nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 19

மகளிர் அரசியல்துறைச் செயலகத்தைச் சென்றடைந்த போது தான் பூநகரி புறப்படும் விடயத்தை அங்கு பொறுப்பாக நின்ற பெண் போராளியிடம் தெரிவித்துவிட்டு தனது மோட்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
அவள் மருத்துவப் பிரிவுக்குச் சென்ற போது கணேஸ் கண்களை மூடியவாறு படுத்திருந்தான்.அவள் மெல்ல, “கணேஸ்”, என அழைத்தாள். அவன் உடனேயே விழிகளைத் திறந்ததிலிருந்து அவன் தூங்கிக்கொண்டிருக்கவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

“நான் வெளிக்கிடப்போறன்”, என்றவள் சற்று இடைநிறுத்திவிட்டு தயக்கத்துடன், “என்னிலை கோபமே?”, எனக் கேட்டாள்.

“பின்ன கோபம் வராதே?, நானும் போராட்டத்திலை எந்த விதத்திலையும் பங்களிப்புச் செய்ய முடியேல்லை.. என்னாலை நீங்களும் இஞ்சை நிண்டால்..?”

“பிழை தான்.. நான் உணர்ந்திட்டன்!” என்றாள் ரூபா.

“நல்லது..  போட்டு வாங்கோ.. வரயுக்கை ஏதாவது ஒரு சாதனையோட வாங்கோ”, என்றான் கணேஸ் ஒரு மெல்லிய புன்முறுவலுடன்.

அவள் கணேசின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“கணேஸ்.. மனதை நிம்மதியாய் வைச்சுக் கொண்டு நல்ல றெஸ்ற் எடுங்கோ.. காலமை மாதிரி அடம்பிடிச்சு எழும்பினீங்களெண்டால் சுகம் வரப் பிந்தும்.. நல்லாய் பெட் றெஸ் எடுத்துக் கெதியாய் சுகம் வந்தால் ரண்டு பேருமே ஒண்டாய் முன் களத்திலை நிண்டு போராடலாம்”

கணேசின் கைப்பிடி இறுகியது.

“அப்ப.. எனக்குக் கெதியாய் சுகம் வருமே?” அவன் குழந்தை போல அவாவுடன் கேட்டான்.

“நிச்சயமாய்.. உங்கடை வைராக்கியம் உங்களை கெதியாய் நடக்க வைக்கும்”

கணேஸ் ஒரு முறை விழிகளை மூடி ஒரு முறை மூச்சை நீளமாக உள்ளிழுத்து விட்டு மீண்டும் திறந்தான்.

“நிச்சயமாய்.. உங்கடை அன்பு வார்த்தையள் என்னை கெதியாய் நடக்க வைக்கும்”

அவனின் கையை விடுவித்துக் கொண்டு, “போட்டு வாறன்”, என விடைபெற்றுவிட்டுப் புறப்பட்டாள் ரூபா.

சிவத்தின் அணியினர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் அவர்கள் எதிர்பார்த்த இராணுவ அணி வந்து சேரவில்லை.

சிவம் வோக்கியை இயக்கி கட்டளை பீடத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான்.

இராணுவ அணி காட்டுக்குள் இறங்கி நகர்வை ஆரம்பித்து விட்டதாகத் தகவல் கிடைத்து விட்டதாகப் பதில் வந்தது.

பெரிய தம்பனைப்பக்கமாக ஐம்பது கலிபர் வெடியோசைகளும், எறிகணைகளும் தொடர்ந்து கேட்டவண்ணமிருந்தன.

சற்றுத் தொலைவிலுள்ள மரங்களில் குரங்குகள் பாயத் தொடங்கின.

குருவிகள் கத்தியவாறு கலையத் தொடங்கின.

சிவம் விடயத்தைப் புரிந்துகொண்டான்.

போராளிகள் அனைவரும் நிலையெடுத்துக் கொண்டனர்.

இராணுவ அணியொன்று உடலெங்கும் குழைகளைக் கட்டி உருமறைப்புச் செய்தபடி இரண்டு வரிசைகளில் நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் வரக் கூடுமென எதிர்பார்க்கப்பட்ட பாதையில் இருபுறமும் போராளிகள் மரங்களின் மறைவிலும், பற்றைகளின் பின்பும் பதுங்கிக்கிடந்தனர்.

அவர்களின் முன்பகுதி தங்களைக் கடக்கும் வரை பொறுமை காத்த சிவம் நடுப்பகுதி தனக்கு நேரே வரக்கட்டளை வெடியைத் தீர்த்தான். திடீரென வெடிகள் விழ ஆரம்பித்ததும் அவர்கள் தாங்கள் ஒரு “அம்புஸில்” அகப்பட்டு விட்டதைப் புரிந்து கொண்டனர். எனினும் அவர்கள் தயாராவதற்கு முன்பாகவே பலர் விழுந்து விட்டனர்.

