leader

பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் : பத்திரிகையை எரித்த வன்னி மக்கள்!

editorialagainstuthayanதவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களைப் பழிவாங்கவும் துரோகிகள், அரச கைக்கூலிகள் போன்ற முத்திரைகளைக் குத்துவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகின்ற உதயன் பத்திரிகை திகழ்ந்திருக்கின்றது என்ற கசப்பான உண்மை நடைபெற்றிருக்கின்றது.

ஊடகங்களில் பேசப்படாத ஆனால் பேசப்படவேண்டிய ஒரு கவலை தரும் விடயம் 20-03-2013 அன்று முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. உதயன் பத்திரிகைப் பிரதிகள் முல்லைத்தீவில் தீவைத்து எரிக்கப்பட்டமையே குறித்த சம்பவமாகும்.
உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியவுடன் உடனடியாக இராணுவப் புலனாய்வாளர்கள் அல்லது இராணுவத்தினர் தான் எரித்திருப்பார்கள் என்ற கேள்வி வாசகர்கள் மத்தியில் உடனடியாக எழுந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பத்திரிகையினை எரித்தவர்கள் தமிழ்த் தேசியத்தினை நேசிக்கின்ற தமிழ் மக்கள் தான் என்பது தான் சுட்டிக்காட்டத் தக்கவிடயமாகும்.

பத்திரிகையில் வெளியாகியிருந்த ஒரு கவிதை தொடர்பில் கேள்வி எழுப்பிய மக்களுக்கு உரிய பதிலை உதயன் வழங்கத் தவறியதுடன் தட்டிக்கேட்டவர்களை அரச கைக்கூலிகளாக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதன் பலனே பத்திரிகை எரிப்புச் சம்பவமும் வன்னியில் உதயன் பத்திரிகை விநியோகத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடியுமாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-03-2013) உதயன் நாளிதழில் “ஆங்கிலத்தில் ஆளுநருக்கு…” என்ற கவிதை வடிவிலான மடலில் வன்னி மாணவர்களையும் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தினையும் கொச்சைப்படுத்தும் வகையிலான வரிகள் இடம்பெற்றிருந்தன. ஆசிரியர்கள் தமக்கான இடமாற்றம் தொடர்பில் தெரிவிக்கும் கருத்துக்களின் தொகுப்பு வடிவைக் கொண்டதே குறித்த படைப்பு, அதில்

uthayan-3….கண்ணகியாய் தலைவிரித்து
வழிமறித்தாள் இன்னொருத்தி
வாருமையா வாசனையா
வந்ததையா விபரீதம்
எனக்கு வற்றாப்பளைக்கு இடமாற்றம்
அடிக்கடி எனக்கு காக்கை வலிப்பு வரும்
உடுக்குச் சத்தம் கேட்டால் அம்மன் கலைவரும்
குடும்பச் சுமை வேறு
எப்பிடி நான் வன்னி சென்று மாடு மேய்ப்பேன்…

 

குறித்த பதிவில் “எப்படி நான் வன்னி சென்று மாடு மேய்ப்பேன்” என்று ஆசிரியர் கேள்வி எழுப்புவது,. வன்னியில் உள்ள மாணவர்களை மாடுகளாக குறிப்பிடப்படுகின்றது என்பதே அந்த மக்களின் குற்றச்சாட்டாகும். அதேபோல வற்றாப்பளை அம்மன் தொடர்பில் எழுதப்பட்டுள்ள வரிகள் வரலாற்றுப்பிரசித்தி பெற்ற ஆலயத்தை கொச்சைப்படுத்துவாக அமைகின்றது என்பது அந்த மக்களின் கொதிநிலைக்கான காரணமாகும்.

குறித்த பதிவு தொடர்பில் அதிர்ப்தியடைந்த மக்கள் பிரதிநிதிகள் உதயன் நாளிதழைத் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியிருந்தனர். அரச செயலக அதிகாரி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வற்றாப்பளை அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊடகத் துறை சார்ந்தோர் என சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள் உதயன் ஆசிரியர் பீடத்தினைத் தொடர்பு கொண்டு குறித்த ஆக்கம் தொடர்பில் மாற்று நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர்.

