nlote

உயிர் சிந்திய மாவீரப் பெருந்தகைகளின் நாளில் உறுதி கொள்வோம்!

உலக வரலாற்றில் கடந்த நூற்றாண்டில் பேரழிவினைச் சந்தித்த இனங்களில் ஒன்றாக தமிழினம் பதிவாகியிருக்கின்ற அதேவேளை அளவிட முடியாத தியாகங்களையும் செய்த ஒரு விடுதலை இயக்கத்தை தன்னகத்தே கொண்ட பெருமையும் தமிழினத்தையே சார்ந்திருக்கின்றது. மிகப் பெரிய, அளவிட்டுக்கூற முடியாத ஈகைகளைப் புரிந்த எமது விடுதலை வித்துக்களை நினைவுகூரும் நிமிர்வான நாள் இன்றைய நாள்.

கடந்தகாலங்களில் புனையப்பட்ட நூல்களிலும் ஆவணங்களிலும் வரலாறுகள் கற்பனைகள் ஊடே புனையப்பட்டிருக்கலாம். ஆனாலும் எமக்காக எமது மண்ணின் விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த அளிவிட முடியாத சிரஞ்சீவிகளின் இரத்தத்தால் தமிழினத்தின் வரலாறு எழுதப்பட்டிருக்கின்றது. தேசியம் இன விடுதலை என்கின்ற ஒரே நோக்கத்திற்காகவே நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட  உயிர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனியாக ஒரு போர் மோகம் கொண்டதாக நடைபெற்றுவிடவில்லை. ஒரு நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பில் எந்த எந்தத் துறைகள் வேண்டுமோ அத்தனை துறைகளையும் நிறுவி மக்களுக்கான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் கையாளும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு. போராளிகள் போரியல் நுணுங்கங்களில் எவ்வாறு சிறந்து விளங்கினார்களோ அதே அளவிற்கு மக்களுக்கான நிர்வாகப் பணிகளிலும் சிறந்து விளங்கினர்.

போர் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் எவ்வாறு நுட்பமாக ஆராய்ந்து முன்னெடுக்கப்பட்டனவோ அதேபோல மக்கள் பணிகளுக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்தனை ஆயிரம் போராளிகளையும் ஒன்றிணைந்து மக்கள் பணி, போர் என்கின்ற இரு துருவங்களும் ஒரு சேர அட்சரம் பிசகாது முன்னெடுக்கப்பட்டன. இத்தனைக்கும் பின்னால் ஒரே ஒரு தலைவனின் அசையாத ஆளுமை இருந்தது. தலைவன் நினைப்பதை செய்து முடிக்கும் தீராத உறுதி, அசையாத நம்பிக்கையை நெஞ்சினில் சுமந்தவர்கள் மாவீரர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் முதல் கொடுக்கப்பட்ட உயிர் விலைகள் ஒவ்வொன்றிலும் அளவிடமுடியாத தியாகங்கள் பொதிந்து கிடக்கின்றன. ஒரு துப்பாக்கிக்காக, சில துப்பாக்கி ரவைகளுக்காக , விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் ஒரு துப்பாக்கியைக் காத்துக் கொள்வதற்காக காயப்பட்ட போராளி தன்னைச் சுட்டுவிட்டு தனது துப்பாக்கியைக் கொண்டு செல்லுமாறு சக போராளியைப் பணித்து உயிர் நீத்த சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.

எமது விடுதலைப் போர் சாத்வீக வழியிலும் உரிமை கோரியது. அதற்காகவும் அணு அணுவாக உயிர்கள் சிந்தப்பட்டன. சாவுக்கு நாட்குறித்து, தன் உயிரை உதிர்க்கும் நேரம் கணித்து கந்தக வெடி சுமந்து வெடித்து தீரம் புரிந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள் அளப்பெரியவை. எதிரியின் குகைகளுக்குள் வாழ்ந்து நினைத்துப் பார்க்க முடியாத தியாகங்களைப் புரிந்து தம்மையே அழித்து ஈழவிடுதலைக்கு வலுச் சேர்த்து முகவரியே வெளித்தெரியாது மறைந்து போன முகம்தெரியா கரும்புலிகளின் தியாகங்கள் மிகப்பெரியவை.

இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் எதிரியின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக மாதக்கணக்காக எதிரியின் குகைகளுக்கு நடுவே உணவின்றி, நீரின்றி, விழுப்புண் சுமந்தபடி மழை, வெயில் நடுவே காத்திருந்து பணி செய்த ஏராளம் வேவுப்புலி மாவீரர்களின் தியாகங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவை.

