nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 13

அப்பகுதியில் குறிப்பிட்டளவுக்குப் பெரிய முகாம்களாக முருங்கன், பறையனாலங்குளம், மடுவீதி என்பனவே இருந்தன என்பதை “வேவு”ப் போராளிகள் மூலம் சிவம் அறிந்திருந்தான். ஏனைய சிறு முகாம்களிலும் காவலரண்களிலும் பகலில் நின்றுவிட்டு இரவில் பிரதான முகாம்களுக்குப் போய்விடுவார்கள்.
முருகர் சொன்னார், “இப்ப நாங்கள் மடுறோட்டுக்கும் பறையனாலங்குளத்துக்கும் இடையில நிக்கிறம். ஒரு காக்கட்டை போக மன்னார் றோட்டில மிதக்கலாம்”.

“அதுக்கை அவங்கடை காவலரண் ஒண்டுமில்லையே?”

“இருக்குது. பொழுது பட்டால் அதிலை நில்லாங்கள்”, என்றார் முருகர்.

நன்றாகப் பொழுது படும் வரை நால்வரும் ஒரு மறைவான இடத்தில் அமர்ந்தனர். புள்ளினங்களின் ஒலி மெல்லக் குறைய ஆரம்பித்தது.

“முருங்கனில இருந்து இந்தக் காட்டிலை இறங்க வேணுமெண்டால் எப்பிடியும் நாலைஞ்சு ஊர்மனை தாண்டித்தான் வரவேணும். பறையனாலங்குளத்திலையிருந்து வாறதெண்டாலும் றோட்டுக்கு ஏறித்தான் வரவேணும். இடையிலை ஒரு பெரிய முள்ளுக்காடு கிடக்குது. அனுபவமில்லாதவை அதுக்கை இறங்கினால் உடம்பு கிழிஞ்சுதான் வரும்”, என்றார் முருகர்.

“அப்பிடியெண்டால் இந்த ஊடுருவும் படையணி உந்த இரண்டு முகாம்களிலையிருந்தும் வந்திருக்க ஏலாது. அவங்கள் சனத்தின்ரை கண்ணிலை படாமல் தான் நடமாடுவங்கள்.. மடு றோட்டும் சனப்புழக்கம் உள்ள இடம், அங்கையிருந்து வாறதும் சாத்தியமில்லை”, என்றான் சிவம்.

“அப்பிடியெண்டால் றோட்டைக் கடந்து போனமெண்டால் குஞ்சுக்குளம் தொங்கு பாலத்தோடை ஒரு சின்ன முகாம் இருக்குது. அங்கால கஜூவத்தை தான்” என்றார் முருகர்.

நன்றாக இருட்டியதும் நால்வரும் மீண்டும் நடையைத் தொடங்கினர். அந்தச் சிறுகாவலரணை அண்டியதும் முருகர் மற்றவர்களைச் சைகை செய்து நிறுத்திவிட்டு முன்னால் போனார். ஒரு மரத்தின் பின்னால் நின்று காதை மட்டும் அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொண்டார். மிருகங்களின் காலடி ஓசையைக் கூடக் கிரகிக்கும் அவரின் காதுகளுக்கு மனித அசைவுகளை அறிவது சிறு விஷயம் தான்.

அவர் திரும்பியதும் வந்து, “ஒருதருமில்லை… போவம்”, என்றார். இரு புறமும் வெளிச்சம் எதுவும் தெரியாததை உறுதி செய்த பின்பு அவர்கள் வீதியைக் கடந்தனர்.

நன்றாக இருட்டிவிட்ட போதிலும் முருகர் ரோச் லைற்றை அடிக்க வேண்டாமெனக் கூறிவிட்டார். மங்கிய நிலவொளியில் அந்த வீரை மரங்களுக்குள்ளால் முருகரைத் தொடர்ந்து நடந்தனர். நிலம் பற்றைகளோ, முட்களோ இல்லாதிருந்த போதிலும் இலைச் சருகுகளால் நிறைந்திருந்தது. எனினும் விறகுக்காகத் தறிக்கப்பட்ட மரங்களின் அடிக்கட்டைகளில் கால் அடிபடாமல் மிகவும் அவதானமாக நடக்கவேண்டியிருந்தது.

