bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 06

சங்கரசிவத்தின் கால்கள் சைக்கிளை வேகமாக மிதித்துக்கொண்டிருந்த போதிலும் அவனின் மனம் கணேசனையே சுற்றிக்கொண்டிருந்தது. அவன் இன்னும் உயிராபத்தான நிலைமையைத் தாண்டாவிட்டாலும் போராளிகளுக்கு இயல்பாகவே உள்ள மனவலிமை அவனைக் காப்பாற்றிவிடும் என சிவம் முழுமையாக நம்பினான்.

அவன் மடுக்கோவிலைத்தாண்டியபோது வீதிக்கரையில் அமைந்திருந்த அந்தப் பெரிய கட்டுக்கிணற்றில் ஏராளமான ஆண்களும் பெண்களும் இருபுறமும் நின்று குளித்துக்கொண்டிருந்தனர். அந்த அகதி வாழ்வு பகிரங்கமான இடங்களில் குமர்ப்பிள்ளைகள் கூட நின்று குளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டதை நினைத்த போது நெஞ்சில் ஏதோ செய்தது. ஒரு நீண்ட பெருமூச்சு அவனுள்ளிருந்து வெளிப்பட்டது.

வீதியில் அங்குமிங்கும் மாடுகள் படுத்திருந்தன. தம்பனையில் பட்டி பட்டியாக நின்ற அவை கூட அகதிகளாகி வீதி வீதியாகப் படுத்திருந்தன.

தட்சினாமருதமடு பொது நோக்கு மண்டபத்தில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். நடுவில் ஒரு மேடையில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்கள் வைக்கப்பட்டிருந்தன. மக்கள் ஒவ்வொருவராக மலர்தூவி அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். பெண்கள் அஞ்சலி செலுத்தும் போது விம்மல்களும் அழுகையொலிகளும் மண்டபத்தை நிறைத்தன.

சிவம் ஒரு ஓரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு ஓரமாக நின்று கொண்டான். மக்கள் அஞ்சலி செலுத்தி முடிந்ததும் சிவம் தானும் இரு கரங்களிலும் மலர்களை எடுத்து போராளிகளின் கால்களில் போட்டு அஞ்சலித்தான். நேற்று இரவு தன்னுடன் தோள் கொடுத்துப் போராடிய வீரர்கள் உயிரற்றுக் கிடப்பதைப் பார்த்தபோது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும் சிரமப்பட்டு தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டான்.

அவன் அஞ்சலித்துவிட்டு நிமிர்ந்தபோது மக்கள் மத்தியில் அமர்ந்து கண்ணீர்வடித்துக் கொண்டிருந்த அவனின் தாய், பார்வதி ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

“பாரடா.. உன்ர தம்பிமாரை..” என்றுவிட்டு அவள் அலறத் தொடங்கினாள். அவளின் பின்னால் வந்த முத்தம்மாவும் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள்.

முன்பின் அறிந்திராத இந்த இளைஞர்களின் சாவுக்காக இத்தனை மக்கள் மனமுருகி அழுகிறார்கள் என்றால் அந்தச் சாவின் பெறுமதி எவ்வளவு உயர்வானது என்பதை நினைத்துப் பார்த்துக்கொண்டான். அவர்களில் தானும் ஒருவன் என நினைத்தபோது ஒரு வித பெருமிதம் அவனின் நெஞ்சை நிறைத்தது.

பார்வதியம்மாள் அவனை விட்டு விட்டு வேப்பிலைகளை எடுத்து வித்துடல்களுக்கு விசிற ஆரம்பித்தாள்.

தான் போராளியாக இணைந்த போது தன்னை எப்படியும் வீட்டிற்கு அழைத்துவிடவேண்டும் என்பதற்காக எத்தனை நாள் எத்தனை போராளிகள் முகாம்களுக்கு அலைந்திருப்பாள். எவ்வளவு பாடுபட்டிருப்பாள். அவள் இன்று இப்படி மனம் மாறிவிட்டாள் என நினைத்தபோது அவனுக்கு நம்பச் சிறிது சிரமமாகவே இருந்தது.

விடுதலை வேட்கை என்பது எல்லோரையுமே பற்றிப்பிடித்திருக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது என்பதை தன் தாயாரைப் பார்த்த போதே அவனால் உணர முடிந்தது.

அவன் அங்கு நின்ற போராளிகளிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு முகாமை நோக்கிப் புறப்பட்டான்.

பின்னால் வந்த பார்வதி அவனிடம், “சாப்பிட்டியே தம்பி”, எனக் கேட்டாள்.

அவன் தாயின் முகத்தைப் பார்த்துவிட்டு, “ஓமம்மா முகாமிலை சாப்பிட்டுத்தான் வந்தனான்”, என்றான்.

அவனைக் கூட்டிக்கொண்டுபோய் நல்ல கறியுடன் சாப்பாடு கொடுக்கவேண்டும் என ஒரு மன உந்துதல் எழுந்தாலும், மாவீரர் அஞ்சலியை இடையில் விட்டுச் செல்ல மனம் இடங்கொடுக்காத காரணத்தால் அந்த ஆசையை அடக்கிக்கொண்டாள்.

“கவனமாய்ப் போட்டு வா மோனை”, என்று அவள் அவனை வழியனுப்பிவைத்தாள்.

அவன் முகாமுக்கு வந்து சேர்ந்த போது மாலை ஆறு மணியாகிவிட்டது.

கைப்பற்றப்பட்ட இராணுவ முகாம் பகுதியை நோக்கி விமானத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும் நடத்துவதால் அதைவிட 200 மீற்றர் முன்னால் சென்று காவலரண்களை அமைக்குமாறு தளபதி கட்டளையிட்டிருந்தார்.

