bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 08

சுந்தரசிவம் பெருமாள் வீட்டுக்குப் போன போது ஆஸ்மா காரணமாகப் பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அந்தச் சிறு குடிசைக்கு வெளியே நிற்கும் போதே மூச்சிழுக்கும் ஒலி சுந்தரத்தின் காதில் விழுந்தது.அவன் குடிசைக்குள் போன போது முத்தம்மா ஒரு போத்தலில் சுடுநீரை விட்டு அவரின் நெஞ்சில் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

“எழும்புங்கோ, ஆஸ்பத்திரிக்குப் போவம்”, என்றவாறே கையைக் கொடுத்துத் தூக்கிவிட்டான் சுந்தரம். அவரால் நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை. முத்தம்மா ஒருபுறமும் அவன் ஒரு புறமுமாகப் பிடித்து வெளியே கொண்டு வந்தனர்.

“எப்பிடித் தம்பி சைக்கிளிலை இருக்கிறது?” என இழைத்தவாறே கேட்டார் பெருமாள்.

“இது பெரிய கரியல்தானே.. நீங்கள் மெல்லமா ஏறி என்னை பிடிச்சுக் கொண்டு இருங்கோ நான் கொண்டுபோவன்”, என்றுவிட்டு சைக்கிளில் ஏறினான் அவன். பெரும் மரவெள்ளிக் கிழக்கு மூட்டையை ஏற்றி இழுக்கும் அவனுக்கு அவரைக் கொண்டு போவது அவ்வளவு சிரமமாகப்படவில்லை.

முத்தம்மாவும் வேலம்மாவும் மிகச் சிரமப்பட்டு அவரைக் கரியலில் ஏற்றிவிட்டனர்.

“கவனம்”, என்றுவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான் சுந்தரம். முன்பு மேடும் பள்ளமுமாகப் படுமோசமாக இருந்த வீதியை போராளிகள் கிரவல் போட்டுத் திருத்தியிருந்தனர். பாலம்பிட்டியிலிருந்து பண்டிவிரிச்சான் மருத்துவப்பிரிவு முகாம் வரை வீதி திருத்தப்பட்டிருந்தது.

பெருமாள் மூச்சை உன்னி இழுக்கும் போது சிறிது ஆட்டினாலும் சுந்தரம் சமாளித்து கவனமாக ஓடினான்.

அவர்கள் மடுவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவ நிலையத்தை அடைந்தபோது மருந்தாளராக ஒரு இளம் பெண் மட்டுமே நின்றாள்.

அங்கு மருத்துவர்  திங்களும் வெள்ளியும் மட்டுமே வருவார். மற்ற நாட்களில் சிறு வைத்திய உதவிகளை அவளே செய்வதுண்டு.

உடனடியாகவே அவள் ஒரு சிறுபம்மில் அஸ்தலின் குளிசைகளை போட்டு  இழுக்கக் கொடுத்தாள். சில நிமிடங்களில் இழுப்பு சற்று குறைந்தது.

அவள் அவனிடம், “அண்ணா! இது கொஞ்ச நேரம்தான் தாங்கும். இவரை நீங்கள் இலுப்பைக்கடவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறது தான் நல்லது. அங்க “கேஸ்” பிடிச்சு விடுவினம் என்றாள்.

அவன் தயக்கத்துடன், “இலுப்பைக்கடவை கொஞ்ச நஞ்ச தூரமே? அவ்வளவுக்கு இவர் சைக்கிளில இருந்து கொள்ள மாட்டார்”, என்றான்.

அவள் சில விநாடிகள் யோசித்துவிட்டு, “பரவாயில்லை, நீங்கள் பண்டிவிரிச்சான் மருத்துவப் பிரிவுக்குக் கொண்டு போங்கோ” என்றாள்.

“அவை, வெளி ஆக்களுக்கு…?” என்று இழுத்தான் அவன்.