சிறிது நேரத்தில் அவர்கள் வண்டில் பாதையொன்றுக்கு வந்து சேர்ந்தனர். வண்டில் தடங்கள் சென்ற அடையாளங்கள் மெல்லிய ஒற்றையடிப்பாதைகள் போல் தென்பட்ட போதிலும் நடுப்பகுதிகள் முட்செடிகளாலும் சிறு புதர்களாலும் மூடப்பட்டிருந்தன. அவர்கள் வண்டில் தடங்கள் வழியே நடந்த போது அவை கால்களில் தடக்குப்பட்டு இடைஞ்சல் செய்திருந்தன. கொடிகளும் இடையிடையே சிக்கி தொல்லை கொடுத்தன.

ஆனால் முருகரும் சோமரும் சர்வசாதாரணமாக பிரதான வீதியில் நடப்பது போன்று வேகமாக போய்க் கொண்டிருந்தனர். சிவத்துக்கும் மலையவனுக்கும் அவர்களைத் தொடர்வது சற்று சிரமமாக இருந்த போதிலும் அந்த அனுபவம் அவர்களுக்கு ஒருவித மகிழ்ச்சியைக் கொடுத்தது.

திடீரென எங்கோ ஒரு ஆட்காட்டியின் குரல் கேட்டது. முருகர் எல்லோரையும் நிற்கும்படி சைகை காட்டிவிட்டு குரல் வந்த திசைப்பக்கம் காதை நன்றாகக் கொடுத்துக் கேட்டார். குரல் சில நிமிடங்களில் நின்றுவிட்டது. பின்பு சிறிது நேரத்தில் இன்னும் சற்றுத் தொலைவில் ஆட்காட்டியின் குரல் கேட்டது.

முருகர் மிகவும் தணிந்த குரலில் சொன்னார், “ஆரோ ஆக்கள் மேற்குப் பக்கமாய் நடந்து போறாங்கள். இப்ப வேட்டைக்காரர் வாற நேரமுமில்லை. கொஞ்ச நேரம் பொறுப்பம்.

மலையவன் சருகுகளுக்கால் வெளியே தெரிந்த வேர் ஒன்றில் குந்தினான். சில வினாடிகளில் திடுக்கிட்டு எழும்பிய அவன்,

“அப்பு.. வேர் அசையுது”, என்றுவிட்டுப் பாய்ந்து முருகரின் அருகில் வந்தான்.

முருகர் மெல்லச் சிரித்துக் கொண்டு,“அது வேரில்லை தம்பி.. வெங்கடாந்திப் பாம்பு.. எதையோ விழுங்கிப் போட்டு இரை மீட்டிக்கொண்டு கிடக்குது… அங்கை பார் சருகுகள் அசையுது”, என்றுவிட்டு ரோச் லைட்டை குத்தி அடித்துக் காட்டினார்.

“நல்லவேளை.. என்னை வாலால சுத்தாமல் விட்டிட்டுது”, என்றான் மலையவன்.

“அதுகள் தங்களுக்கு இரை தேவைப்படயுக்கை தான் மிருகங்களைப் பிடிக்கும், மனுஷரைப் பிடிக்கிற மாதிரி பெரிய பாம்புகள் இந்தக் காட்டிலை இல்லை”, என்றார் சோமண்ணை. என்றாலும் கூட மலையவனால் உடனடியாக அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியவில்லை.

“இந்த நேரம் ஆமியும் காட்டுக்கை இறங்காங்கள். இப்ப காட்டுக்க நிக்கிறது ஆர் எண்டு விளங்கேல்லை”, என்றார் முருகர்.

