bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 12

சிவம் சிறிது நேரம் இருந்துவிட்டு புறப்படுவதற்குத் தயாரானான். கணேஸ் கண்களாலும், ஒரு புன்னகையாலும் விடை கொடுத்தான்.

ரூபா சிவத்துடன் வெளிவாசல் வரையும் கூடவே வந்தாள். சிவம் ஒரு மெல்லிய சிரிப்புடன், “ரூபா.. அடிக்கடி அவனுக்கு தலையை வருடி விடுங்கோ.. அப்ப தான் கெதியா சுகம் வரும்”, என்றான்.“சிவம்”, என்ற ரூபாவின் குரல் சற்று அழுத்தமாகவே ஒலித்தது.

“என்ன ரூபா?” எனக் கேட்டான் அவன். ஏன் திடீரென அவளின் குரல் அப்படி மாறியது என அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

“அவர் அந்த நிலைமையில இருந்ததால தவிர்க்க முடியாமல் அப்பிடி செய்தன் எண்டதுக்காக நக்கலடிக்கிறியள், என்ன?”

“நானோ? உங்களை நக்கலோ? என்ன ரூபா நீங்கள்…” என்று விட்டுப் பின், “ரூபா, அவன் உங்களிலை எவ்வளவு ஆழமான அன்பு வைச்சிருக்கிறான் எண்டு எனக்குத் தெரியம். அது போலை உங்கடை அன்பு எப்பிடிப்பட்டது எண்டதையும் நான் அறிவன். உன்னதமான தூய்மையான அன்பு எதையும் சாதிக்கும் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன். அவன் கெதியாய் சுகமாகி எங்களோடை நிண்டு முந்தி மாதிரி களமாட வேணுமெண்ட ஆசையில தான் அப்பிடிச் சொன்னனான்”, எனக் கூறிவிட்டு சிவம் ஒரு பெரு மூச்சை விட்டான்.

அவன் முகம் சுருங்கிவிட்டது.

அவள் சற்றுத் தடுமாறிவிட்டாள்.

“மன்னியுங்கோ சிவம்.. நான் அவசரப்பட்டு கோப்பப்பட்டிட்டன். ஆனால் அவர் களமாடுறது தான்…” என்றுவிட்டு நிறுத்தினாள் அவள்.

“ஏன்.. ஏன்.. என்ன பிரச்சினை?”

“முதுகெலும்பிலை ஏற்பட்ட தாக்கத்தாலை இனி இடுப்புக்கும் கீழை உணர்ச்சி வர வாய்ப்பில்லையாம்”

“என்ன…?”, திகைப்புடன் கேட்டான் சிவம்.

“இனி இடுப்புக்குக் கீழை எந்த உறுப்பும் இயங்காதாம்” எனக் கூறிவிட்டு,

“அவர் உயிர் தப்பினதே போதும்”, என்றாள் ரூபா.

சிவத்தால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

சில நிமிடங்கள் மௌனமாக வானத்தைப் பார்த்தாள்.

சூரியன் செந்நிறமாக அஸ்தமித்துக்கொண்டிருந்தது.

அவனையறியாமல், “நாளைக்கு சூரியன் உதிக்கும்”, என அவனின் வாய் முணு முணுத்தது.

ரூபா எதையும் புரிந்து கொள்ளமுடியாமல், “நீங்கள் என்ன சொல்லுறீங்கள்?”, எனக் கேட்டாள்.

“அவன் நடப்பான், மரணத்தை வெற்றி கொண்ட அவனுக்கு உடல் ஊனத்தை வெல்லுறது பெரிய வேலையில்லை” என்றுவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் சிவம்.

ரூபா அப்பிடியே அவன் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றாள். இரு நண்பர்களினதும் மன உறுதியும், நம்பிக்கையும் அவர்கள் ஒருவருடன் ஒருவர் கொண்ட ஆழமான நட்பும் அவளை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் தனது அன்புமட்டுமின்றி அவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் கொண்டிருக்கும் உயிர் நட்பும் கூட கணேசின் உயிரைக் காப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருக்கும் என அவள் திடமாக நம்பினாள்.

ஆனால் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த அந்த மூவருக்குமிடையே ஒரு ஆழமான அன்பு முக்கோணம் உருவாகி வருவதை அவள் அப்போது உணர்ந்து கொண்டிருக்கவில்லை.