கோரிக்கைவிடுத்தவர்கள் தம்மை அடையாளப்படுத்தி தமது கருத்துக்களை முன்வைத்த போதிலும் உதயன் ஆசிரியர் பீடத்தில் இருந்தவர்கள் எவரையும் மதிக்கும் வகையிலோ பொறுப்பான வகையிலோ பதிலளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த ஒரு சிலர் தன்மையாக பதிலளிக்க முற்பட்டபோதிலும் ஆசிரியர் பீடத்தினைச் சேர்ந்த ஏனைய சிலர் இடைமறித்து கேள்வி எழுப்பியவர்களை இழிவான வார்த்தைகளால் மிக மோசமாகத் திட்டியிருக்கின்றனர். அதனை விடவும் ஊடகம் என்றால் என்னவென்று தெரியுமா? நாங்கள் சர்வதேச தரத்தில் இருக்கின்றோம்? ஒரு ஊடகத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உதயன் பத்திரிகையை காடு என்று நினைத்தீர்களா? உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். என இடைவிடாது திட்டித் தீர்த்திருக்கின்றார்கள். குறிப்பாக இணையத்தில் பிரயோகிக்கக்கூடிய வார்த்தைகளை கணிசமானவர்கள் பயன்படுத்தவேயில்லை. அவ்வளவு மோசமான இழிவான வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இத்தனைக்கும் மத்தியிலும் குறித்த ஆக்கம் வன்னி மக்களை புண்படுத்துவதாக உள்ளது. அதற்கு வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிடுமாறு கோரிய போது, “நீங்கள் விரும்பினால் எழுதித் தாங்கோ.. நாங்கள் பிரசுரிப்போம், வெளியில் இருந்து வந்த படைப்புக்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல” என்று பொறுப்பற்ற வகையில் பதிலளிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பத்திரிகையில் பிரசுரமாகின்ற விளம்பரங்கள் தவிர்ந்த அனைத்து விடயங்களுக்கும் பதிலளிக்கவேண்டிய முழுமையான பொறுப்பு பத்திரிகை ஆசிரியருக்கே உள்ளது என்பதை அங்கு பணி செய்பவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா? அல்லது அதனை விளங்கிக் கொள்ளும் பக்குவம் அவர்களிடம் இல்லையா? என்பது புரியவில்லை என்கின்றனர் வன்னி மக்கள்.

இந்தப் பாணியினை உதயன் கடந்தகாலங்களிலும் முன்னெடுத்தே வந்திருக்கின்றது. தனிப்பட்ட நபர்களையோ நிறுவனங்களையோ பற்றி எழுதுவது, அது தொடர்பில் அதிர்ப்தி தெரிவித்து யாராவது உதயன் பத்திரிகை அலுவலத்திற்குச் சென்றால் வெள்ளைத் தாள் கொடுத்து அதற்கு மறுப்பு எழுதித் தந்துவிட்டுச் செல்லுங்கள் பிரசுரிக்கப்படும். நாங்களாக மறுப்பு பிரசுரிக்கமாட்டோம் என்பது அவர்கள் நிலைப்பாடாக இருக்கும். சர்வாதிகாரப் பாணியில் அவர்கள் ஏனையவர்கள் மீது கையாள்கின்ற கெடுபிடி நடவடிக்கை இன்று வன்னி மக்களின் உணர்வுகளைத் தட்டிப்பார்த்திருக்கின்றது.

இந்த விடயம் முதலில் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்திலேயே எதிரொலித்திருக்கின்றது. குறித்த படைப்பில் வன்னியும் வற்றாப்பளையும் இழிவாக சித்திரிக்கப்பட்டிருக்கின்றமைக்கு வருத்தம் தெரிவித்து உதயன் பத்திரிகை செய்திவெளியிடும் வரையில் உதயன் பத்திரிகையை பெற்றுக்கொள்வதில்லை என்று வற்றாப்பளை பத்திரிகை விற்பனை நிலைய முகவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

இதனை அடுத்து 20-03-2013 உதயன் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் “அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களால் பத்திரிகை முகவர்களுக்கு முல்லைத்தீவில் மிரட்டல்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருக்கின்றது. முதல் பக்கத்தில் குறித்த செய்தி அச்சிடப்பட்டு வன்னியில் விநியோகிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த செய்திக்கு பதிலாக ஜெனீவா விவகாரம் அடங்கிய செய்தியினை பிரசுரித்து யாழ்.குடாநாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் பத்திரிகை விநியோகம் இடம்பெற்றிருக்கின்றது.

நியாயமான முறையில் கேள்வி எழுப்பிய மக்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக மக்களை அரச அமைச்சர் ஒருவருடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டிருக்கின்றமை மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. முல்லைத்தீவு முள்ளியவளையில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கென அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற தீவிர நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து நெருக்கடிகளை எதிர்கொண்டுவருபவர்கள் முள்ளியவளைக் கிராம மக்கள். இந்த நிலையில் அதே மக்கள் அமைச்சரின் நெருக்கமானவர்களாக மாறினார்கள்? என்பதற்கான பதிலை உதயன் பத்திரிகை வைத்திருக்கிறதா? என்ற கேள்வியை முன்வைக்கலாம்.
அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களால் முல்லைத்தீவில் பத்திரிகை முகவர்களுக்கு மிரட்டல் என்ற செய்தி வெளியாகியதும் ஆத்திரமடைந்த மக்கள் முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்பாக உதயன் பத்திரிகைப் பிரதிகளை தீயிட்டுக் கொழுத்தினர்.

uthayan-vanni-723x1024

முல்லைத்தீவில் அமைச்சர் றிசாட் பதியுதீனின் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்ற நில அபகரிப்பு அத்துமீறிய குடியேற்றங்களுக்கு எதிராக போராடிவருகின்ற அதே மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது தாம் இழைத்த அநீதிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த மக்களையே அரச ஆதரவாளர்களாக சித்தரித்தது மிக மோசமான இழிவான ஊடக தர்மம் என்பதை அதன் நிர்வாகியும் அதன் ஆசிரியர் பீடமும் ஏற்றுக்கொண்டே தான் ஆகவேண்டும்.