“ஆழ ஊடுருவும் படையணிகாறராய் இருக்குமோ?”, எனக் கேட்டான் சிவம்

.“அவங்கள் இந்தக் காட்டிலை இரவிலை துணிஞ்சு இறங்க மாட்டாங்கள். அது பாலைமரக்காடு, கரடியள் ஆக்கள் போக சத்தம் சந்தடியில்லாமல் பின்னாலை வந்து கட்டிப்பிடிச்சுப்போடும். அந்தப் பயத்திலை அந்தப் பகுதியிலை நாங்களே வலு கவனமாய்த் தானிருப்பம்”.

மீண்டும் அவர்கள் நடக்க ஆரம்பித்தனர்.

பாலைமரக்காட்டுக்குள் வந்த பின்பு முருகர் முன்னால் நடக்க இடையில் சிவத்தையும், மலையவனையும் நடக்கவிட்டுவிட்டு சோமர் பின்னால் வந்தார். கரடி பின் தொடருமானால் சோமர் அதன் வாசனையைக் கொண்டு எச்சரிக்கையடைந்து விடுவார் என்பதாலேயே அந்த ஏற்பாட்டைப் பின்பற்றினர்.

சுமார் எட்டுமணியளவில் அவர்கள் அருவியாற்றங்கரையை அடைந்துவிட்டனர். ஆற்றில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து இடையிடையே மண்திட்டுக்கள் வெளியே தெரிந்தன. முருகர் சொன்னார், “அதிலை தெரியிற வளைவிலையிருந்து ஒரு கொஞ்சத் தூரத்திலை தான் தொங்குபாலம் கிடக்குது. அதிலை அங்காலுப் பக்கம் ஒரு காவலரணும் சின்னக் காம்பும் இருக்குது”.

அவரின் குரல் “கிசு கிசு” ஒலியிலேயே வெளிவந்தது.

ஆற்றங்கரையில் இருந்த பெரிய மருத மரத்தின் பின்னால் அனைவரும் பதுங்கிக் கொண்டனர்.

முருகர் ரோச்சை பதிவாக அடித்து ஆற்றின் நடுவில் கிடந்த மணத்திட்டுக்களை உற்று நோக்கினார். அவற்றில் இரவில் முதலைகள் படுத்திருப்பதுண்டு.

ரோச்சை அணைத்துவிட்டு இராணுவ முகாம் பக்கம் முருகர் நன்றாக காதுகொடுத்துக் கேட்டார். எவ்வித சலனமும் கேட்காத நிலையில் அவர்கள் ஆற்றில் இறங்கினர். சில இடங்களில் மட்டும் நீர் இடுப்புக்கு சற்று மேல் ஓடிக்கொண்டிருந்தது.

முதலைகள் பயத்தில் இடையிடையே ரோச்சை அடித்துக் கொண்டு நீரைப் பார்த்தபடியே நடந்தனர். செம்மூக்கன் வகை முதலைகள் மனிதரையே இழுத்துக் கொண்டு போகும் வலிமை வாய்ந்தவை. லைற் அடிக்கும் போது மீன்கள் கூட்டம் கூட்டமாக நீரோட்டத்தை எதிர்த்து நீந்துவது அவர்கள் கண்களில் பட்டது. ஆற்றைக் கடந்ததும் முருகர் வேகமாக நடக்கத் தொடங்கவில்லை.

“தம்பி சிவம் இஞ்சாலை ஊர்மனை.. இப்ப நாங்கள் பின்பக்கமாய்ப் போறம்.. அதிலை ஒரு வயல்வெளி வரும் அதைத் தாண்டிடமெண்டால் அங்காலை காட்டுக்கை போய் ஆறுதல் எடுக்கலாம். எட்டி நடவுங்கோ”, என்றுவிட்டு நடையில் மேலும் வேத்தை அதிகரித்தார் முருகர்.

