nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 17

வெளிச்சம் அணைக்கப்பட்டதுமே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதைச் சிவம் புரிந்து கொண்டான். உடனடியாகவே நால்வரும் துப்பாக்கிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு தனித் தனியான மறைவிடங்களில் பதுங்கிக் கொண்டனர்.
மீண்டும் வாகனத்தின் லைற் எரிந்தது.

கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் ஒருவனை இன்னொருவன்  எழுந்து முழங்காலில் நிற்க தள்ளி விட்டவன் அவனைக் காலால்  உதைத்துவிட்டு ஏதோ கத்தினான். அவனின் கையில் மின்னிய ஒரு வாள் லைற் வெளிச்சத்தில் பளபளத்தது. அவர்களைச் சுற்றி மேலும் நால்வர் சூழ்ந்து கொண்டனர்.

நின்றவர்களில் ஒருவன் முழங்காலில் நின்றவனைக் கையால் காட்டி ஏதோ சொல்ல மற்றவன் வாளை ஓங்கினான்.

சிவம் இனித் தாமதிக்க நேரமில்லை என்பதைப் புரிந்து கொண்டான். வாளை ஓங்கியவனின் நெற்றியை இலக்குவைத்து துப்பாக்கியின் விசையை அழுத்தினான். அவன் அப்பிடியே சுருண்டு விழுந்தான். மலையவன், முருகர், சோமர் முதலியோரின் துப்பாக்கிகளும் முழங்க மேலும் இருவர் விழுந்தனர்.

மற்ற இருவரும் ஓடிப்போய் வாகனத்தில் ஏறி அதை வேகமாகக் கிளப்பினர். சிவம் ரயரை இலக்குவைத்து சுட்டபோதும் அது வேகமாகப் புறப்பட்டதால் குறி தப்பிவிட்டது. அந்த “ஹையர்ஸ்” வாகனத்தின் பல இடங்களில் துளையிடப்பட்ட போதும் அது வீதியின் வளைவான இடமாதலால் கண்களில் இருந்து மறைந்து ஓடித் தப்பிவிட்டது.

அவர்கள் போய்விட்டனர் என்பது உறுதியான போதும் சிவம் மிகவும் எச்சரிக்கையுடனேயே அவர்கள் விழுந்து கிடந்த இடத்துக்கு வந்தான். அவனைக் கண்டதும் கைகள் கட்டப்பட்டவன் எழுந்து நின்றான். சிவம் அவனைப் பற்றிப் பொருட் படுத்தாமல் விழுந்து கிடந்தவர்களை ரோச் லைற்றை அடித்துப் பார்த்தான். மூவரும் இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டான்.

பின்பு சிவம் மற்ற மூவரையும் மறைவிலிருந்து வெளியேவரும்படி அழைத்துவிட்டு அருகில் நின்றவனின் கைக் கட்டை அவிழ்த்து விட்டான்.

அருகில் வந்து ரோச் லைற்றை அடித்து அவனின் முகத்தைப் பார்த்த முருகர், “டேய்.. நீ.. பதினோராம் கட்டை கந்தசாமியல்லோ?”, என்றார்.

அவனும் முருகரை அடையாளம் கண்டுவிட்டான்.

“ஓமப்பு.. நான் தான்” என்றான் அவன்.

“என்னடா? என்ன நடந்தது?” எனக் கேட்டார் முருகர்.

“என்னை வெட்டவெண்டு கொண்டு வந்தவங்கள்.. நல்ல காலமாய் நீங்கள் கண்டதால தப்பியிட்டன்”

இன்னும் அவனின் குரலில் நடுக்கம் தீரவில்லை.

“அப்பு இதிலை நிக்கிறது ஆபத்து. விசயத்தை ஆறுதலாய் விசாரிப்பம். இப்ப காட்டுக்கை இறங்குவம்”, என்றான் சிவம்.

