nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 21

போராளிகள் களத்தை விட்டு நீங்கிச் சிறிது நேரத்திலேயே கிபிர் விமானங்கள் அந்த இடத்தை இலக்குவைத்து குண்டுகளை வீசத் தொடங்கிவிட்டன. கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறு தொகையினரான போராளிகளும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான காவலரண்களில் பதுங்கிவிட்டதால் அவர்களில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.

ஏறக்குறைய ஒரு மணிநேரம் நான்கு விமானங்கள் மாறி மாறித் தாக்குதல் நடத்திவிட்டுப் போய்விட்டன. அடுத்த சில நிமிடங்களில் தொடங்கிய எறிகணை வீச்சு மாலையில் நன்றாக இருட்டும் வரை தொடர்ந்தது. பல எறிகணைகள் காடுகளுக்குள்ளும் விழுந்து வெடித்தன. அன்று இரவு சிறப்புத் தளபதி முக்கிய அணிகளின் பொறுப்பாளர்களை அழைத்து ஒரு விசேட கூட்டம் நடத்தினார்.

அன்று இரவுக்குள் தற்சமயம் முன்னரங்காக உள்ள பெரிய தம்பனைப் பகுதியிலிருந்து பண்டிவிரிச்சான் வரை மறைவான பகுதிகளால் பாம்பு பங்கர்கள் அமைக்கப்படவேண்டும் எனவும் படையினர் நகர்வை மேற்கொள்ளக்கூடிய பகுதிகள் எங்கும் ரிமோட்டில் இயங்கக்கூடியவை உட்பட சகலவிதமான கண்ணிவெடிகளும் புதைக்கப்பட வேண்டுமெனவும் அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து விட்டதாகவும் வேவுத் தகவல்கள் தெரிவிப்பதாகவும், படையினர் தம்மை மீளமைத்து உடனடியாக அடுத்த நகர்வை மேற்கொள்வது சாத்தியமில்லையெனவும் அவர் தெரிவித்தார். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி சகல தயாரிப்புக்களையும் நிறைவு செய்வது பற்றியும் அவர் திட்டங்களை விளக்கினார்.

போராளிகள் தரப்பிலும் நான்கு பேர் வீரச்சாவடைந்திருந்தனர். பன்னிரண்டு பேர் காயமடைந்திருந்தனர். போராளிகள் தங்கள் தோழர்களின் இழப்புக்காகக் கவலைப்பட்டாலும் அந்தக் கவலையை எதிரியின் மீதான கோபமாக மாற்ற அவர்கள் கற்றுக்கொண்டிருந்தனர்.

இரு நாட்களாகச் சண்டைகளில் தோய்ந்து போயிருந்த சிவத்தின் மனம் இப்போ கணேசனை நினைத்துக் கொண்டது. ரூபாவை கணேஸ் அனுப்பிவிட்ட விடயம் சிவத்துக்கு தெரியாதாகையால் ரூபா அவனைக் கவனிப்பாள் என அவன் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான். எப்பிடியும் மறு நாள் காலை கணேசை போய்ப் பார்க்க வேண்டும் என சிவம் முடிவு செய்து கொண்டான்.

அடுத்தநாள் காலையில் சிவம் பண்டிவிரிச்சான் மருத்துவப் பிரிவுக்குப் போனபோது அவனுக்கு அங்கே அதிர்ச்சிதான் காத்திருந்தது. கணேஸ் படுத்திருந்த கட்டில் வெறுமனே கிடந்தது. அருகில் படுத்திருந்த போராளியிடம், “தம்பி.. இதில படுத்திருந்த அண்ண எங்கை?”, எனக் கேட்டான்.

“தெரியேல்லை அண்ணை – நான் ராத்திரித்தான் வந்தனான்”, என்றான் அவன்.

கணேஸ் அனுமதிக்கப்பட்ட போது இருந்த போராளிகள் எவருமே காணப்படவில்லை. சிவம் மனம் குழம்பியவனாகப் பொறுப்பாளரைத் தேடிப் போனான்.

பொறுப்பாளர் சிவத்தைக் கண்டதும், “வாங்கோ.. அண்ணை”, எனக் கூறியவாறு எழுந்து நின்றான். சிவம் கணேஸ் பற்றி அவனிடம் விசாரித்தான்.

அவன் கடுமையான காயங்களுக்கு உட்பட்ட போராளிகளைப் பராமரிக்கும்  இலுப்பைக்கடவை  மருத்துவ முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், தாங்கள் உடனடிக்காயங்களுக்கு வைத்தியம் செய்வதுடன், முதலுதவிப் பிரிவாக இயங்குவதாகவும் தெரிவித்தான். அவனுக்கு கணேசைப் பற்றி எந்தவித விபரமும் தெரிந்திருக்கவில்லை.