வயல்வெளியைக் கடந்ததும் அவர்கள் மேலும் அடர்த்தியான ஒரு காட்டுக்குள் புகுந்தனர். சிறிது தூரம் சென்ற பின்பு முருகர் இருவருடைய துப்பாக்கிகளையும் ரவைக்கூடுகளையும் வாங்கி ஒரு பற்றைக்குள் வெளியே தெரியாதவாறு மறைத்தார்.

சிவம், “ஏனப்பு?, எனக் கேட்டான்.

“இப்ப நாங்கள் போய் சின்னபர் எண்ட இந்த ஊர்க்காறன்ரை சேனையில தான் தங்கப்போறம். நீங்கள் ஆர் எண்டு கேட்டால் புதிசாய் வேட்டை பழக வந்த பொடியள் எண்டு சொல்லுங்கோ. நானும் அவரும் இரவு கதைதக்கிறதை ஒண்டும் தெரியாத ஆக்கள் மாதிரி இருந்து கவனிச்சுக் கேட்டு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கோ”, என்றுவிட்டு முன்னே நடக்கத் தொடங்கினார் முருகர்.

தங்களை சாரத்தோடும் பழைய சேட்டுடனும் வரும்படி முருகர் சொன்னதன் காரணம் இப்போது விளங்கியது.

குஞ்சுக்குளம் போன்ற காட்டுக் கிராமங்களில் சேனைப் பயிர் செய்கை கைவிடப்பட்டாலும் சின்னப்பு, போன்ற முதியவர்கள் அதில் இப்போதும் அக்கறை காட்டிவந்தனர். அது அவர்களுக்கு பயிர் செய்கைக்கு மட்டுமன்றி வேட்டைக்கும் வாய்ப்பாயிருந்தது.

காடுகளில் உள்ள கீழ்க்காடு எனப்படும் பற்றைகளையும் சிறு மரங்களையும் வெட்டித் துப்புரவு செய்துவிட்டு பெரிய மரங்களில் அடர்த்தியான கொப்புக்களை நிலத்தில் வெயில் படுமளவுக்கு மட்டும் வெட்டி விடுவார்கள். பின்பு நிலத்தைக் கொத்திப் பண்படுத்திவிட்டு கொச்சி மிளகாய் மரக்கறிகள் என்பவற்றின் விதைகளை விதைத்துவிடுவார்கள்.

சித்திரை மழையுடன் பயிர்கள் முளைத்துப் பூக்க ஆரம்பித்துவிடும். மழை காலம் முடிந்த பின்பு குஞ்சுக்குளம் வயல்களின் கழிவு நீர் பாயும் வாய்க்காலை மறித்து நீர் பாய்ச்சுவார்கள். காடெரித்த சாம்பல் பசளையில் பயிர்கள் காய்த்துக் கொட்டும். பின்பு மார்கழியில் அவற்றைப் பிடுங்கி விட்டுச் சோளம் போட்டுவிடுவார்கள்.

இரண்டு வருடங்கள் செய்துவிட்டு சேனைப் பயிர்ச் செய்கையை இன்னுமொரு இடத்தில் காட்டை வெட்டி தொடங்கிவிடுவார்கள்.

தூரத்தில் போகும் போதே சின்னப்பரின் கொட்டிலுக்கு அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு தெரிந்தது. அவ்விடத்தை நெருங்கிய போது சின்னப்பரின் இரண்டு பெட்டை நாய்களும் குரைத்துக்கொண்டு பாய்ந்து வந்தன.

“பொல்லாத நாயள், தொண்டைக் குழியிலை தான் பாயும்.. அசையாதையுங்கோ.. அப்படியே நில்லுங்கோ”, என்றார் முருகர். ஓடாமல் நின்றால் தப்ப முடியாதென்றே மலையவனுக்குத் தோன்றியது.

திடீரென நால்வர் மேலும் ஒரு பெரும் ஒளிவெள்ளம் பாயவே அவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்த குமாரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*