அடுத்த நாள் காலையில் தளபதி முருக்கப்பரையும், சோமண்ணையையும் போராளிகளின் முகாமுக்கு அழைத்திருந்தார். இருவரும் வந்து வட்டக் கொட்டிலில் அமர்ந்தனர். ஒரு போராளி அவர்களுக்கு தேனீர் கொண்டு வந்து கொடுத்தான்.

உடனடியாகவே தளபதி அவர்களைக் கண்டதும் சிவத்தையும் அழைத்துக் கொண்டு வட்டக் கொட்டிலுக்கு வந்தார்.

“என்ன தம்பி வரச்சொன்னியளாம்?”, என்ற முருகப்பர் கதையைத் தொடங்கினார்.

தளபதி சுற்றிவளைக்காமல் நேரடியாகவே விடயத்துக்கு வந்தார்.

“அப்பு.. ஆமிக்காரர் காடுக்களுக்காலை பதுங்கி வந்து எங்கடை சனத்துக்கு கிளைமோர் வைக்கிறாங்கள். இதை இப்பிடியே விட ஏலாது. நீங்கள் தான் ஏதாவது உதவி செய்ய வேணும்.

முருகர் சற்று யோசித்துவிட்டு, “தம்பி.. மிருகங்கள் தங்களுக்கெண்டு சில பாதையளை வைச்சிருக்கும். நம்பி அதிலை காத்திருக்கலாம். மனுஷர் அப்பிடி இல்லைத்தானே? என்றார்.

“மிருகங்களை மடக்கிற உங்களுக்கு மனுஷரை மடக்க ஏலாதே?”

“ஏலுமோ.. ஏலாதோ.. மடக்கித்தானேயாக வேணும்.. அது எங்கடை கட்டாயத் தேவையல்லே?”

“நீங்கள் தான் வழி சொல்ல வேணும்”, என்றார் தளபதி.

“தம்பி.. ஆமிக்காரர் காடுகளை வடிவாய்த் தெரிஞ்சவங்கள் இல்லை. அவங்கள் வரை படங்களையும், கொம்பாசையும் வைச்சுக்கொண்டு தான் வர வேணும்.. அவங்கள் எந்த இடத்துக்கும் நேர பாதை பிடிச்சு வரமாட்டாங்கள்” என்றார் முருகப்பர்.

“ஏன் அப்பிடிச் சொல்லுறியள்?”

“வழியிலை சூரை முள்ளுக்காடுகள் வரும். சேத்து மோட்டையள் வரும். இதுகளை ஊடறுத்து வரமாட்டினம். விலத்தி வர வெளிக்கிட்டு கன தூரம் சுத்தவேண்டி வரும். குழுவன்கள் திரியிற பாதை பிடிச்சு வருவினமெண்டால் அது இடையில நிண்டிடும். திக்கு முக்காட வேண்டி வரும்”

“அப்பிடியிருந்தும் வந்து செய்து போட்டு போறாங்கள் தானே?” எனக் கேட்டார் தளபதி.

“உண்மை தான்.. ஏதோ முடிஞ்சளவு செய்வம். முதல் அவங்கள் வரக்கூடிய பாதையைப் பார்த்து வைப்பம்”.

“சரி நான் உங்களோடை கொஞ்சம் காடு அனுபவமுள்ள போராளியள் இரண்டு பேரை அனுப்பிறன்”, என்ற தளபதி, “சிவம்.. நீங்கள் மலையவனையும் கூட்டிக்கொண்டு இவையோட போங்கோ”, சிவத்திடம் சொன்னார்.

“சரியண்ணை,” என்றான் சிவம்.

மாலை நான்குமணிக்கு வருவதாகக் கூறிவிட்டு இருவரும் விடைபெற்றனர்.

அன்று நண்பகல் சிவம் மருத்துவப் பிரிவு முகாமிற்குப் போயிருந்தான்.

கணேசின் உடல் நிலை காலையை விட சற்று விருத்தியடைந்திருந்தது போலவே அவனுக்குப் பட்டது. அவன் போன போது ரூபாவும் கணேசின் அருகிலேயே இருந்தாள்.

சிவம், “இப்ப எப்பிடி இருக்குது?” எனக் கேட்டான்.

“கொஞ்சம் பறவாயில்லை. இப்ப கொஞ்ச நேரம் முந்தித்தான் “சஸ்ரோஜன்” கரைச்சுக் குடுத்தவை. ஒரு கொஞ்சம் குடிச்சவர். பிறகு குடிக்க ஏலாமல் போச்சுது”, என்றாள் ரூபா.

“ம்… அதே நல்ல விஷயம் தானே. இப்ப முகத்திலையும் ஒரு தெளிவு வந்திருக்கிற மாதிரிக் கிடக்குது”, என்றுவிட்டு சிவம் கணேசின் முகத்தைப் பார்த்தான்.

