bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 10

ஆசிரியையும் அவரின் கணவரும் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி பாலம்பிட்டி, மடு, பண்டிவிரிச்சான் என எல்லாக் கிராமங்களிலும் பரவிவிட்டது. எங்கும் ஒரு அச்சம் கலந்த பரபரப்பே நிலவியது.அன்று பரமசிவம் நேரத்துக்கே மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்து பட்டியில் அடைத்துவிட்டு முற்றத்துக்கு வந்தபோது சுந்தரசிவம் அங்கு காணப்படாததால் அவன் எங்கு போயிருப்பான் என்ற கேள்வி அவருக்கு எழுந்தது.

“இஞ்சரப்பா, உவன் தம்பி எங்கை போட்டான்?” எனப் பலமாகக் கேட்டார்.

அடுக்களைக்குள்ளிருந்த பார்வதி, “காலமை பெருமாளைக் கொண்டு போய் பண்டிவிரிச்சானிலை விட்டவனல்லே; ஏத்திவரப் போட்டான்”, என்றாள்.

“சரி, சரி.. பொடியளோட சேர்ந்து அவனை கண்டபடி திரியவேண்டாமெண்டு சொல்லு.. மோட்டச்சைக்கிளுக்கே குண்டுவைக்கிறாங்கள்… நம்பேலாது.. இனி சைக்கிளுக்கும் வைப்பங்கள்” என்றார்.

“பாழ்படுவார்.. வாத்தியார் பெட்டையும் புருஷனும் அவங்கள என்ன கேட்டதுகளாம்? கொண்டுவாற குண்டு வெடிச்சுத்தான் உவங்கள் துலைவாங்கள்” என வாய் நிறையச் சாபம் போட்டாள் பார்வதி.

“ம்.. நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. இரவு ரேடியோவில இரண்டு பெரிய புலியளைக் கொண்டுபோட்டம் எண்டு செய்தி சொல்லுவங்கள்”

“அவங்கட பொய்யளைக் கேக்கத்தானே அநியாய விலைக்கு பற்றி வேண்டி காலமையும் பின்னேரமும் காதுக்கை வைக்கிறியள்”, எனச் சீறினாள் பார்வதி.

“அவங்கட பொய்யிலயிருந்து உண்மையைக் கண்டுபிடிக்கிறது தான் என்ர கெட்டித்தனம்”

“ஓ.. ஓ.. உண்மையைக் கண்டுபிடிச்சுத்தான் அவங்களைக் கலைக்கப் போறியள்?”

“கலைக்கிறமோ இல்லையோ எண்டு இருந்து பார்”, எனச் சவால் விட்டு கடையை நோக்கிப் புறப்பட்டார் பரமசிவம்.

முத்தையா கடையிலும் எல்லோர் வாயிலும் கிளைமோர் பற்றிய கதையே பிரதான இடத்தைப் பிடித்திருந்தது.

காடேறி முருகர், “நான் உந்தக் காடு கரம்பையெல்லாம் வேட்டைக்குத் திரியிறன் – என்ரை கண்ணிலை ஒரு நாளும் படுறாங்களில்லையே?”, எனச் சலித்துக் கொண்டார்.

“கண்ணில பட்டால் அதை இஞ்சை வந்து சொல்ல அவங்கள் உன்ன உயிரோடை விட்டால் தானே?”, எனக் கிண்டலடித்தார் முத்தையா,

“டேய், நான் வேட்டைக்குப் போகேக்கை வெறுங்கையோடையே போறனான். அவங்களிலை இரண்டு பேரை விழுத்த மாட்டனே? என்றார் முருகர்.