“கடுமை எண்டால் கவனிப்பினம். நீங்கள் யோசியாமல் கொண்டுபோங்கோ!” என்றாள் அவள்.

அதற்கிடையில் முத்தம்மாவும் வீதியால் வந்த உழவுஇயந்திரம் ஒன்றில் வந்துவிட்டாள். சிவம் பெருமாளையும் உழவுஇயந்திரப் பெட்டியில் ஏற்றிவி்டடு, “நீங்கள் போய் மெடிக்ஸ் முன்னால இறங்குங்கோ” நான் பின்னால சைக்கிளில வாறன்”, என்றுவிட்டு சைக்கிளை எடுத்தான்.

அவர்களும் போய் இறங்க சுந்தரமும் வேகமாக மிதித்து அங்கு போய் சேர்ந்துவிட்டான்.

அவர்கள் உள்ளே போனதும், “என்னண்ணை?”, எனக் கேட்டு கொண்டு வந்த ஒரு போராளி பெருமாளைக் கண்டதும் நிலைமையை விளங்கிக் கொண்டு, “உதிலை இருங்கோ, அண்ணை வருவார்”, என்றுவிட்டு உள்ளே போனான்.

சில நிமிடங்களில் அங்கு வந்த மருத்துவப் போராளி பெருமாளை சோதித்துப் பார்த்துவிட்டு, உள்ளே அழைத்துப் போனான்.

மருத்துவ அறையில் ஒரு கதிரையில் இருத்திவிட்டு முகமூடியைப் போட்டு “காஸ்” கொடுக்க ஆரம்பித்தான்.

வெளியே இருந்த சுந்தரம் முத்தம்மாவிடம், “ஏன் இவர் பம் இழுக்கிறேல்லயே?” எனக் கேட்டான்.

“இழுக்கிறவர்! போனமுறை இலுப்பைக்கடவைக் கிளினிக்கில பம்முக்கு போடுற குளிசை முடிஞ்சுதெண்டு கடையில வேண்டச் சொல்லீட்டாங்கள்”,

“வேண்டியிருக்கலாமே…”

“எங்கை வேண்டுறது.. அது வேண்ட ஜெயபுரம் தான் போகவேணும்”

மருத்துவமனைகளுக்குப் போதிய மருந்துகளைக் கூட அனுமதிக்காத படையினரின் கீழ்த்தரமான செய்கைகளை நினைத்த போது அவனுக்கு ஆத்திரமாத்திரமாக வந்தது. எனினும் அவசர நேரங்களில் உதவும் போராளிகளை நினைத்த போது மனதில் ஒரு வித ஆறுதல் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அங்கு வந்த மருத்துவ போராளி, “அண்ணை ஐயாவுக்கு மத்தியானம் ஒருக்காலும் பின்னேரம் ஒருக்காலும் காஸ் பிடிக்கவேணும். அவர் அந்த வட்டக்கொட்டிலில படுத்து ஆறுதல் எடுக்கட்டும். நாங்கள் சாப்பாடு குடுக்கிறம்.. நீங்கள் போட்டுப் பின்னேரம் வந்து ஏத்துங்கோவன். போகேக்கை பம்மிலை போட்டு இழுக்கிற மருந்து தந்து விடுறன்”, என்றான்.

சுந்தரம் முத்தம்மாவை பார்த்தான். அவள், “போட்டுப் பிறகு வருவம்”, என்றாள்.

வெளியே வந்த சுந்தரம் சைக்கிளில் ஏறி அமர்ந்தவாறே, “ம்.. ஏறு” என்றான்.

“நீங்கள் போங்கோ.. நான் மெல்ல மெல்ல நடந்து வாறன்” என்றாள் முத்தம்மா மெல்லிய தயக்கத்துடன். அவளின் கண்களில் ஒருவித மிரட்சி இருந்தது.

