mahinda_sampanthan1

“புனிதர் சம்பந்தனின்” அரசியல் நகர்வுகள் யாருக்கானவை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற தமிழரசுக்கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் கடந்தவாரத்தில் நிகழ்தியிருந்த இருவேறு அரசியல் நகர்வுகள் தமிழ் மக்களை குமுறவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றன. அந்த நகர்வுகள் தொடர்பிலான தெளிவுறுத்தலை மேற்கொள்வதற்கு தமிழ்லீடர் முற்படுகின்றது. பாராளுமன்றில் உரையாற்றிய போது தமிழீழ விடுதலைப்புலிகளை தீண்டத்தகாதவர்கள் என்ற பாணியில் சம்பந்தன் உரையாற்றியமை மற்றும் மஹிந்த விடுத்த அழைப்பினை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக பேச்சுக்களில் கலந்து கொள்ளாமை ஆகிய இரண்டு விடயங்களும் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தன. சம்பந்தனின் உரை தொடர்பில் கடும் அதிர்ப்தி அடைந்திருந்த மக்கள் மஹிந்தவின் அழைப்பினை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் உதாசீனம் செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கருதியிருக்கலாம். ஆனாலும் இரண்டாவது விடயத்திலும் சம்பந்தன் அரச விசுவாசத்தினையே கைக்கொண்டிருந்தார் என்ற வெளித்தெரியாத உண்மையினை நாங்கள் வெளிப்படுத்துகின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் தனது பெயரும் தனது சகாக்களின் பெயரும் இருந்தாகவும், லக்ஸ்மன் கதிர்காமர் தனது அருமை நண்பர் என்றும் தம்மை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்திக் கதைக்கவேண்டாம் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார். அவருடைய அல்லது அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாக தாம் கறைபடியாத கரங்களை உடையவர்கள் எனவே தம்மை எந்த ஆயுதக் குழுக்களோடும் தொடர்புபடுத்திக்கொள்ளவேண்டாம், தமிழீழ விடுதலைப்புலிகளாக இருக்கலாம் அல்லது ரெலோ அல்லது ஈபிஆர்எல்எப் ஆக இருக்கலாம் அனைத்துக் கட்சிகளும் ஆயுதக்கலாசாரத்தில் இருந்து வந்தவை. எனவே அந்த அமைப்புக்கள் சார்ந்தோ அல்லது அந்த அமைப்புக்களின் நிலைப்பாடுகளுடனோ தாம் சேர்ந்து போகப்போவதும் இல்லை சேர்ந்து போகவேண்டிய தேவையும் இல்லை என்பதே சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு. கட்சியின் நிலைப்பாட்டினையே சம்பந்தன் பாராளுமன்றில் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இதேவேளை கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற கூட்டுக்கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதால் கால ஓட்டத்தில் கூட்டமைப்பு சிதைவடைகின்ற ஆபத்தான சூழ்நிலைகூட எழுவதற்கான சாத்தியப்பாடுகள் உணரப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கான சரியான தீர்வு ஒன்றை எட்டும் வரையில் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தங்கள் கட்சிகளை வளர்ப்பதைத் தவிர்த்து கூட்டமைப்பு என்ற ஒரே சக்தியாக பயணிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டுக்கட்சியை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் இந்த விடயத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏனைய கட்சியினரிடம் சம்பந்தன் பகிரங்கமாகவே தெரிவித்திருப்பதுடன், தமிழரசுக்கட்சியினை வளர்ப்பதற்காக தமிழரசுக்கட்சியின் வருடாந்த மாநாட்டினைக் கூட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியவர்களுக்கு தமிழரசுக்கட்சியில் வேலையற்ற பதவிகளுக்கு பொறுப்புக்களை வழங்கியிருந்தமையும் நினைவிருக்கலாம்.