அவன் முகாமையடைந்த போது அந்த வேலைகள் முடிந்துவிட்டன. அவன் போய் காவலரண்களின் நிலைமைகளைப் பரிசீலனை செய்து போராளிகளுக்கு ஆலோசனை வழங்கிவிட்டு வர இரவு ஒன்பது மணியாகிவிட்டது.

கைவிடப்பட்ட இராணுவ முகாமிலிருந்து இன்னும் புகை எழுந்துகொண்டிருந்தது. பீரங்கி மேடைகள் இரண்டும் வெறுமைப்பட்டுப் போய்க்கிடந்தன.

இராணுவத்தினருக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் தங்கள் படையணிகளைச் சீர் செய்து இன்னொரு தாக்குதலை நடத்தச் சில நாட்கள் எடுக்கலாம் என அவன் கருதினான்.

சிவம் மரை இறைச்சிக் கறியுடன் ஒரு பிடிபிடித்துவிட்டுப் போய் படுத்துக்கொண்டான். காலை, நண்பகலில் எல்லாம் சாப்பிடாததால் தேங்கிக்கிடந்த பசி இப்போது பொங்கி எழுந்து விட்டது போல் தோன்றியது.

உடல் அலுப்புத் தீர ஒரு நல்ல தூக்கம் போட வேண்டும் என நினைத்துப் படுத்தவனுக்கு தூக்கம் வர மறுத்தது. மீண்டும் மீண்டும் கணேசின் நினைவுகள் வந்து மூளையை நிறைத்துக் கொண்டன.

எத்தனை களங்கள், எத்தனை சண்டைகள், எத்தனை சாதனைகள் என அனைத்தும் ஒன்றையொன்று மேவி நினைவில் வந்து கொண்டிருந்தன. குடாரப்புத் தரையிறக்கத்தின் போது இடம்பெற்ற சமர்களில் அவன் காட்டிய வீரமும் துணிச்சலும் சிவத்தையே பல முறை அதிசயிக்க வைத்ததுண்டு.

முகமாலைப் பகுதியில் அநேகமான சண்டைகள் கைகலப்பு என்ற அளவுக்கு மிக நெருக்கமாகவே நடைபெற்றன.

ஒரு முறை சில பெண் போராளிகள் படையினரின் சுற்றிவளைப்புக்குள் சிக்குப்பட்டுவிட்டனர். வோக்கி உதவி கேட்டு அலறிக்கொண்டிருந்தது. அதே வேளையில் கணேசின் அணியோ ஒரு பெரும் படையணியுடன் மோதிக்கொண்டிருந்தது.

கணேசன், “நீங்கள் இந்த இடத்தைக் கவனமாய்ப் பாருங்கோ; நான் போறன்”, என்றுவிட்டுப் புறப்பட்டான்.

“தனியே போறாய்?” எனக் கேட்டான் சிவம்.

“நான் சமாளிப்பன்”, என்றுவிட்டு கிட்டத்தட்ட இருநூறு மீற்றர் தூரத்தை 3 நிமிடங்களில் ஓடிக் கடந்தான்.

நிலைமை மிகவும் கடுமையாகவே இருந்தது. முப்பது நாற்பதுக்கு மேற்பட்ட படையினர் ஆறு பெண் போராளிகளைச் சுற்றிவளைத்திருந்தனர்.

கணேசன் தயங்கவில்லை. ஒவ்வொரு வடலியின் பின்னும் ஓடி  ஓடிப் போய் நின்று தாக்குதல் நடத்தி பலர் தாக்குவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தினான்.

பின்புறமாகப் பல முனைகளிலிருந்து வந்த வேட்டுக்கள் படையினரை நிலை குலைய வைத்துவிட்டன. கண் மூடித்தனமாக வடலிகளை நோக்கிச்  சுட ஆரம்பித்தனர். தம்மை நெருங்கிக் கொண்டிருந்த இராணுவத்தினரில் பலர் அடுத்தடுத்து விழவே பெண் போராளிகளும் புதிய உற்சாகத்துடன் தாக்குதலைத் தொடுத்தனர்.

கணேஸ் தாக்குதலைத் திடீரென நிறுத்தவே படையினர் மீண்டும் பெண்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினர்.

கணேஸ் மீண்டும் சுட ஆரம்பித்தான்.

முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே நேரத்தில் வந்த வேட்டுக்களால் நிலை குலைந்த படையினர் பின் வாங்க ஆரம்பித்தனர்.

அந்தச் சண்டைகளில் ஒரு இடத்தைப் பிடிப்பதும் பின்வாங்குவதும் அடிக்கடி நிகழும் சம்பவங்கள். ஒரு இடத்தை இழந்துவிட்டால் கணேஸ் பசி, தாகம், தூக்கம் எதையுமே பார்க்கமாட்டான். அதை மீண்டும் பிடித்த பின்பே அவன் ஓய்வான்.

ஒவ்வொரு சம்பவங்களாக அவன் மனதில் வந்து போய்க்கொண்டிருந்தன. தூக்கம் வர பிடிவாதமாக மறுத்தது. எழுந்து வெளியே வந்து ஒரு மரக்குற்றியில் அமர்ந்து கொண்டான்.

வானத்தைப் பார்த்தபோது ஒரு எரிகல்லோ அல்லது நட்சத்திரமோ எரிந்து விழுவதை அவனின் கண்கள் கண்டன. சிவத்தின் நெஞ்சு ஒரு முறை திக்கிட்டது. ஏதாவது ஒரு கேடான சம்பவம் நடக்கு முன்பு நட்சத்திரம் எரிந்து விழுவது கண்ணில் படும் என தகப்பனார் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது. மனம் குழம்ப ஆரம்பித்தது.

(தொடரும்)

 தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*