ரூபாவைச் சந்தித்தால் விபரம் அறிய முடியும் என நினைத்தவனாக அரசியல்துறையின் மகளிர் பிரிவை நோக்கிப் போனான்.

அங்கு ரூபா தனது படையணிக்கே திரும்பிவிட்டதாக தெரிவித்தனர். அவர்களாலும் கணேஸ் பற்றிய எந்த விபரங்களையும் சிவத்துக்கு கொடுக்க முடியவில்லை.

அப்போது அங்கு வந்த முகாம் பொறுப்பாளர், கணேஸ் தான் சண்டைக்குப் போகப் போவதாகக் கூறி கட்டிலில் இருந்து எழுந்து விழுந்துவிட்டதாக ரூபா தன்னிடம் கூறியதாகக் கூறினாள். அதற்கு மேல் எதையும் அவளும் தெரிந்து வைத்திருக்கவில்லை.

படுகாயமுற்று, இடுப்பின் கீழ் இயக்கமின்றி செயலற்ற நிலைமையில் இருந்த போதும் சண்டை என்றதும் தன்னிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டதை நினைத்த போது சிவத்தின் உடல் ஒருமுறை புல்லரித்தது.

ஆனால் கணேசின் நிலைபற்றி அறிய முடியாமல் இருந்தமை அவனுள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. சண்டைக்களம் சூடு பிடித்துள்ள நிலையில் இலுப்பைக்கடவை போய் வருவதும் சாத்தியமில்லை. எதற்கும் முதலில் முகாமில் போய் வோக்கி மூலம் தொடர்பு எடுப்பதாக முடிவு செய்தவனாக சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் சிவம்.

அவன் திரும்பி வந்து கொண்டிருந்த போது மடுவில் கந்தசாமியும் இன்னொரு பெண்ணும் தண்ணீர் குடங்களுடன் வந்து கொண்டிருந்தனர்.

சிவம் சைக்கிளை நிறுத்தினான்.

கந்தசாமி தனக்கருகில் நின்ற பெண்ணிடம், “இவர் தான் என்ரை உயிரைக் காப்பாற்றின இயக்கத் தம்பி”, என அறிமுகப்படுத்தினான்.

கந்தசாமி ஒரு மெல்லிய சிரிப்புடன், “இதுதான் என்ரை பெண்சாதி புஷ்பம்… அங்காலை சண்டை நடக்கேக்கயே முருகரப்பு போய் இவவையும் பிள்ளையளையும் காட்டுப்பாதையாலை கூட்டி வந்திட்டார்”, என்றான்.

அவள், “அங்கை எங்களைத் தேடி வந்தவங்களாம்.. நாங்கள் இல்லையெண்டாப் போல வீட்டைக் கொழுத்திப் போட்டு போட்டாங்களாம்.. எங்களை இயக்கம் முதலே கூட்டிக்கொண்டு போய் குருக்களுரிலை ஒரு மறைவான இடத்தில விட்டவை. அங்கை வந்து தான் முருகரப்பு கூட்டி வந்தவர்”, என நடந்ததைக் கூறி முடித்தாள் புஷ்பம். அவள் குரலில் எல்லையற்ற நன்றிப் பெருக்கு இளையோடியது.
“தம்பி.. இந்த நன்றியை நான் சாகுமட்டும் மறக்கமாட்டன்”, என்று கூறிய கந்தசாமியின் குரல் தளதளத்தது.

புஷ்பம் திடீரென, “நீங்கள் சங்கரசிவமெல்லே?” எனக் கேட்டாள்.

சிவம் வியப்புடன். “ஓ.. ஏன் என்னை முதலே தெரியுமே?” எனக் கேட்டான்.

“பண்டிவிரிச்சான் பள்ளிக்கூடத்திலை ஓ.எல்லிலை உங்களோட படிச்ச புஷ்பமலரை ஞாபகமில்லையே?”

சிவம், அவளின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தான். தன்னுடன் படிப்பில் போட்டி போடும் புஷ்பமலர் தான் அவள் என்பதை அவன் இனங்கண்டு கொண்டான்.

ஏறக்குறைய பத்து வருடங்கள் அவளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அவனால் அவளை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டான்.

“மடுவில ஆமியின்ரை செல்லடியிலை உங்கடை, அம்மா, அப்பா, தங்கச்சியெல்லாம்…”

சிவம் வார்த்தைகளை முடிக்கவில்லை. அவள், “ஓமோம்.. அந்த புஷ்பமலர் நான் தான்.. அப்பிடியே அந்தப் பிரச்சினையிலை காயப்பட்டு அங்காலை கொண்டு போனவங்கள். பிறகு சுகமானாப் போலை சொந்தக்காரரோடை அங்கயே தங்கீட்டன்.” என்றாள்.