இலட்சக்கணக்கான உயிர்விலைகளின் பின்னான சூனியமான அரசியல் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்று தீர்வினைப் பெறுவதற்கான முனைப்பினை கைவிட்டுவிட்டு கட்சி அரசியல் செய்வதற்கு ஒரு நல்ல தலைவன் முற்பட வாய்ப்பில்லை என்பது சாதாரண மக்களுக்கு கூட புரியக்கூடிய விடயமாகும்.  தற்போதைய நிலைப்பாட்டின் படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர் எதிர்க்கட்சிகளில் உறுப்புரிமை பெற்றவர்கள் போல ஒருவரை ஒருவர் தூற்றுவதும் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் ஆட்களைத் திரட்டுவதுமென மிக இழிவான நிலைப்பாடு கூட்டமைப்பிற்குள் இருந்து வருகின்றது. இந்தப் பிரச்சினைக்கான தீர்வினைக்கூட எட்டமுடியாத ஒரு தலைவர் நினைத்துப் பார்க்கமுடியாத தியாகங்களும் ஈகங்களும் நிறைந்த தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்துவதையோ அதனை ஒரு அருவருக்கத் தக்க விடயமாக கருதி கருத்துவெளிப்படுத்துவதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அவரது நடவடிக்கை மிகுந்த கண்டனத்துக்குரியதாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கதைக்கவேண்டாம் என்று தெரிவித்து வருகின்ற ‘புனிதர் சம்பந்தன்’ தமிழீழ விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்புரிமை 22ஆக இருந்ததையும் அதன் பின்னான அடுத்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 13ஆக குறைந்ததையும் எந்த அடிப்படையில் நோக்க முற்படுகின்றார். தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திற்காகவே தமிழ் மக்கள் வாக்களிப்பதாகவும் ஒரு நிலைப்பாடு அவரிடமும் அவர் சார்ந்தவர்களிடமும் இருப்பதாகவே அறியமுடிகின்றது. புலிகள் அன்றுவைத்த கோரிக்கையினை இன்றுவரை தாரகமந்திரமாகக் கொண்டே தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்துவருகின்றார்கள் என்பதை சம்பந்தன் உணர்ந்திருக்கிறார் என்பதற்கு அவர் கூட்டமைப்பில் தங்கியிருந்து கொண்டு அரசியல் செய்ய முற்படுவவதை ஆதாரமாகக் கூறலாம். அவர் தன்னை புலிகளின் அடையாளமாகக் கருதவேண்டாம் எனக் கூறுவது உண்மையென்றால் கூட்டமைப்பில் எவ்வாறு ஒட்டிக்கொண்டிருக்க முடியும்? கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளின் எச்சமாகவே அரசும் கருதுகிறது தமிழ் மக்களும் கருதுகிறார்கள் என்பது சம்பந்தருக்கு கசப்பாக இருந்தாலும் அது உண்மையான விடயமாகும். தமிழ் மக்கள் மத்தியில் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே ‘கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்ற பாணியில் கூட்டமைப்பினைப் பதிவு செய்யவும் முடியாது. கூட்டமைப்பினைக் கைவிடவும் முடியாது என்ற நிலைப்பாட்டினை நடைமுறைப்படுத்தி வருகின்றார். இல்லையேல் அவராலோ அல்லது அவர் சார்ந்த புனிதர்களாக தம்மைக் கருதிக்கொள்கின்ற தமிழரசுக்கட்சியினராலோ கூட்டமைப்பு என்கின்ற அடையாளத்தினை கைவிட்டு ஒரு ஆசனத்தையேனும் பெறமுடியுமா? இதற்கான பதில் சம்பந்தனிடமோ அல்லது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய சம்பந்தனால் தேசியப்பட்டியலூடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொண்ட சுமந்திரனிடமோ இருக்குமா?

