலுதவிகளைச் செய்துவிட்டு தங்கள் அம்புலன்ஸிலேயே இலுப்பைக்கடவைக்குக் கொண்டு சென்றனர். இறந்தவர்களின் சடலங்களை வாகனங்களில் ஏற்றிய போராளிகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.

பரமசிவமும், முருகரப்புவும் ஆசிரியையின் உடலைத் தூக்கினர். அவளுக்கும், அவள் அணைப்பில் கிடந்த மாணவிக்குமிடையே அவர்கள் பெற்ற விருது கிடந்தது. பரமசிவம் அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அவரின் கண்கள் கலங்கிவிட்டன.

“முருகர்! பாத்தியே… அதுகள் தாங்கள் பரிசு எடுத்த சந்தோஷத்தை அனுபவிக்கக் கூட அந்தப் பாழ்படுவார் விடயில்லை” என்றார் பரமசிவம்.

முருகர் எதுவும் பேசாமலே ஆசிரியையின் உடலைத் தூக்கி வாகனத்தில் ஏற்றினார். அவர் மனதில் காட்டுக்குள் கண்டெடுத்த சாப்பாட்டுப் பேணியும், ஏனைய தடயங்களும் நினைவில் வந்தன.

சிறப்புத் தளபதி உடனடியாகவே காட்டுக்குள் ஒரு அணியை இறக்கித் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும்படி கட்டளையிட்டார்.

சிவம் நான்கு புறமும் வெகு உன்னிப்பாக அவதானித்தவாறே வெகு வேகமாக நடந்துகொண்டிருந்தான். மற்ற இரு போராளிகளும் சிறு சிறு இடைவெளிகளில் அவனின் பின்னால் நடந்தனர். மலையவன் எல்லோருக்கும் பின்னால் பின்புறத்தை நோட்டம்விட்டவாறு நடந்து கொண்டிருந்தான்.

அவர்களுடன் வந்த இரு போராளிகளும் பல்வேறு பயிற்சிகளை முடித்திருந்தவர்கள் என்பதால் சிவத்துக்கு ஈடுகொடுத்து நடப்பது அவர்களுக்கு அவ்வளவு சிரமமாயிருக்கவில்லை.

அவர்கள் சுமார் இரு மணி நேரத்தில் அருவியாற்றங்கரையை அடைந்துவிட்டனர்.

ஏனையோரை நிறுத்திவிட்டு சிவம் ஆற்றங்கரையில் போய் மணலில் கூர்ந்து அவதானித்தான். அவனின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. மணலில் இராணுவச் சப்பாத்து அடிகள் பதிந்திருந்தன. அவை ஆற்றிலிருந்து வெளியேறும் திசையிலேயே தென்பட்டன.

ஆழ ஊடுருவும் படையணியினர் இதே பாதையைத் தான் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் அவர்கள் இன்னும் திரும்பவில்லை என்பதையும் அவன் உறுதி செய்து கொண்டான்.

ஒரு குழைக் கொப்பை முறித்து மணலில் பதிந்திருந்த தனது காலடித் தடங்களை அழித்துவிட்டு திரும்பி அனைவரையும் மறைவான இடங்களில் நிலையெடுக்கவைத்தான்.

சிவம் தான் முதலில் சுடும்வரை எவரும் சுட வேண்டாம் எனக் கட்டளையிட்டான்.

அவர்கள் இந்தப்பாதையால் தான் வருவார்கள் என்பதில் சிவம் அவ்வளவு நம்பிக்கையாயிருப்பது மலையவனுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. எனினும் அவன் எதுவும் சொல்லாமலேயே சிவத்தின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தான்.

நேரம் மிகவும் மெதுவாக நகர்வது போலவே மலையவனுக்குத் தோன்றிது. அவர்கள் வந்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கடந்துவிட்ட போதிலும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

மேலும் ஒரு அரை மணி நேரம் கடந்த நிலையில் மலையவன் முற்றாகவே நம்பிக்கை இழந்துவிட்டான்.

அந்த நேரத்தில் தான் சற்றுத் தொலைவில் உள்ள மரங்களில் குரங்குகள் பாயும் ஒலி கேட்டது. பறவைகளும் கத்தியவாறு பறப்பது தெரிந்தது.

சிவமும் ஏனைய போராளிகளும் எச்சரிக்கையடைந்து தம்மை தயார் படுத்திக் கொண்டனர்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*