“ஓமோம் எங்கடை எல்லையுக்கை போய்ச் சேருவம் செத்தவங்களுக்கு அவங்கடை ஆக்கள் வந்து கருமாதி செய்யட்டும்”, என முருகர்  மெல்லச் சிரித்தபடி சொல்லிக்கொண்டு மதவுக்கு அருகில் தெரிந்த ஒரு அறுத்தோடியில் இறங்கி காட்டுக்குள் நடக்கத் தொடங்கினார்.

அவர்கள் காட்டுக்குள்ளால் நடந்து சிறிது தூரத்தில் போய்க் கொண்டிருந்த போது பிரதான வீதியால் கனரக வாகனங்கள் வேகமாக ஓடும் ஒலி கேட்டது.

சோமர் கிண்டலாக, “தம்பி.. ஆமிக்காரர் பிரேதம் தூக்கப் போறாங்கள்”, என்றார்.

மலையவன், “சை.. பிழைவிட்டிட்டமண்ணை”, என்றான்.

சிவம், “என்னது?, எனக் கேட்டான்.

“நிண்டிருந்தால் அவங்களிலை நாலு பேரையும் போட்டிருக்கலாமண்ணை”, என்றான் மலையவன்.

“சாமத்திலை ஆமி வாறதெண்டால் பெருந்தொகையாத் தான் வருவாங்கள். நாங்கள் இரண்டு ஏ.கேயையும் இரண்டு வேட்டைத் துவக்குகளையும் வைச்சு கிரிக்கட்டே விளையாடுறது”,

மலைவன் அதன் பிறகு எதுவும் பேசவில்லை. ஆனால் மனதில் சண்டைக்கு துணிவு மட்டும் இருந்தால் போதாது முன் யோசனையும் தந்திரங்களும் வேண்டும் என்பது அவன் மனதில் வந்து உறைத்தது.

காடு அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை.

ஆங்காங்கே குறுக்கிட்ட ஒற்றையடிப்பாதைகள் அவர்களின் பயணத்தை இலகுவாக்கின.

ஏறக்குறைய ஒரு மணிநேரம் நடந்த பின்பு ஒரு குளத்தின் வால் கட்டுப்பக்கம்  அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

சிவம் அந்த இடத்தை நன்றாக அவதானித்து விட்டு முருகரிடம்,

“அப்பு.. இது பண்டிவிரிச்சான் குளமல்லே?” எனக் கேட்டான்.

முருகர், “ஓ.. இப்படியே குளக்கட்டிலை போய் துருசடியால இறங்கினால் ஊருக்குள்ளை போகலாம். நேரை காட்டுக்காலை போனால் தட்சினாமருதமடு அலைகரையிலை போய் மிதக்கலாம்” என்றார்.

“காட்டுக்காலை போவம்”, என்ற சிவம், “கந்தசாமியண்ணை என்ன நடந்ததெண்டு நடந்து  கொண்டே சொல்லுங்கோ, கேப்பம்” எனக் கதையைத் தொடங்கி விட்டான்.

நிறுவனம் ஒன்றில் காவலாளியாக கடமையாற்றும் கமலநாதன் என்பவன் கந்தசாமியின் தங்கை பாடசாலையால் வரும் போது பத்தாம் கட்டையில் காட்டுக்குள் இழுத்துச்சென்று பலவந்தமாக கற்பழித்துவிட்டான். அவள் வீட்டில் வந்து சொல்லி அழுதுவிட்டு அன்றிரவு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள்.

கமலநாதன் இராணுவத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் ஆயுதக் குழுவிற்கு வால் பிடித்துத் திரிபவன். கந்தசாமி அவனை வீதியில் கண்டு கத்தியுடன் விரட்டிய போது அவன் காட்டுக்குள் ஓடித் தப்பிவிட்டான். அதன் பிறகு மூன்று நாட்களாகியும் கமலநாதன் திரும்பி வரவில்லை. ஆனால் கமலநாதனின் செருப்புக்கள் மட்டும் குருக்கள் மதவடியில் காணப்பட்டன.