ரணகோஷ காலகட்டத்தின் போது நடந்த அந்தக் கொடூரம் சிவத்தின் நினைவில் வந்தது. அந்தக் காட்சியை மீட்டிப்பார்க்கும் போது இப்போதும் அவனின் நெஞ்சில் நெருப்பு எரிந்தது,

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முயன்ற இராணுவம் விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக முன் செல்ல முடியவில்லை. அந்த நிலையில் அவர்கள் தங்கள் முன்னேற்ற வியூகத்தை வவுனியா மன்னார் வீதியை நோக்கி திருப்பினார்கள்.

ரணகோஷ என்ற படை நடவடிக்கை மூலம் நெலுக்குளத்தை உடைத்துக்கொண்டு படையினர் பூவரசங்குளம் வரை முன்னேறிவிட்டனர். அங்கிருந்து மடு நோக்கி நகர முயன்ற இராணுவம் விடுதலைப்புலிகளின் பதிலடிகாரணமாக ஒரு அடி கூட மேற்கொண்டு நகர முடியாமல் திண்டாடியது.

அந்த நிலையில் பூவரசங்குளம் தம்பனை ஆகிய கிராமத்து மக்கள் இடம்பெயர்ந்து மடுவில் தஞ்சமடைந்திருந்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நாள் பண்டிவிரிச்சானை நோக்கி அடுத்தடுத்து எறிகணைகள் வந்து விழத் தொடங்கின. அதன் காரணமாக மடுவில் இடம்பெயர்ந்து தஞ்சமடைந்திருந்த மக்கள் அச்சமடைந்து மடுமாதா தேவாலயத்திற்கு அருகில் இருந்த சின்னக் கோவிலில் அடைக்கலம் புகுந்தனர்.

பண்டிவிரிச்சானை நோக்கி இடம்பெற்ற தொடர் எறிகணை வீச்சு ஓய்ந்து மக்கள் சற்று நிம்மதியடைந்த வேளையில் தான் அந்தக் கொடூரம் நிகழ்ந்தது.

பறந்து வந்த இரு எறிகணைகளில் ஒன்று சின்னக் கோவிலின் உள்ளேயும் மற்றையது வாசலிலும் வீழ்ந்து வெடித்தன. பெரும் மரண ஓலம் எங்கும் எழுந்தது. உடல்கள் பிய்த்தெறியப்பட சீறிய இரத்தம் ஆலயச் சுவர்களில் தெறித்துப் பரவின.

பிணங்களும் குற்றுயிராய்க் கிடந்த மக்களுமாய் ஆலயமும் ஆலய வளாகமும் ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தன.

“மாதாவே.. ஏன் எங்களுக்கு இந்தக் கொடுமை”, என யாரோ ஒரு பெண் அலறிய குரல் ஆலயச் சுவர்களில் மோதி எதிரொலித்தது.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். உடல்கள் தலைவேறு, கை கால்கள் வேறு எனச் சிதறிப் போய்க் கிடந்ததால் இறந்தோரின் தொகையைக் கூடச் சரியாகக் கணக்கெடுக்க முடியவில்லை. ஏராளமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
பாடசாலைகள், ஆலயங்கள் என மக்கள் பெருமளவு கூடியிருக்கும் இடங்களை இலக்கு வைக்கும் இலங்கை இராணுவத்தின் இன அழிப்புப் போர் முறைக்கு மடுவளாகமும் பலியாகி இரத்தக்குளமாகியது.

அந்தச் சம்பவத்தில் தான் புஷ்பமலரின் தாய்,தந்தையும் தங்கையும் அடையாளம் காணமுடியாதவாறு சிதறிப்பலியாகினர்.

புஷ்பமும் படுகாயமடைந்து செஞ்சிலுவைச்சங்க வாகனத்தில் வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.

அந்த நினைவுகள் சிவத்தின் நினைவில் மோதியபோது அவன் தன்னையறியாமலேயே தன் பற்களை நெருமிக் கொண்டான்.

சிவம், “மடுவிலை உங்கடை பெற்றோர் சகோதரியைக் கொண்டாங்கள். புவரசங்குளத்திலை உங்கடை மச்சாளை கெடுத்து அவவைச் சாகவைச்சாங்கள். பிறகு இவரையும் உங்களையும் பிள்ளையளையும் கொல்லப் பாத்தாங்கள். இவங்களை…”, என்று கோபமாக கூறிவிட்டு இடைநிறுத்தினான்.

திடீரென சற்றுத் தொலைவில் கேட்ட பெரும் வெடியோசை அவர்களை அதிரவைத்தது. அவர்கள் மேல் காற்று ஏற்படுத்திய உதைப்பின் அதிர்வில் புஷ்பம் தண்ணீர்க்குடத்தை கீழே போட்டுவிட்டாள்.

குண்டைவீசிய விமானம் பேரிரைச்சலுடன் மேல் எழுந்தது.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*