இதனைத் தொடர்ந்தும் தனது இழிவான செயற்பாடுகளை உதயன் கைவிடவில்லை. பத்திரிகை தீயிடப்பட்டதற்கு மறுநாள், 17ஆம் திகதி வெளியாகிய படைப்புத் தொடர்பில் நியாயப்படுத்தும் பாணியிலான ஒரு சிறிய செய்திக் குறிப்பினை சுமார் நூறு வரையான பத்திரிகைப் பிரதிகளில் இணைத்து வன்னிக்கு குறிப்பாக வற்றாப்பளையை அண்டிய பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் செய்திருக்கிறார்கள். அந்தச் செய்திக் குறிப்பு இடம்பெற்ற பகுதியில் வேறு செய்திகள் இணைக்கப்பட்டே யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சி உட்பட்ட பகுதியிலும் உதயன் நாளிதழ் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  குறித்த செய்தி தொடர்பிலான உதயனின் செய்திக் குறிப்பினை சில பிரதிகளுக்கு மட்டும் பிரசுரித்து விட்டு ஏனைய பிரதிகளில் வேறு செய்தியை வெளியிட்ட உதயனின் நேர்மைத் தனத்தை எந்த வகையில் நியாயப்படுத்தப் போகிறது உதயன் நிர்வாகம்.

உதயனின் இந்த நடவடிக்கை தொடர்பிலும், ஆசிரியர் பீடத்தினர் மக்களுடன் உரையாடிய விதம் தொடர்பிலும் சமூகத்தில் உயர் நிலையில் இருப்போர் ஊடாக பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது நிறுவனத்தில் இருந்து எவரும் அவ்வாறு கடுமையாக மக்களுடன் கதைக்கவில்லை என்று கூறியிருக்கின்றார். அதற்கான ஆதாரங்களை குறித்த ஊடகம் எதிர்பார்க்குமாக இருந்தால் உரையாடிய மக்கள் பிரதிநிதிகளின் வாக்குமூலங்களை இணைப்பதற்கு தமிழ்லீடர் தயாராக இருக்கின்றது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றோம்.

தனிப்பட்ட வியாபார நோக்கத்திற்காக போரின் சுமையோடு போராடி இன்று வரை மீள முடியாத இழப்புக்களோடு வாழும் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்த்திருக்கிறது உதயன் நிர்வாகம். இந்த நடவடிக்கை தமிழ்த் தேசியம் தொடர்பிலான பற்றுறுதியுடனும் அசையாத நம்பிக்கையுடனும் இருக்கின்ற தமிழ் மக்களை கூட்டமைப்பு என்கின்ற சக்தியில் இருந்து திசை திருப்பி விடும் அபாயத்தை சரவணபவன் எம்பி புரிந்து கொண்டிருக்கவில்லையா? அல்லது அவருடைய ஏவலாளிகள் சொல்பவை மட்டுமே வேதம் என்று எண்ணிக் கொள்கின்றாரா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

நியாயம் கோரிய மக்களை அரச ஆதரவாளர்களாகச் சித்தரித்த உதயன் நிர்வாகத்தின் வலையில் வவுனியா நகரசபையும் விழுந்திருப்பது வன்னியில் குறிப்பாக முல்லைத்தீவு வாழ் மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தியிருப்பதாகத் தெரியவருகின்றது. உதயன் மீது அச்சுறுத்தல் என்ற பெயரில், நியாயம் கோரிய மக்களுக்கு எதிராகவே வவுனியா நகர சபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிகுந்த மன உழைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றது. நியாயத்திற்காக கொதித்தெழுந்த மக்களின் உணர்வுகளை திசை திருப்பி அதிலும் இலாபம் ஈட்டுவதற்கு உதயன் நிர்வாகம் முற்பட்டிருக்கின்றது.

நியாயம் கிடைக்கும் வரை பத்திரிகையை புறக்கணிப்போம் என்ற மக்களின் உணர்வு அரச சார்புடையவர்களின் அச்சுறுத்தலாக புனையப்பட்ட கதையே நகர சபையின் தீர்மானம் வரை சென்றிருப்பதாகவே முல்லைத்தீவு மக்கள் கருதுவதாக அறிய முடிகின்றது. இவ்வாறான வேதனை தரும் விடயத்தினை மேற்கொண்டிருக்கின்ற உதயன் பத்திரிகையின் வியாபார நோக்கத்திற்காக மக்களின் உணர்வுகளை அடகு வைக்கவேண்டாம் என்பதை வவுனியா நகர சபைக்கும் அதன் உப தலைவருக்கும் சுட்டிக்காட்ட வன்னி மக்கள் முற்படுகின்றார்கள்.

அனாதரவாக ஏதிலிகளாக வாழும் வன்னி மக்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை. அவர்கள் மனங்களை புண்படுத்தாமல் விட்டாலே அவர்களுக்கு அது ஆறுதலாக இருக்கும்.. வியாபாரிகளுக்கு மனித உணர்வுகள் புரியுமா? என்பது கேள்விக்குரியதுதான்.

-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*