leader

தமிழக மாணவர் எழுச்சியும் சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளும்!

மிகப்பெரிய எழுச்சியின் வடிவமாக தமிழகம் திரண்டிருக்கிறது. இனம் ஒன்றின் விடுதலைக்கான இறுதி எழுச்சியாக மாணவர் சக்தி நிமிர்ந்தெழுந்த சம்பவங்கள் பல்வேறு விடியல் பெற்ற தேசங்களில் அமைந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழத்தமிழினத்திற்காக உரிமையுடன் திரண்டெழுந்தது தமிழக மாணவர் சமூகம். தமிழகத்தின் எழுச்சி குறிப்பாக தமிழக மாணவர் சமூகத்தின் எழுச்சி மத்திய பிராந்தியத்தையே உலுக்கிப் பார்க்கும் அளவிற்கு வல்லமை கொண்டதாக வீரியம் பெற்றுவிடும் நிலையை அடைவதற்கு முன்பாகவே அதனை முற்றாக தடுப்பதற்கான நடவடிக்கையினை தமிழக அரசு மேற்கொண்டிருக்கின்றது.

ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது முதல் போராட்ட அமைப்புக்களுக்கு இடையில் பிழவுகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றுக்கிடையில் மோதல்களைத் தோற்றுவித்தமை தொடக்கம் இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்ப்பறிப்புக்கள் வரையில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தின் பின்னாலும் இந்திய மத்திய அரசாங்கங்கள் பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டுவந்தமை வரலாற்று உண்மைகள்.

இந்திய மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முண்டுகொடுத்தல், நெருக்கடிகளில் இருந்து மத்திய அரசைக் காப்பாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழக ஆட்சிபீடத்தில் இருந்த அரசியல் கட்சிகளும் செயற்பட்டு வந்தமை, செயற்பட்டு வருகின்றமை தற்போது வரையில் அம்பலமாகிவருகின்றது.

உணர்வுகளை வைத்து அரசியல் நடத்தி வாக்குச் சேர்க்கும் வழக்கம் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகளையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக மாணவர்களின் உணர்வுப் போராட்டங்களை நிறுத்த தமிழக அரசாங்கம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையும் அமைந்திருக்கின்றது. இதற்கும் அப்பால் தற்போதைய தமிழக அரசின் இந்த நடவடிக்கையினைக் கண்டும் காணாமல் இருக்கும் ஈழத்திற்காக தீவிரமாக உழைப்பதாகக் காட்டிக்கொள்ளும் தமிழக அரசியல்வாதிகளின் போலிமுகங்களும் அம்பலமாகியிருக்கின்றன.

ஈழவிடுதலைப்போராட்டங்களின் தொடக்ககாலம் தொடக்கம் இன்றுவரையில் ஈழத்தமிழ் விவகாரம் தமிழக அரசியல் பீடங்களைத் தீர்மானிக்கும் பிரதான சக்திகளில் ஒன்றாக விளங்கியிருக்கின்றமை வரலாறு. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தற்போது சராசரி நாளாந்தம் ஒரு அறிக்கை ஈழம் சார்ந்து எழுதுவதும் கருத்து வெளியிடுவதுமாக செயற்படுகின்றார்.

அது மட்டுமல்லாமல் அமெரிக்கத் தீர்மானத்தினை இந்தியா ஆதரிக்காவிட்டால் மத்திய அரசில் இருந்து விலகப்போவதாகவும் அவர் மிரட்டல் விடுத்திருக்கின்றார். அது கலைஞரின் பாணி என்பது காங்கிரஸ் கட்சிக்கும் தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மனிதப் பிணங்கள் வீழ்ந்த போதும் இதே பாணியிலான நாடகங்களை ஆடியிருந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்நிலையில் தற்போதும் மத்திய அரசிற்கான ஆதரவினை விலக்கப்போவதாக கலைஞர் அறிவித்திருக்கின்றார். ஆனாலும் கூட அவர் வெளியிடுகின்ற அறிக்கைகளில் “அமெரிக்கத் தீர்மானத்தினை திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்கவேண்டும்” என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகின்றார். கடந்த ஆண்டு ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த தீர்மானத்தில் மாற்றங்கொண்டுவரச் செய்து அதனை வலுவற்ற அறிக்கையாக்கிய பெருமையும் இந்தியாவையே சாரும் என்பதை கலைஞர் மறந்திருக்க வாய்ப்பில்லை.

