nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 11

ஒரு புதிய தாக்குதல் திட்டத்தைச் சொல்லி தலைவரிடம் அனுமதி கேட்டபோது அதற்குப் பதிலாக ஐநூறு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டதென்றால் அது நிச்சயமாக ஒரு படுபிழையான திட்டமாகவே இருக்கவேண்டும் என சிவம் ஊகித்துக் கொண்டான்.அந்த அதிகாலை வேளையிலும் கூட உடல் முழுவதும் வழிந்தோடிய வியர்வையை ஒரு துணியால் துடைத்தவாறே, “சிவம்” இருங்கோ நான் அண்ணைக்கு அறிவிச்சுப்போட்டு வாறன்” என்றுவிட்டு உள்ளே போனார் தளபதி.

தலைவரிடம் தண்டனை பெறுமளவுக்கு அப்படி என்ன மோசமான திட்டமாயிருக்கும் எனத் தனக்குள்ளேயே கேள்வியை எழுப்பியவாறு காத்திருந்தான் சிவம்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த தளபதி, “இண்டைக்கு இரண்டு மணிக்கு முக்கியமான ஒராள் வாறாராம். அணிப் பொறுப்பாளர்கள் எல்லாரையும் கூப்பிட்டு வைக்கட்டாம் எண்டு அண்ணேன்ர செயலாளரின்ர இடத்தில இருந்து செய்தி வந்திருக்குது”, என்றுவிட்டு மற்றக் கதிரையில் அமர்ந்தார்.

அப்படியெல்லாம் கூட்டம் கூட்டி விளக்கமளிக்குமளவுக்கு தளபதி சொன்ன திட்டம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ஆவல் உந்தித் தள்ளிய போதும் சிவம் அவரிடம் அது பற்றி எதுவும் கேட்கவில்லை.

அவர் தானாகவே மெல்ல ஆரம்பித்தார். “செட்டிகுளத்துக்கு அங்காலை ஒரு சிங்களவர் குடியிருக்கிற கிராமம் இருக்கல்லே?”

அந்தக் கிராமத்தில் வீதியின் ஒரு புறம் தமிழரும் மறுபுறம் குடியேற்றப்பட்ட சிங்களவரும் இருந்ததையும், பின்பு தமிழர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதையும் சிவம் அறிந்திருந்தான்.

தளபதி தொடர்ந்தார், “இந்த ஆழ ஊடுருவும் இராணுவப் படையணி எங்கடை சனத்தைக் கொல்லுற மாதிரி எங்கடை ஒரு அணியையும் அதுக்கை இறங்கிச் சிங்களச் சனத்தை சுட்டுத்தள்ளினால் நல்ல பாடமாய் இருக்கும் எண்டு யோசிச்சு அண்ணையைக் கேட்டன். தங்கடை சனத்தை நாங்கள் அழிச்சால் பயத்திலை எங்கடை சனத்திலை கை வைக்கிறதை விட்டிடுவங்கள் எண்டு நினைச்சன்”

“அண்ணை என்ன சொன்னவர்?”

“பெரிசா ஒண்டும் சொல்லே்ல.. ஐநூறு தோப்பு போடச் சொன்னவர்”, என்றுவிட்டுச் சிரித்தார் தளபதி.

“நாங்களும் சாதாரண சனத்திலை கை வைச்சால் அவங்களுக்கும் எங்களுக்கும் பிறகு என்ன வித்தியாசம்?”

“ஓமோம்.. இப்ப தான் நானும் அதை யோசிக்கிறன். சரி நீங்கள் போய் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கோ”, என்றுவிட்டு எழுந்தார் தளபதி.

சரியாக இரண்டு மணிக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் வந்திறங்கியபோது முக்கிய போராளிகள் அனைவரும் பாலைமர நிழலில் கூடியிருந்தனர்.

அவர் சில நிமிடங்கள் தளபதியிடம் ஏதோ கதைத்துவிட்டு மாவீரர் வணக்கத்துடன் கூட்டத்தை ஆரம்பித்தார்.

முதலில் முள்ளிக்குளம்  முகாம் தாக்குதல் சாதனைகள் தொடர்பாக தலைவர் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக கூறும்படி சொல்லிவிட்டதை தெரிவித்தார். அத்துடன் தான் தலைவரின் சார்பில் முக்கியமான விளக்கம் ஒன்றைத் தரப்போவதாகச் சொல்லி அவர் உரையைத் தொடர்ந்தார்.