ஒவ்வொரு கட்டத்திலும் “பிரிக்கமுடியாத ஐக்கிய இலங்கைக்குள் தான் தீர்வு வேண்டும்”|, “நாங்கள் ஒரு போதும் வடக்கு – கிழக்கை எமக்குச் சொந்தமானது என்று கேட்கவில்லை” , “வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவத்தினை வெளியேறுமாறு நாங்கள் ஒருபோதும் கோரவில்லை” உட்பட்ட அரச நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பதாக சம்பந்தன் கருத்துக்களை வெளிப்படுத்திவருகின்றார். உலக ஒழுங்கு என்ன நிலைப்பாட்டில் செல்கின்றது என்பதை அவர் புரிந்துகொள்வதாக இல்லையா? அல்லது அரச விசுவாசத்தைப் பிரதிபலிப்பதாகச் செயற்படுகின்றாரா? என்பது தான் புரியாததாக இருக்கின்றது. இந்த இடத்தில் சம்பந்தனுக்கும் அவரை ஆத்மார்த்த தலைவராக ஏற்றுக்கொள்கின்ற சிலருக்கு வெளிவராத ஒரு விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அண்மையில் கொழும்பில் மேற்குலகின் இராஜதந்திரிகள் குழு ஒன்றுடன் தமிழ்த் தேசியத்திற்காகக் குரல்கொடுத்துவருகின்ற ஒரு குழுவினர் சந்திப்பு நடத்தியிருக்கின்றனர். குறித்த சந்திப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை தொடர்பில் குறித்த தரப்பு விளக்கியிருக்கின்றது. அதனைச் செவிமடுத்த மேற்குலக இராஜதந்திரிகள் இந்த விடயம் நடைமுறைக்குவராதென்று கூறிவிடமுடியாது. ஆனால் காலம் எடுக்கலாம் என்று நம்பிக்கை தரும் வகையில் பதிலளித்ததாக தெரியவந்திருக்கின்றது. சர்வதேச ஒழுங்கு எமக்கான ஒரு வலுவான தீர்வினை நோக்கியே செல்கின்றது என்பதை கடும்போக்கான நிலைப்பாட்டில் இருந்த குறித்த இராஜதந்திரிகள் குழுவினரின் கருத்து தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்ற நிலையில், காலத்திற்கு பொருத்தமற்ற விடயங்களைக் கையிலெடுத்து எமது போராட்டத்தினை கொச்சைப்படுத்துவதன் மூலம் மூத்த(!) அரசியல்வாதியான சம்பந்தன் எதனைச் சாதிக்க முற்படுகின்றார்? அவரது பாணியில் விடுதலைப்புலிகளைப் பழிவாங்குவதாக எண்ணிச் செயற்படுகின்றாரா? அல்லது சிங்களவர்களுக்கு அடிபணிந்து பழகிப்போனதன் வெளிப்பாடாக அவர் செயற்படுகின்றாரா? என்பதும் கேள்விக்குரிய விடயமாக மாறியிருக்கின்றது.

திரு சம்பந்தன், சிங்கள தேசிய இனத்தின் பிரிக்கமுடியாத ஒரு நபராகவே வாழ்ந்து வருகின்றார் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களைப் பட்டியலிட முடியும். யாழ்ப்பாணத்தில் மே நாள் நிகழ்வின் போது நிற்பதற்கே வேறு நபர்களின் உதவியினை நாடியிருந்த போதிலும் மேடையில், பாய்ந்துவிழுந்து சிங்கக் கொடியினை கையிலேந்தி தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தார். அதன் போது எழுந்த எதிர்ப்பலைகளைச் சமாளிப்பதற்கு தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா குறித்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரியதும் குறித்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரவேண்டிய தேவை தமக்கு இல்லை என்று சம்பந்தன் மீண்டும் தனது செயற்பாட்டி நியாயப்படுத்தியதும் நினைவிருக்கலாம். அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கின்ற ஒவ்வொரு பிரதான நிகழ்வுகளின் போதும் சிங்கள தேசியக் கீதமோ அல்லது அதன் இசையோ கட்டாயம் இசைக்கப்படவேண்டும் என்பதே சம்பந்தனின் நிலைப்பாடாக அமைந்துவருகின்றது.