வன்னியில் இறுதிப் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வன்னி மக்களைக் காப்பதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முன்வந்தவர் அன்றைய தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜெயலலிதா. அதேவேளை அந்தக் காலப் பகுதியில் நடைபெற்ற லோக்சபா தேர்தல்களுக்கான தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில்  “இலங்கைத் தமிழர்களின் துயரத்திற்கு முடிவு ஏற்பட தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி, ஒரே தீர்வு. அதை நான் செய்து முடிப்பேன். வங்காள தேசம் உருவாக பாகிஸ்தானிற்கு எதிராக இந்தியப் படையை இந்திரா காந்தி அனுப்பியது நியாயமென்றால், எங்கள் தமிழர் நலன் காக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதும் நியாயமே. அதை நான் செய்து முடிப்பேன்”  என வலியுறுத்தி தீவிர பரப்புரை மேற்கொண்டிருந்தவர் அதே ஜெயலலிதா என்பது பகிரங்கமான விடயம். ஆனாலும் கூட தற்போது சர்வதேச ரீதியாக இலங்கை நெருக்கடியைச் சந்தித்திருக்கின்ற சூழலில் அமைதியான வழிமுறையைக் கையாண்டு நீதி வேண்டி தமிழக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டங்களை முற்றாக ஒடுக்குவதற்கு ஜெயலலிதா முற்பட்டிருக்கின்றமை அவரது அரசியல் சார் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டதுடன் கல்லூரிகளின் விடுதிகளில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழக முதல்வரும், முன்னாள் முதல்வரும் ஈழத்தமிழர்கள் சார்ந்த விடயங்களில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தமது அரசியல் நலனுக்கானவை என்பது பகிரங்கமான நிலையில் தமிழகத்தின் ஈழத்தமிழ் உணர்வாளர்களாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளும் தமது அரசியல் நலன் சார்ந்தே செயற்படுகின்றார்கள் என்பதற்கான ஆதாரங்களும் வெளிவந்திருக்கின்றன.

லயோலாக் கல்லூரி மாணவர்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்தின் எல்லைகள் அனைத்தையும் எட்டிவிடும் என்பதை உணர்ந்து கொண்ட தமிழக ஆட்சிபீடம் தமிழக பொலிஸாரின் துணையுடன் லயோலாக் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்ததுடன் அவர்களின் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவந்திருந்தது. இந்த நிலையில் நடவடிக்கைக்கு ஆணையிட்ட தரப்பினை விட்டுவிட்டு தமிழக பொலிஸாருக்கு எதிரான அறிக்கைகளே வெளிவந்திருக்கின்றன. ஆளுந்தரப்புடன் முரண்பட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் வைகோ, சீமான், ராமதாஸ் உட்பட்ட அரசியல் வாதிகள் கவனம் எடுத்துச் செயற்பட்டிருக்கின்றனர்.  எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டுச் சேரவேண்டும் என்ற தூர நோக்கத்தினைக் கருத்தில் கொண்டே குறித்த அரசியல்வாதிகள் கவனமெடுத்துச் செயற்பட்டிருப்பதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முத்துக்குமரன், செங்கொடி, மணி உட்பட்ட பெருமளவான தாய்த் தமிழகத்தின் தியாகிகள் நிகழ்த்திய உயிர்க்கொடைகளுக்கான அறுவடையை ஈட்டிக்கொடுக்கவேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் தமது கட்சி நலன் சார்ந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதை தமிழக மக்கள் மன்னிக்கப்போவதில்லை. ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கான அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டிருக்கின்றன. புலத்திலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எழுச்சியின் பிரதிபலிப்பாகவே ஈழத்தமிழினத்திற்கான விடியல் என்கின்ற நம்பிக்கை ஒளி பிரகாசிக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே ஈழத்தமிழ் மக்களிடத்தில் எஞ்சியிருக்கிறது.

ஈழம் சார்ந்து சிந்திக்கின்ற தமிழகத்தின் அப்பாவி இளைஞர்களது உணர்வுகளை தமிழக அரசியல் சக்திகள் தமது நலன்களுக்காக பங்குபோடுவதையோ, அவர்களின் எதிர்காலத்தை தவறான திசைகளுக்கு இட்டுச் செல்வதையோ தமிழக உணர்வாளர்கள் அனுமதிக்கக்கூடாது. நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம் நிகழ்ந்தேறிய ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நேர்த்தியான வழியில் பயணிக்கவேண்டும். இடையறாத தொடர் போராட்டமே உரிமையைப் பெற்றுத்தரும்.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*