முருகரின் வெடிவைக்கும் திறமையைக் கண்டு ஏனைய பல வேட்டைக்காரர்களே அதிசயப்பட்டதுண்டு. எவ்வளவு வேகமாக ஓடக்கூடிய மிருகமும் அவரின் தோட்டாவுக்குத் தப்பிவிட முடியாது. நெல்லுக்குள் புகுந்த பன்றியை நெல்லு அசையும் ஒலியைக் கேட்டே குறி தவறாமல் வெடிவைத்து விடுவார். வில்பத்திலிருந்து மணலாறு வரையும் எந்த இடத்தில் என்ன மரம் உண்டு என்பதையோ எங்கு எந்த மிருகங்கள் கூடுதலாக உலவும் என்பதையோ துல்லியமாகச் சொல்லிவிடுவார். காற்றில் வரும் மணத்தை வைத்தே அண்மையில் நிற்கும் மிருகம் எதுவென்று கண்டுபிடித்து விடுவார். அவர் சாதாரண நாட்டுத்துவக்கிலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் தோட்டா மாற்றி குறி தவறாமல் வெடிவைத்து விடுவார். அதனால் தானோ என்னவோ அவருக்குப் பெயருக்கு முன்னால் காடேறியைச் சேர்த்துவிட்டனர்.

“நீ செய்வாய் எண்டு தெரியும்… எண்டாலும் காடு வழிய திரியிறது அவதானமா திரி” என அக்கறையுடன் எச்சரித்தார் பரமசிவம்.

“அவங்கள் என்னைக் காணமுந்தி மணத்திலை நான் அவங்கள் திரியிற இடத்த அறிஞ்சிடுவன். பிறகென்ன மரம் பத்தையெல்லாம் சுடும்”, என்றுவிட்டுக் கடகடவெனச் சிரித்தார் முருகர்.

“எல்லா நேரமும் உனக்குக் காத்துவளம் பாத்தே அவங்கள் வருவங்கள்?”

“அது சரி தானே.. ஆட் காட்டி சொல்லித்தரும்.. குரங்கு பாயுறதை வைச்சே ஆக்கள் வாறதை அறிஞ்சிடலாம்”,

ஒரு மனிதனின் அனுபவமும் தான், செய்யும் தொழிலில் காட்டும் அக்கறையும் எப்படி அவனை அந்தத் துறையில் மிகப் பெரிய அறிவாளியாக்கிவிடுகிறது என நினைத்து வியந்தார் பரமசிவம்.

“உந்த மடுக்காடு எப்பவும் பயம் தான். எவ்வளவு தூரத்தையெண்டு பெடியளும் பாக்கிறது?” எனக் கூறி ஒரு பெருமூச்சு விட்டார் முத்தையா.

“ஓமோம்.. வேட்டைக்குப் போற நாங்களும் உந்த விஷயத்தில கொஞ்சம் கவனமெடுக்கத்தான் வேணும் என்றார் முருகர்.

சுந்தரசிவம் பெருமாளைக் கொண்டுவந்து இறக்கிய போது முத்தம்மா வெளியே வந்து வீதியைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் பெருமாளின் வருகையை எதிர்பார்த்து வீதிக்கு வந்தபோதும் சுந்தரத்தைக் காணாது அவளின் மனம் துடித்ததை அவளால் உணர முடிந்தது.

 பெருமாள் எவரும் பிடிக்காமலே தானாகவே சைக்கிளில் இருந்து இறங்கினார். இப்போ அவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்.

மருத்துவப் பிரிவு முகாமில அவருக்கு சிகிச்சையளித்ததுடன் பம்மில் போட்டு சுவாசத்தின் போது பயன்படுத்தும் குளிசை அட்டைகளும் கொடுத்துவிட்டிருந்தனர்.

பெருமாள், “தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்கோ தம்பி”, எனச் சுந்தரத்தை அழைத்தார்.

“இப்ப வேண்டாம்”, என்றார் சிவம்.

“அவர் எங்கட வெறுந்தேத்தண்ணி குடியாரப்பா”, என்றாள் முத்தம்மா கேலி கலந்த குரலில்.

“உன்ரை கையால தந்தால் வெறுந்தண்ணியும் பாலைவிட நல்லாயிருக்கும்”, எனச் சொல்ல நினைத்தவன் அதை அடக்கிக் கொண்டு, “ம்.. நக்கல்… என்ன?” எனக் கேட்டான்.

“பின்னை.. சைக்கிளோடி களைச்சுப் போய் வாறியள் எண்டு தேத்தண்ணி குடிக்கச் சொன்னால்…”

“களைப்பு இல்லை.. எண்டாலும் நீ கேக்கிறதால குடிப்பம்..” என்றுவிட்டு அவன் சைக்கிளை ஸ்ராண்டில்  விட்டான்.