“ஏய்.. இப்பிடி இரண்டு பேரும் ஒண்டாய்ப் போற சந்தர்ப்பம் எங்களுக்கு கிடையாது. வா.. ஏறு?”, எனத் தாழ்ந்த குரலில் அதட்டினான்.

“அப்பிடி சந்தர்ப்பம் எனக்குத் தேவையில்லை”

அவன் அவளின் முகத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “உண்மையா வேண்டாமோ?”

அவள் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

அவன் மீண்டும் கேட்டான், “சொல்லன். உனக்கு என்னில விருப்பம் இல்லையே?”

அவள் தயக்கத்துடன், “விருப்பமில்லையெண்டில்லை… ஆனால்…”

“ஆனால்.. என்ன சொல்லு?”

“நிறைவேற முடியாத ஆசைகளை வளர்க்கக் கூடாது எண்டு தான் நினைக்கிறன்”

“நீங்கள் மலையகம்… நாங்கள் மன்னார்.. அதால தானே சொல்லுறாய்?”

அவள் பயந்த விழிகளுடன் அவனையே பார்த்தாள்.

அவன்.. “நாங்கள் எல்லாரும் தமிழர் தான்.. ஏறு இப்ப,” என்றான்.

அவனின் கட்டளையை அவளால் மீற முடியவில்லை.

சைக்கிள் ஓட ஆரம்பித்தது.

அவள் அவனில் முட்டாதவாறு சற்று விலகி கரியலின் பின்புறமாகவே அமர்ந்திருந்தாள்.

அவர்கள் இருவருமே எதுவும் பேசவில்லை. ஆனால் அவனோ சைக்கிளின் ஹான்டிலை பிடித்தபடி வான வீதியில் பறந்துகொண்டிருந்தான்.

இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கிய போதும் கூட சங்கரசிவம் அதிகாலையிலேயே விழித்துவிட்டான். காலைப் பயிற்சிகளை முடித்துவிட்டு சாப்பிட இருந்த போதும் ஏனோ சாப்பாடு இறங்க மறுத்தது. செயற்கைச் சுவாசத்துடன் கண்களை மூடிப் படுத்திருந்த கணேசின் உருவமே கண்களில் வந்து நின்றது.

அவன் கையைக் கழுவி விட்டு தளபதியிடம் போன போது அவர்,

“என்ன சிவம், நீங்கள் இன்னும் கணேசிட்ட போகேல்லயே?” எனக் கேட்டார்.

“இல்லையண்ணை.. இனித்தான் போகப் போறன். உங்களிட்ட சொல்லிப் போட்டுப் போகத்தான் வந்தனான்”.

“காலமை இரண்டு போராளியளை அனுப்பினனான். மயக்கம் வாறதும் தெளியிறதுமாய் இருக்குதாம். எதுக்கும் நீங்கள் போட்டு வாங்கோ”, என்றார் அவர்.

“சரியண்ணை”, என்றுவிட்டு வெளியே வந்தான் சிவம்.

மயக்கம் வருவதும் தெளிவதுமாக இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட போது மரணத்தைக் கூட அவன் வெற்றி கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறான் என்றே சிவத்துக்கு தோன்றியது.

அவன் மரணத்தை வெற்றி கொள்வான் எனச் சிவம் திடமாக நம்பினான்.

அவன் புறப்படச் சைக்கிளை எடுத்த போது ஓடி வந்த புனிதன், “அண்ணை..உங்களை மெடிக்சுக்கு உடன வரட்டாம்”, என்றான்.

சிவம் திடுக்கிட்டு, “ஏன்.. ஏனாம்?” எனக் கேட்டான்.

“ஏனெண்டு தெரியேல்ல.. ரூபாக்கா தான் கதைச்சவா”,

“ம்… ரூபா வந்திட்டாளே.. சரி நான் போட்டுவாறன்” என்றுவிட்டுப் புறப்பட்டான் சிவம்.

(தொடரும்)

தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*