அதன் பின்பு இராணுவப் புலனாய்வாளர்களுடன் சென்ற ஆயுதக் குழுவினர் கந்தசாமியைப் பிடித்துக் கொண்டுபோய் கமலநாதன் பற்றி விசாரித்து சித்திரவதை செய்தனர். கந்தசாமியிடம் எந்த ஒரு தகவலையும் பெற முடியாத நிலையில் செருப்புக்கள் கிடந்த அதே மதவடியில் வைத்து அவனை வெட்டக்  கொண்டு வந்தபோது அவன் காப்பாற்றப்பட்டான்.

“அப்ப நீயே கமலநாதனைக் கடத்திக் கொண்டுபோய் கொலை செய்தனீ”, எனக் கேட்டார் முருகர்.

அவன் பதறிப் போனான்.

“நான் வெட்டக் கலைச்சது உண்மை.. அதுக்குப் பிறகு என்ன நடந்ததெண்டு சத்தியமாய் எனக்குத் தெரியாதப்பு”

அவன் பொய் சொல்லவில்லை என்பதை முருகர் உணர்ந்து கொண்டார்.

அவனின் தங்கைக்கு ஏற்பட்ட கதிக்கு அவன் கமலநாதனைக் கொன்றாலும் கூட அவனை எவரும் பிழை சொல்லப் போவதில்லை. ஆனால் அவனைப் போன்றவர்கள் கோபத்தில் உடனடியாக எதுவும் செய்வார்களேயொழிய கடத்தி கொலை செய்யுமளவுக்கு திட்டமிட்டு செயற்படுமளவுக்கு அவர்கள் இல்லை.

“அப்ப ஆர் செய்திருப்பங்கள்?” எனக் கேட்டார் முருகர்.

“அதுதான் தெரியேல்லை?” என்றான் கந்தசாமி.

சோமர், “அண்ணை.. ஆனை அடிச்சிருக்கும். உப்பிடிப் பெண் பாவம் செய்யிறவனைப் பிள்ளையார் விடமாட்டார்” என்றார்.

“அண்ணை! ஆனை அடிச்சுதோ… மனுஷர் தான் கொண்டாங்களோ.. இப்பிடியானவங்களுக்கு சாவு கொடூரமாய் இருக்க வேணும். அந்தப் பிள்ளை மனதாலையும் உடம்பாலையும் பட்ட வேதனையை அவனும் அனுபவிக்க வேணும். அவனெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் சாகவேணும்”

சிவத்தின் குரலில் உண்மையான ஒரு ஆவேசம் இழையோடியது.

பின்பு முருகர் சொன்னார், “கந்தசாமி.. இனி நீ அங்கை போனால் உயிரோடை தப்ப முடியாது. நீ இஞ்சையே நில்”, என்றார்.

“பெண்சாதி, பிள்ளையள்..”, என தயக்கத்துடன் முனகினான் அவன்.

“அது நீ யோசியாதை.. நான் பொழுதுபட ஒரு ஆளை அனுப்பி காட்டுப்பாதையாலை இஞ்சாலை கூட்டிவாறன். நீங்கள் மடுவிலை தங்கலாம்”, என்றார் முருகர்.

கந்தசாமிக்கும் வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

சிவமும் மலையவனும் மற்றவர்களை அனுப்பிவிட்டு முகாமுக்கு வந்தபோது அதிகாலை இரண்டு மணியாகிவிட்டது. எனினும் தாங்கள் நடத்திய தாக்குதல் பற்றியும் கந்தசாமியைக் காப்பாற்றியது பற்றியும் தளபதிக்கு உடன் அறிவிப்பதற்காக அவரின் இருப்பிடத்தை நோக்கிப் போனார்கள்.

சென்றியில் நின்ற போராளி தளபதியை எழுப்பி சிவம் வந்த செய்தியை சொன்னதுமே அவர் உடனே வெளியில் வந்தார்.