பாராளுமன்றில் அவர் பகிரங்கமாக உரையாற்றிய போதே அவரது உள்மன வெளிப்பாடு வெளிப்பட்டிருந்த போதிலும் கடந்தகாலங்களில் இந்தியா உட்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள் ஒவ்வொன்றின் போதும் சம்பந்தன் இந்த விடயத்தினையே மீளவும் மீளவும் தெரிவிப்பார் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு சந்திப்புக்களிலும் புலிகளின் கொலைப்பட்டியிலில் தனது பெயர் தான் முதலாவதாக இருந்ததாகத் தெரிவித்துவருகின்றமையும் வெளிவந்திருக்கின்றது. இதனை விடவும் மிக முக்கியமாக சிறைச்சாலைகளில் இருக்கின்ற அரசியல் கைதிகள் தொடர்பிலும் அக்கறையற்றவராக அவர்கள் வெளிவரவேண்டும் என்பதில் துளியளவேனும் இரக்கமற்றவராகவே அவர் இருந்துவருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றதன் பின்னர் இன்றுவரையில் தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்காக எந்த ஒரு சிறைச்சாலைக்குச் சென்றதாகவோ அல்லது அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களில் பங்குகொண்டதாகவோ இல்லை. மாமனிதர் ரவிராஜ் அவர்களும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தென்னிலங்கையில் உள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சென்ற போது குறித்த குழுவுடன் தான் வரப்போவதில்லை என்றும் தன்னை சிறையில் உள்ள அரசியல் கைதிகள் கொலை செய்துவிடுவார்கள் என்றும் சம்பந்தன் தெரிவித்திருந்ததாக ரவிராஜ் அவர்களே ஒரு இடத்தில் தெரிவித்திருக்கின்றார். ஆக, விடுதலைப்புலிகளுடனான சந்திப்புக்களின் போதுகூட அவர் திறந்த மனதுடன் செயற்பட்டிருப்பார் என்பதை எந்த வகையில் நம்பமுடியும். அதேபோல தற்போதும் கூட ஜனாதிபதியுடனோ அல்லது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனோ இடம்பெறும் சந்திப்புக்களின் போது கூட தனிப்பட்ட ரீதியில் கலந்து கொள்ளும் சம்பந்தன் எமது இன விடுதலைக்கான தூய்மையான குரலாக எவ்வாறு ஒலிப்பார் என்று எண்ணமுடியும்.

ஒட்டுமொத்த தமிழினமும் இன்று சர்வதேச ரீதியாக திரும்பிப்பார்க்கும் நிலையினை ஏற்படுத்தியவர்கள் தமிழீழவிடுதலைப்புலிகள் என்பதை எவரும் நிராகரிக்கமுடியாது. இன்று கூட ஒவ்வொரு விடயங்களில் இருந்தும் தப்பித்துக்கொள்வதற்காக ஒவ்வொரு சம்பவங்களுடனும் விடுதலைப்புலிகளைத் தொடர்புபடுத்தியே இலங்கை அரசு கருத்துவெளியிட்டுவருகின்றது. வெள்ளைக்கொடி காட்டிக்கொண்டோ, கறுப்புத்துணியால் வாய்களைக் கட்டிக்கொண்டோ எதனையும் சாதித்துவிடமுடியாது என்று தான் அகிம்சை வழியிலான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, இளைஞர்களை ஆயுதவழியிலான போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தூண்டியவர்கள் அதற்கான உந்துதலைக்கொடுத்தவர்கள் அகிம்சாவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் சம்பந்தன் உட்பட்டவர்கள் என்பது வரலாற்றுச் சான்று. இந்நிலையில் நினைத்துப் பார்க்கமுடியாது தியாகங்களால் எழுதப்பட்ட விடுதலைப்போராட்டத்தில் குளிர்காய்ந்து கொண்டு விடுதலைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதையும் போராட்ட அமைப்பை தீண்டத்தகாத ஒரு அமைப்பாக கருத்துவெளியிடுவதையும் சம்பந்தன் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதே தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் தீவிரமான நிலைப்பாடாகும்.

இது இவ்வாறு இருக்க, சம்பந்தனுக்காக காலை உணவு தயார் செய்து காத்திருந்ததாகவும், புலம்பெயர் மக்களுக்கு அஞ்சியா சம்பந்தன் தனது சந்திப்பைத் தவிர்த்தார் என்றும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச கேள்வி எழுப்பிய விவகாரம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம். இந்த விடயத்தின் பின்னால் நடந்த சில சம்பவங்களையும் பகிரங்கப்படுத்தவேண்டிய தேவை உணரப்பட்டிருக்கின்றது.

இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அரசாங்கத்துடனான பேச்சுத் தொடர்பில் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக தென்னாபிரிக்காவில் அரசுடனான சந்திப்பு ஒன்றை தென்னாபிரிக்காவின் முன்னிலையில் முன்னெடுப்பது என்றும் அரசுடனான பேச்சுவார்த்தைக்கான ஒரு பேச்சுவார்த்தையாக அது அமையும் என்றும் இதற்கான அழைப்பினை தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதர் விடுத்ததாகவும், ஒவ்வொரு தரப்பில் இருந்தும் தலா இருவர் பங்கேற்பது என்றும் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றது என்று சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். அதேபோல அரசாங்கம் அழைப்புவிடுத்தால் பேச்சுக்களில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் சம்பந்தனும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். இதன் போது கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சிப் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, மற்றும் ஈபிஆர்எல்எப் பொதுச் செயலாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். சர்வதேச ரீதியாக சில மாதங்களில் ஏற்படவுள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் கூட்டமைப்பைப் பயன்படுத்த முற்படலாம் அதற்கு உடன்படக்கூடாது என்று தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாகத் தெரிவித்து குறித்த சந்திப்பினைத் தவிர்க்கவேண்டும் என்றும் கேட்டிருக்கின்றார்கள். இருப்பினும் அதன் போது கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன் அரசாங்கம் ஏமாற்றக்கூடும் ஆனாலும் மஹிந்தவுடனான சந்திப்பினைத் தவிர்க்கமுடியாது என்று கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் தான் அவசரமாக சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அழைப்பு விடுத்திருக்கின்றார். அந்த அழைப்பிற்கு அமைய குறித்த சந்திப்பில்  கலந்துகொள்வதென்று சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் முடிவு செய்ததாகவும் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டமையால் தனியாக சந்திப்புக்களில் பங்கெடுப்பது எதிர்காலத்தில் வீண் விமர்சனங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாகவே சந்திப்பினைத் தவிர்த்துக்கொண்டதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவந்திருக்கின்றது.

இருப்பினும் தென்னாபிரிக்காவில் சந்திப்பு என்ற விடயத்தில் பொதிந்திருக்கின்ற அதிர்ச்சி தருகின்ற விடயம் தொடர்பில் பாராளுமன்றக்குழு சந்திப்பின்போது சம்பந்தனாலோ, சுமந்திரனாலோ உண்மையான விடயம் வெளிப்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்திருக்கின்றது. உண்மையில் தென்னாபிரிக்காவில் சந்திப்பு என்ற விடயத்தின் பிரதான சூத்திரதாரியாக தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தூதர் இருந்திக்கின்றார் என்பதும் தென்னாபிரிக்காவில் கூட்டமைப்பு சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதற்கும் பின்னால் பாரிய சூழ்ச்சி இருப்பதும் தற்போது தெரியவந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில், நடைபெற்ற போர் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக்கோருவதென்றும் அதன் மூலம் தப்பித்துக்கொள்வதென்றும் இலங்கை அரசு திட்டமிட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான தென்னாபிரிக்காவிற்கான தூதுவர் கூட்டமைப்புடனும் கலந்தாலோசிப்பதுடன் மட்டுமன்றி கூட்டமைப்பையும் இணைத்து சர்வதேசத்தின் மத்தியில் மன்னிப்புக்கேட்பதற்கான சதியாகக் கூட அந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடு அமைந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்தச் சந்திப்பினை வலுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தரப்பில் இருந்தும் தலா இருவர் பங்குகொள்வது என்ற விடயம் அமைந்திருக்கின்றது. இருவர் தான் சந்திப்பில் கலந்து கொள்வதாக இருந்தால் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தனும் அவருடைய செயலாளரும் பேச்சுவார்த்தைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான சுமந்திரனும் மட்டுமே பங்கெடுப்பர் என்பது அடுத்த விடயமாகும். இந்த விடயங்களை சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட சம்பந்தன், சுமந்திரன் தரப்பு முன்வைக்கவில்லை என்பது அவர்களின் போக்குத் தொடர்பிலான சந்கேத்தினை இன்னமும் வலுப்படுத்துவதாகவே அமைகின்றது.

ஆக, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் போதான கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடக்கம் இன்றுவரையில் சம்பந்தனின் போக்கு தமிழ்மக்களை தொடர் கவலைக்கும் வேதனைக்கும் உட்படுத்தியே வருகின்றது. இனி வருங்காலங்களிலாவது தமிழ் மக்களுக்காக சிந்தித்து அவர் செயலாற்ற முன்வரவேண்டும் என்பதுவே வரலாற்றுக்கு அவர் விட்டுச்செல்லும் நற்பெயராகும் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*