அவன் ஒரு முறை புன்னகைத்தான்.

பின்பு சிவம் ரூபாவைப் பார்த்து, “நீங்கள் எப்ப போகப் போறியள்”, எனக் கேட்டான்.

“அது பிரச்சினையில்லை. காலமை நான் அக்காவோடை (தளபதி) கதைச்சனான்.அவ ஒரு கிழமை நிண்டிட்டு வரச்சொல்லி அனுமதி தந்திட்டா”

“நல்லதாய்ப் போச்சுது.. நான் நாலைஞ்சு நாளைக்கு இஞ்சாலை வர ஏலாது. வேறை ஒரு வேலையாய்ப் போறன்”

ரூபா, “பறவாய் இல்லை.. இஞ்சை நான்கூடி தேவையில்லை.. மருத்துவப் போராளியள் வலு பக்குவமாய்க் கவனிக்கினம். ஆனால் நான் என்ரை மனத் திருப்திக்காகத் தான் இஞ்சை நிக்கிறன்” என்றாள்.

சிவம், மெல்ல கணேசின் தலையை வருடியவாறு,

“நான் போட்டு வரட்டே”, எனக் கேட்டான்.

அவள் ஒரு புன்னகையுடன் தலையசைத்து விடை  கொடுத்தாள்.

கணேசைப் போன்ற ஒரு திறமையுள்ள போராளி காலம் முழுவதும் வீல் செயரில் நடமாட வேண்டிய நிலை வந்து விட்டதை நினைத்த போது அவள் மனதில் ஒரு வித வேதனை வேர்விட்டது. அவன் ஒரு பெருமூச்சுடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டான்.

வாசல்வரை வந்து வழியனுப்பிய ரூபா, “போற காரியத்திலை வெற்றியோட வாங்கோ”, எனச் சொல்லி வழியனுப்பினாள்.

அவளது அந்த வார்த்தைகள் ஏதோ ஒரு விதமான புதிய உணர்வை அவனுள் எழுப்ப அவன் புதிய உற்சாகத்துடன் சைக்கிளை எடுத்தான்.

அன்று மாலை முருகப்பர் தலைமையில் சிவம், மலையவன், சோமர் ஆகியோர் காட்டுக்குள் இறங்கினர். அவர்கள் இறங்கிய இடம் கிளைமோர் வெடித்த இடத்தில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீற்றர் இருக்கும்.

சிறுத்தைப் படையணியில் இருந்த போது சிவம் காடுகளில் நீண்ட தூரம் போய்த் தாக்குதல் நடத்திவிட்டு வந்த அனுபவங்களைப் பெற்றிருந்தான். எனினும் முருகப்பரின் நடைக்கு ஈடு கொடுத்துப் பின் தொடர்வது சற்று சிரமமாகத்தான் இருந்தது.

ஏறக்குறைய அரை மணி நேரம் நடந்த பின்பு பாதை போன்று தோற்றமளிக்கும். ஆனால் அருகுப் பற்றைகளால் மூடப்பட்ட ஒரு பகுதி தென்பட்டது.

“தம்பி இது முந்திக் கள்ள மரம் ஏத்தின வண்டில் பாதை.. இப்ப பத்தையள் வளர்ந்து மூடிப்போட்டுது”, என விளங்கப்படுத்தினார்.

சிவம் குனிந்து பார்த்தான். பாதை சிறிது தூரம் சென்றதும் வளைந்து மறைந்துவிட்டிருந்தது,

முருகப்பர் பற்றைகளை விலக்கிக் கொண்டு முன்னால் நடக்கத் தொடங்கினார்.

வண்டில்கள் போன பாதைகள் நீண்டகாலமாகியும் அழியாமல் இருப்பது சிவத்துக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

சிறிது தூரம் நடந்த பின்பு முருகர் பாதையை விட்டுப்பிரிந்து அங்கு தென்பட்ட ஒரு ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினார். அவர், “இது குழுமாடுகள் தண்ணி குடிக்கப் போற பாதை”, என்றார்.

சிறிது தூரம் நடந்த பின்பு சிவம் திடீரென்று நின்று, அப்பு வடிவாய்க் காதைக் குடுத்துக் கேளுங்கோ”, என்றான்.

தொலைவில் சிங்கள சினிமாப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

“அது மடு றோட். ஆமிக்காம்ப்”, என்றார் முருகப்பர் ஒரு புன்னகையுடன்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*