சிவம் காட்டுக்குள் போய் வந்த விடயத்தை சுருக்கமாகச் சொல்லிவிட்டு தாங்கள் குருக்களுரில் நடத்திய தாக்குதல் தொடர்பாக முழு விடயத்தையும் விளக்கினான்.

தளபதி இடையிடையே கேள்விகள் கேட்டு முழு விடயங்களையும் உள்வாங்கிய பின்பு, “நல்ல விஷயம் தான் செய்திருக்கிறியள், ஆனால் ஒரு சிக்கல் இருக்குது..” என்றார்.

“என்னண்ணை?”

“இப்ப நீங்கள் மூண்டு பேரைப் போட்டிட்டியள்.. கந்தசாமியையும் காப்பாத்திப் போட்டியள்.. அவங்கள் அதுக்குப் பழிவேண்ட கந்தசாமியின்ரை பெண்சாதி பிள்ளையளை ஏதும் செய்யப்பாப்பாங்கள்”

பள்ளிக் கூடத்தில படிச்சுக்கொண்டிருந்த கந்தசாமியின்ரை சகோதரியையே இரக்கமில்லாமல் கெடுத்தவங்கள் அவன்ர மனைவியை சும்மாவிடப் போவதில்லை என்பது சிவத்துக்கு நன்றாகவே புரிந்தது. அவர்கள் பழி தீர்க்கப் பிள்ளைகளையும் கொல்லத் தயங்கமாட்டார்களென்றே அவன் நம்பினான்.

சிவம் சற்றுத் தடுமாற்றத்துடன்.. “அப்ப.. இப்ப என்னண்ணை செய்யிறது?” எனக் கேட்டான்.

சில நிமிடங்கள் அமைதியாக எதையோ யோசித்த தளபதி,

“பறவாயில்லை.. நான் இப்பவே முழு விடயத்தையும் சொல்லி எங்கடை புலனாய்வுப் பிரிவுக்கு அறிவிக்கிறன். அவை உள்ள நிக்கிற போராளியளுக்கு அறிவிச்சு கந்தசாமியின்ரை பெண்சாதி பிள்ளையளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாத்துவினம். பிறகு முருகரப்பு இல்லாட்டில் சோமண்ணை போய் இஞ்சாலை கூட்டி வந்து மடுவிலை விடட்டும்” என்றார்.

அந்த வார்த்தைகள் சிவத்தை சற்று நின்மதியடைய வைத்தன.

அதன் பின்பு சிவம் காட்டுக்குள் போய் சந்தித்த சகல சம்பவங்களையும் ஒன்றும் விடாமல் விபரித்தான்.

தளபதி எல்லாவற்றையும் கேட்டு விட்டு, “நல்ல பிரியோசனமான வேலை இரண்டு நாளைக்கிடையிலை செய்து முடிச்சிருக்கிறியள். காலமை எல்லாத்தையும் அறிக்கையாய் எழுதிக் கொண்டுவாங்கோ” என்றுவிட்டு எழுந்து வோக்கியை நோக்கிப் போனார்.

சிவம் தன் இடத்துக்குப் போய் படுக்கையில் சரிந்த போது தான் அவனுக்கு கணேஸின் நினைவு வந்தது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு முறை கூட அவனின் நினைவு வராமல் இருந்தது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. எப்பிடியும் ரூபா அவனைக் கவனமாகப் பார்ப்பாள் என்ற நம்பிக்கையுடன் உறங்கிப் போனான்.

திடீரென தொடர் எறிகணை ஒலிகள் கேட்கவே திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்தான். பெரிய தம்பனைப் பக்கமாகவே எறிகணைகள் விழுந்து கொண்டிருப்பதை அவன் காதுகள் உணர்த்தின. இது இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியின் அறிகுறி என்றே அவனுக்குத் தோன்றியது.

தளபதியின் இருப்பிடத்தை நோக்கி அவசரமாக நடக்கத் தொடங்கினான்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*