“தளபதிகளிலிருந்து சாதாரண போராளிகள் வரை மக்களுக்கும் எதிரிகளுக்குமிடையிலான வித்தியாசம் பற்றி தெளிவாக இருக்க வேண்டும். தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் எந்த மக்களும் எங்கள் எதிரிகளல்ல. எங்களுடைய எதிரிகள் இனவாத அரசியல் அதிகார பீடங்களும் ஆயுதப் படைகளும் தான்.

நாங்கள் இனவாதிகள் அல்ல. இனவாதிகள் தான் இன்னொரு இனத்தையே வெறுப்பவர்கள். நாங்கள் விடுதலைப் போராளிகள். நாங்கள் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடவே போராடுகிறோம். அதே ஒடுக்குமுறையாளர்கள் சிங்கள மக்களையும் பொருளாதார வழிகள் மூலம் ஒடுக்குகிறார்கள். சிங்கள மக்கள் அதை உணரும் போது எங்கள் போராட்டத்தின் நியாயங்களையும் புரிந்துகொள்வார்கள்.

சிங்களப் படையினர் எமது மக்களை அழிக்கிறார்கள் என்பதற்காக நாம் சிங்கள மக்களை அழித்தால் நாம் விடுதலைப் போராளிகள் என்ற நிலையிலிருந்து இறங்கி இனவாதிகளாக நிலை தாழ்ந்து விடுவோம்.

அதனால் தான் உங்கள் தளபதி ஒரு சிங்கள கிராமத்தின் மீது தாக்குதல் தொடுக்க தலைவரிடம் அனுமதி கேட்ட போது அதை நிராகரித்ததுடன் அவருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது.

ஆழ ஊடுருவும் படையணி மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களை நிறுத்த நாங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்துவதுடன், மக்களின் ஒத்துழைப்பையும் பெறவேண்டும்”

அவர் பேசி முடித்து அமர்ந்ததும் ஒரு அமைதி நிலவியது. அவர் சில வசனங்கள் மூலமாகவே பல விஷயங்களைத் தெளிவுபடுத்தி விட்டதாக சிவம் உணர்ந்து கொண்டான்.

ரணகோஷ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து மடுக் கோவிலில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது இராணுவம் எறிகணை வீசியதில் பல மக்கள் உடல் சிதறி இறந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டான். புனித மாதாவின் ஆலயத்தில் ஓடிய மக்களின் குருதி அவனைக் கோபாவேசமடைய வைத்தது. மடுத் திருவிழாவுக்கு வரும் சிங்களவரையெல்லாம் வெட்டிக் கொன்று பழி தீர்க்கவேண்டுமென நினைத்துக் கொண்டான்.

ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு மடுவுக்கு வந்த சிங்களவர்களுக்குச் சகல பாதுகாப்புக்களையும், வசதிகளையும் வழங்கியது அவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போ அதன் அடிப்படையையும் அர்த்தத்தையும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது.

அரசியல்துறைப் பொறுப்பாளர் மேலும் சிறிது நேரம் இருந்து போராளிகளின் கேள்விகளுக்கெல்லாம் விளக்கமளித்துவிட்டுப் புறப்பட்டார்.

அப்போது ஒரு புதிய போராளி ஓடி வந்து, “அண்ணை எனக்குத் தலைவரைப் பார்க்க ஆசையாய் கிடக்குது. கூட்டிக்கொண்டு போவியளே?, எனக் கேட்டான்.

அவர் சிரித்தவாறே, “ஓ.. நீங்கள் சண்டையிலை ஒரு சாதனை செய்யுங்கோ… அண்ணையே கூப்பிட்டு உங்களுக்குப் பரிசு தருவார்”, என்றுவிட்டு வாகனத்தில் ஏறினார்.

அவனும் திருப்தியடைந்தவனாக தலையை ஆட்டினான்.

கூட்டம் நிறைவடைந்த பின்பு சிறு சிறு வேலைகளைச் செய்து முடிக்க நேரம் ஐந்து மணியாகிவிட்டது. சிவம் அவசரமாகக் கணேஷைப் பார்க்கப் போகத் தயாராகிக் கொண்டிருந்த போது புனிதன் ஓடிவந்தான்.

“அண்ணை, ரூபாக்கா உங்களை உடன தொடர்பு எடுக்கட்டாம்”

சிவத்தின் நெஞ்சு ஒரு முறை அதிர்ந்தது. கணேசுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்ற அச்சம் அவனை குழப்பமடைய வைத்தது.

“சரி.. நான் எடுக்கிறன்”, என்றுவிட்டு வோக்கியை இயங்கு நிலைக்கு கொண்டு வந்து ரூபாவுக்குத் தொடர்பெடுத்தான்.