ஆழ்கடல் நடுவிலும் மறைப்பெடுக்க முடியாத நிலையிலும் பரந்த கடற்பரப்பில் நின்று கொண்டு எதிரியுடன் சமராடி வீழ்ந்தவர்கள், ஆழ் கடல் வழியாக நீந்திச் சென்று பணி முடித்து வீழ்ந்தவர்கள் என மாவீரர்களின் தியாகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றிலும் விஞ்சியவையாகவே அமைந்திருக்கின்றன.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மற்றொரு மிகப் பெரிய சாதனையாக பெண் போராளிகளின் ஆளுமைக்கான களம் விரிந்திருந்தது. ஆண் போராளிகளுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் பெண் போராளிகளும் சிறந்து விளங்கினர். தரையிலோ கடலிலோ பெண் போராளிகள் சளைக்காது சாதனை படைத்தார்கள். கரும்புலிகளாகவும் சாவுக்கு நாள் குறித்து வீரச்சாவை அணைத்துக் கொண்ட பெண் மாவீரர்களின் சாதனைகளும் மிகப் பெரிதானவை. களத்தில் சமராடும் போது துப்பாக்கி ரவைகள் முடிந்த போதிலும் வெற்றுத் துப்பாக்கியால் இராணுவத்தைத் தாக்கி அவர்களின் துப்பாக்கியைப் பறித்து சமரிட்டு சாதனை படைத்த பெண் மாவீரர்களும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகளின் கெரில்லா வழிமுறையிலான தாக்குதல் நடவடிக்கைகள், மரபு வழியிலான தாக்குதல் நடவடிக்கைகள் அனைத்திலும் மாவீரர்கள் ஒவ்வொருவரும் நிகழ்த்தியிருந்த சாதனைகள் மிகப் பெரியவை. களத்தில் சமராடும் போது சம்பவ களத்திற்கு தலைமை தாங்கும் போராளி வீரச்சாவடைகின்ற போது அந்த இடத்தை நிரப்புவதற்காக சாதாரண போராளி தலைமை தாங்குவது அதற்கு கட்டுப்பட்டு சமரிட்டு சாதிப்பது என தமிழீழவிடுதலைப் போராளிகளின் அர்ப்பணிப்பு, கட்டளைக்கு கட்டுப்படுதல், தீய பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளாமை போன்ற உயர்வான கொள்கைகளைக் கைப்பிடித்தமையே வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தை மாவீரர்களுக்கு வழங்கியிருக்கின்றது.

வானூர்தி செலுத்தும் திறன் கொண்டவர்களாக, அதி நவீன ஆயதங்களைக் கையாள்பவர்களாக, சில நொடிகளில் தாக்குதல் இலக்குகளை கணிப்பது முதல் கணிக்கப்பட்ட இலக்கினை நோக்கித் தாக்குதல் நடத்துவது வரையான அசாத்திய திறமை வாய்ந்த மாவீரர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கொண்டிருந்தது. அதேபோல வெளித் தெரியாத மிக அதி நவீன அறிவியல் சாதனங்களை இயக்கும் திறமை கொண்ட மாவீரர்களையும் எம் தேசிய விடுதலைப் போராட்டம் தன்னகத்தே கொண்டிருந்தது.

போரில் கை தேர்ந்தவர்களாக மட்டும் மாவீரர்கள் இருக்கவில்லை. வரலாறு எப்போதாவது ஒரு முறை சந்திக்கின்ற நிகர்க்க முடியாத கவிஞர்களை, எழுத்தாளர்களை, இசைக் கலைஞர்களை, கலைஞர்களை மாவீரர்களாகக் கொண்டது எமது விடுதலைப் போராட்டம். கண்காணாத தேசத்தில் இருந்த போதிலும் இலக்கு ஒன்றே என்ற நோக்கிற்காக இறுதி வரை உழைத்து வீழ்ந்த மாவீரர்களின் தியாகங்களும் மிகப் பெரியது.

இவ்வாறு ஒன்றாகி ஆயிரமாகி நாற்பதாயிரமாகிய பல்லாயிரம் எம் உயிர் மாவீரர்கள் இறுதிவரை நிகழ்த்திய மாவீரம் வரிகளுக்குள் அடக்கிவிட முடியாதவை. ஒவ்வொரு மாவீரர்களும் விட்டுச் சென்ற அடிச்சுவடுகள் ஒவ்வொன்றும் இன் விடுதலை என்ற உயர்வான இலக்கை நோக்கியவையாகவே அமைந்திருந்தன. நினைத்துப் பார்க்கவே முடியாத மாவீரர்களின் தியாகங்களின் கனதி புரியாது அவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது, அவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு மாவீரர்களின் தியாகங்களின் மேல் சவாரி செய்ய முற்படுவது வரலாற்றுத் துரோகமாகும். மிக உயர்வான உயிர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டது தமிழீழம் என்கின்ற உயர்வான நோக்கத்திற்காகவே. அவற்றின் நோக்கத்தினை மதித்து அற்ப சொற்ப சலுகைகளுக்காக இனத்தினைக் காட்டிக்கொடுக்காது உயர்வான இலட்சியம் ஈடேறும் வரையில் சளைக்காது பயணிப்போம் என்று இன்றைய நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*