போராளிகளின் எல்லைக்குள் வந்தவர்கள் ஒருவர் கூடத் தப்பவில்லை. ஆனால் முன்னால் சென்றவர்கள் சிறிது தூரம் பின் நிலையெடுத்துக் கொண்டு போராளிகளின் பக்கம் சுட ஆரம்பித்தனர். பின்னால் வந்தவர்கள் ஓடிப்போய்விட்டார்களா? அல்லது சற்றுப் பின்னால் போய் நிலையெடுத்து விட்டார்களா என்பதை சிவத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் வந்த அணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருக்க வேண்டுமென அவன் ஊகித்துக் கொண்டான்.

எப்படியும் பின்வாங்கிவிட்ட பின்னால் வந்த பகுதியினர் உடைக்கப்பட்டு முன் தள்ளப்பட்டு தனிமைப்பட்ட பகுதியினரை மீட்க வருவார்கள் என்பதால் புதியதொரு ஏற்பாட்டைச் செய்யவேண்டியிருந்தது.

பின்வாங்கிப் போனவர்கள் திரும்பவும் வருவதானால் நிச்சயமாக அதே பாதையால் வரப்போவதில்லை என்பதை அவன் முடிவு செய்து கொண்டான். எனவே எதிர்ப்பக்கம் நின்ற பகுதியினரை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதி அதே இடத்தில் நிலை கொள்ள மறுபகுதி இராணுவம் வந்த திசை நோக்கி சிறிது தூரம் முன் சென்று காட்டுக்குள் நிலையெடுக்குமாறு கட்டளையிட்டான். தானும் தனது பக்கத்தில் நின்ற போராளிகளும் காட்டுக்குள் சிறிது உட்பக்கமாகப் பின்வாங்கி முன் சென்று தனிமைப்பட்டிருந்த படையினரைப் பின்புறமாக வளைத்தான்.

அவர்கள் முன்பு தாங்கள் நின்ற பக்கமாகச் சுட்டுக் கொண்டிருந்ததை அவனால் அவதானிக்க முடிந்தது.

அவர்கள் குழைகளால் உருமறைப்புச் செய்திருந்த காரணத்தால் இனங்கண்டு துல்லியமாக துப்பாக்கிச் சூடு நடத்த முடியவில்லை.

அடுத்த நடவடிக்கையாக கிரனைட் லோஞ்சர்களை இயக்கி அவர்கள் நிற்குமிடத்தை நோக்கி கைக் குண்டுகளை சிவத்தின் அணியினர் வீசினர்.

அது நல்ல பலன் தர ஆரம்பித்து விட்டது.

படுத்திருந்த இராணுவத்தினர் எழுந்து திசை தெரியாமல் ஓட ஆரம்பித்தனர். பின் பக்கத்தால் சிவத்தின் அணியினரும் மறுபக்கத்தில் பாதையருகில் படுத்திருந்தவர்களும் அவர்களை இலகுவில் சுட்டுத்தள்ள முடிந்தது.

சில நிமிடங்களிலேயே அந்தச் சண்டை முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் பின்வாங்கி விட்ட பின்பகுதியினர் எப்படியும் வருவார்கள் என்றே எதிர்பார்த்தான் சிவம்.

எனவே உள்காட்டுப் பகுதியால் இராணுவம் வந்த திசை நோக்கி நகர்ந்து பரவலாக நிலையெடுத்துக் கொண்டனர் போராளிகள்.

ஆனால் சிவம் எதிர்பார்த்ததுக்கு மாறாக இராணுவம் அறுத்தோடியின் மறுகரைப் பக்கமாகவே காட்டுக்குள் இறங்கியது.

அப்பகுதியில் போராளிகள் பத்துப் பேர் மட்டுமே நின்றனர்.

உடனடியாகவே சிவம் அவர்களை பின் வாங்கி ஆரம்பத்தில் நின்ற பகுதியில் பதுங்கி நிலையெடுத்து தாக்கும்படி கட்டளையிட்டான்.

வேட்டுச் சத்தங்களிலிருந்து இராணுவம் முன்னேறுவது தெரிந்தது. தங்களுக்கு நேரே இராணுவம் வந்ததும் தனது அணியை அறுத்தோடியைக் கடந்து மறுபுறக் காட்டுக்குள் இறக்கினான்.

மரங்களுக்குப் பின்னால் நிலையெடுத்த அவர்கள் படையினரைப் பக்கவாட்டில் தாக்கத் தொடங்கினர். ஒரே நேரத்தில் முன்புறமிருந்தும் பக்கவாட்டிலும் தாக்குதல் வரவே இராணுவத்தினர் நிலை குலைய ஆரம்பித்துவிட்டனர்.

போராளிகளின் ஒவ்வொரு சூடும் ஒவ்வொரு படையினரை வீழ்த்துவது அவர்களை கிலி கொள்ள வைத்துவிட்டது.

அவர்கள் இறந்தவர்களையும் காயப்பட்டவர்களையும் தூக்கிக் கொண்டு காப்புச் சூடு கொடுத்தவாறே பின்வாங்க ஆரம்பித்தனர்.