அவனின் முகத்தை நோக்கி ஒரு புன்னகையைத் தவழ விட்டு குசினியை நோக்கிப் போனாள் முத்தம்மா.

முத்தமா, தாய், தகப்பன், இளைய சகோதரங்கள் எல்லோரும் எப்பிடி அந்த சிறிய குடிசையில் தங்குகிறார்கள் என எண்ணி வியப்படைந்தான் சுந்தரம்.

முத்தம்மாவின் தம்பி ஒரு மாங்காயைக் கடித்து தின்று கொண்டு அங்கு வந்தான். சுந்தரத்திடம் அவன்,

“தமிழ்த் தினப் போட்டிக்கு ரீச்சர் நாடகம் பழக்கினவா, நானும் நடிக்கிறன்” என்றான் அவன்.

அவன் படிப்பிலும் நல்ல கெட்டிக்காறன் என முத்தம்மா அடிக்கடி சொல்வதுண்டு.

கொஞ்சம் வயது வந்ததும் படிப்பை நிறுத்திவிட்டுக் கூலி வேலைக்குப் போவது தான் அவர்கள் வழக்கம். ஆனால் முத்தம்மா எப்படியாவது அவனை நன்றாகப் படிப்பிக்க வைக்கப் போவதாக அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.

முத்தம்மா தேனீர் கொண்டுவந்து நீட்டினாள்.

“எப்பிடி நல்லாய் படிக்கிறானே?”

“ஓ.. இந்த முறை இரண்டாம் பிள்ளை”, எனப் பெருமிதத்துடன் சொன்னாள் முத்தமா, அவள் கதவு நிலையைப் பிடித்துக் கொண்டு அவன் தேனீர் அருந்துவதை விழிகளால் விழுங்கினாள். மனம் இனம் புரியாத மகிழ்வில் குதித்தது.

சிவம் அதிகாலை நான்கு மணிக்கே தூக்கம் கலைந்து எழுந்துவிட்டான். அவசர அவசரமாக காலைப் பயிற்சிகளை முடித்துவிட்டு தளபதியின் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனின் மனம் ஒரு புறம் விடைகாண முடியாத குழப்பத்திலும் மறுபுறம் அடக்க முடியாத ஆவலிலும் தத்தளித்துக்கொண்டிருந்தது. கணேசுக்கு என்ன ஆகுமோ என்ற தவிப்பு எழுந்து அவனைக் குழப்பியது. தற்செயலாக அவன் வீரச்சாவடைந்தால் என்பதை நினைத்த போது அதை அவனால் தாங்கவே முடியில்லை. அதே வேளையில் ஆழ ஊடுருவும் படையணியினரின் நடவடிக்கைகளை நிறுத்தத் தளபதி என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை அறியும் ஆவலும் அவனைப் பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.

அவன் தளபதியின் இடத்தை அடைந்த  போது அவர் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருந்தார். ஒரு போராளி அருகில் நின்று எண்ணிக்கொண்டிருந்தான்.

சிவம் ஒன்றும் புரியாதவனாக அப்படியே நின்றுவிட்டான்.

ஐநூறு எண்ணி முடிந்ததும் தளபதி தோப்புக்கரணத்தை நிறுத்தினார். சிவம் அருகில் போனான்.

“என்னடாப்பா.. பாக்கிறாய்.. பணிஸ்மென்ற செய்தனான்”,

என்றார் தளபதி புன்னகையுடன்.

“ஏனண்ணை?” என வியப்புடன் கேட்டான் சிவம்.

“ஆழ ஊடுருவும் படையணி பற்றி என்ரை திட்டத்தை அண்ணைக்குச் சொன்னன். அவ்வளவு தான், இரவு தண்ணி கூடக் குடியாமல் படுத்திட்டு, காலமை எழும்பி ஐநூறு தோப்படிச்சுப் போட்டு தன்னோட தொடர்பு எடுக்கச் சொன்னார்”, என்றார் தளபதி.

சிவத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*