“ரூபா.. ரூபா.. சிவம்… ரூபா.. ரூபா.. சிவம்”

எதிர்த்தரப்பிலிருந்து பதில் வந்தது.. ஓமோம்.. சிவம்.. மற்றதுக்கு வாங்கோ..”

சிவம் மற்றய இலக்கத்துக்குப் போனான்.

“ரூபா.. ரூபா..சிவம்.. ரூபா.. ரூபா.. சிவம்”

“ஓமோம்.. சிவம் .. ஒரு சந்தோசமான செய்தி”

“சொல்லுங்கோ.. என்னது? சிவம் அவசரப்படுத்தினான்.

“கணேஷ்.. ஆபத்தான கட்டத்தைத் தாண்டியிட்டான். செயற்கைச் சுவாசம் அகற்றியாச்சுது.. இப்ப இயல்பாக மூச்சுவிடுறார்.. ஓவர்”

சிவத்தால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை. அவனையறியாமலே அவன் கண்கள் கலங்கி விட்டன. சில நிமிடங்கள் அவனால் எதுவுமே பேசமுடியவில்லை”

பின்பு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “எதிரியள் மட்டுமில்லை சாவு கூட அவனிட்ட தோற்றுப் போச்சுது” நான் கொஞ்ச நேரத்திலை அங்க கிடைச்சிடுவன்”, என்றுவிட்டு வோக்கியை நிறுத்தினான்.

அவன் சைக்கிளை எடுத்து வேகமாக மிதிக்க ஆரம்பித்தான். எவ்வளவு வேகமாக மிதித்த போதும் அது மிகவும் மெதுவாகப் போவதாகவே அவனுக்குத் தோன்றியது.

வழியில் முதியவர் ஒருவர் சில மாடுகளைச் சாய்த்துக் கொண்டு வந்தார். அவை கூட ஏதோ ஒருவித சந்தோசத்துடன் போவதாகவே அவனுக்குத் தோன்றியது. தலைக்கு மேலே நீண்டிருந்த தெருவோர மரக்கிளைகளில் அமர்ந்திருந்த புள்ளினங்களின் கீச்சொலிகள் கூட கணேஸ் உயிர் பிழைத்தமைக்காக வாழ்த்திசைப்பதாகவே அவனுக்குப் பட்டது.

அவன் மருத்துவப்பிரிவு முகாமை அடைந்த போது ரூபா அவனுக்காக வாசலில் காத்து நின்றான். அவன் போய் இறங்கியதும் ஒரு மெல்லிய துள்ளலுடன் அவனை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.

சிவத்தைக் கண்டதும் கணேஸ் கண்களை மட்டும் அவன் பக்கம் திருப்பி அவனைப் பார்த்தான். அவனின் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடியது. சிவம் மெல்ல அவனின் தலையை வருடிவிட்டான்.

கணேஸ் வாயைத் திறந்து ஏதோ கதைக்க முயன்றான். இதழ்களும், நாவும் அசைந்த போதும் வார்த்தைகள் எவையும் வெளிவரவில்லை. மீண்டும் ஒரு புன்னகையுடன் தன் பேச்சு முயற்சியை அவன் நிறுத்திக் கொண்டான்.

ரூபா சொன்னாள், “மத்தியானம் போல என்னைக் கூப்பிட்டு தன்ரை தலையை வருடி விடச் சொல்லி கையால சைகை காட்டினார். நானும் தலையை வருடி விட்டன். அவரின்ர கண்களில நீர் வடிஞ்சுது. அப்பிடியே நித்திரையானவர் கனநேரமாய் எழும்பவேயில்லை.

“பிறகு”

அவர் கனநேரமாய் எழும்பாமலிருக்க பயந்து போனன். ஓடிப்போய் டொக்டரைக் கூட்டி வந்தன். அவர் சோதிச்சுப் போட்டு ஆபத்தான கட்டம் தாண்டியிட்டுது எண்டு போட்டு செயற்கைச் சுவாசத்தைக் கழட்டி விட்டார்.

சிவம் ஒரு மெல்லிய சிரிப்புடன்  சொன்னான், “உங்கடை அன்பு தான் அவனுக்குச் சரியான வைத்தியம் போலை”

அவன் எல்லையற்ற மகிழ்வில் திளைத்த போதும் ஒரு அதிர்ச்சி செய்தி அவனுக்காகக் காத்திருந்தது என்பதை அவன் அப்போது தெரிந்திருக்கவில்லை.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*