சில மணி நேரம் வெடியோசைகளாலும், குண்டுச் சத்தங்களாலும் அதிர்ந்த காடு அமைதியடைந்துவிட்டது.

போராளி வில்லவன் வீரச்சாவடைந்துவிட்டான். மாயவன் படுகாயமடைந்துவிட்டான். வேறு இருவருக்குப் படுகாயம்.

இரு தடிகளை வெட்டி அதில் ஒரு சாரத்தைக் கொழுவி ஸ்டெச்சர் போல செய்து அதில் வில்லவனின்  வித்துடலையும் அது போன்ற இன்னொன்றில் மாயவனையும் சிவம் முகாமுக்கு அனுபி வைத்தான்.

 சிறு காயப்பட்ட போராளிகள் முதல் உதவி செய்து கட்டுக்களைப் போட்டுவிட்டு தாங்கள் சண்டையில் நிற்பதாகக் கூறிவிட்டனர்.

தூரத்தில் வானத்தில் “ரோண்” சத்தம் கேட்க ஆரம்பித்து. ஒரு  போராளி, “அண்ணை.. வண்டு.. வருகுது” என்றான்.

சிவம், “உடனை செத்துக் கிடக்கிற ஆமிக்காரரின்ரை சடலங்களை பத்தையளுக்கை மறையுங்கோ.. கண்டால் நாங்கள் இஞ்சை தான் நிக்கிறம் எண்டு தெரிஞ்சு கிபிர் வந்து பொழியத் துவங்கியிடுவன்”, என்றான்.

இராணுவத்தினரின் சடலங்களை மறைப்பது அவ்வளவு சிரமமான காரியமாகவே இருக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே உருமறைப்பு செய்திருந்ததால் குழைகளைப் போட்டே அவர்களை மறைக்கத்தக்கதாக இருந்தது.

எப்படியிருந்த போதும் அங்கு நிற்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்த சிவம் தனது அணியை வெகு அவதானமாக மறைவான பாதைகளால் பின்னகர்த்தினான்.

அரை மணி நேரத்துக்கு மேலாக வேவு விமானம் சுற்றிக் கொண்டிருந்தது. எதையும் அது கண்டுபிடிக்கவில்லைப் போலவே தோன்றியது.

வேவு விமானங்கள் வானத்தை விட்டு அகன்று சில நிமிடங்களிலேயே இரு கிபிர் விமானங்கள் வந்து காட்டின் மீது குண்டுகளைப் பொழி ஆரம்பித்தன. கரும்புகை மண்டலங்கள் திரள் திரளாக மேலெழுந்தன.

சிவமும் போராளிகளும் தங்களுள் சிரித்துக் கொண்டனர். ஏனெனில் குண்டுகள் அவர்கள் நின்ற இடத்திலிருந்து ஏறக்குறைய அரைக் கிலோமீற்றர் தூரத்தில் விழுந்து கொண்டிருந்தன.

நேரம் மூன்று மணியைத் தாண்டிய போது வோக்கி இயங்க ஆரம்பித்தது. சிவம் தொடர்பை ஏற்படுத்தினான்.

காட்டுக்குள் இறங்கிய இராணுவம் பெரும் இழப்புடன் பின் வாங்கிவிட்டதாகவும், சிவத்தின் அணியினரை முகாமுக்குத் திரும்பும் படியும் கட்டளை பீடத்திலிருந்து அறிவித்தல் வந்தது.

அனைவரும் முகாமை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

வில்லவனின் வீரச்சாவு சிவத்தின் நெஞ்சைப் போட்டு நெருடிக்கொண்டிருந்தது. வில்லவன் இருக்குமிடம் எப்போதுமே கலகலப்பாயிருக்கும். புதுப்புது விதமான குளப்படிகள் செய்து அவன் அடிக்கடி “பணிஸ்மென்ற்” வாங்கத் தவறுவதில்லை.

அவனும் அவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

அவன் எவ்வளவு தான் தொல்லை கொடுத்தாலும் தளபதி முதல் எல்லோரும் அவனை விரும்பினர்.

அவன் ஒரு கிளி வளர்த்தான். சண்டைக்குப் போகும் நேரம் தவிர அது அவனை விட்டுப் பிரிவதேயில்லை. அதற்கு அவன் பேசக் கற்றுக்கொடுத்திருந்தான். வில்லவன் இல்லாத போது யாரும் அதுக்குக் கிட்டப் போனால்,

உடனே அது, “வில்லவன்.. எங்கை?”, எனக் கேட்கும்.

விளையாட்டாக யாராவது, “அவன் வீரச்சாவு”, என்று சொன்னால், அது “பொய்.. பொய்..” என்றுவிட்டு சுற்றிச் சுற்றிப் பறக்கும்.

இப்போ முகாமுக்கு போனதும் கிளி, “வில்லவன் எங்கை?”, எனக் கேட்டால் என்ன செய்வது என நினைத்த போது சிவத்தின் நெஞ்சு மெல்ல நடுங்கியது.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*