vikatandouglas

ஈபிடிபியின் தினமுரசாகிறதா ஆனந்த விகடன்?

விகடனின் ”நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!”  என்ற தலைப்பில் கற்பனைகளை இட்டுக்கட்டி வடிவமைக்கப்பட்ட பேட்டி ஈபிடிபியைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டிருந்ததை தமிழ்லீடர் உட்பட பல தமிழ் தேசிய ஊடகங்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தன. ஆயினும் ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் தமது செயலை நியாயப்படுத்தி பதில் ஒன்றை வெளியிட்டுள்ளார்
.

ஆனந்த விகடனின் ஆசிரியர் பதிலும் தமிழ்லீடரின் குறிப்பும் வருமாறு:

விகடனின் ஆசிரியர் கட்டுரை

ஈழம் – நம் நூற்றாண்டின் மாபெரும் துயரம்.

லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதப் பூதம் முழுங்கித் தின்னவும் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு நொறுக்கி, நறுக்கி சித்ரவதையில் துடிதுடித்துக்கிடக்கவும் காரணமான பாசிசப் போர். 30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டங்களும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டங்களும் உலகம் விழித்து இருக்கும்போதே, ரத்தச் சரித்திரம் ஆயின… நம் எல்லோரின் இயலாமையின் குற்ற உணர்வைத் தூண்டியபடி. மண்ணுக்குள் புதைந்துபோனவர்கள் பாதி என்றால், மீதி மக்கள் நிலம் அகன்றும், புலம்பெயர்ந்தும் சபிக்கப்பட்டுத் திரிகிறோம். இந்தத் தொடர் துன்பத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?

vikadaninterviewpieceதமிழ்கூர் நல்லுலகம் ஆனந்த விகடனையும் நன்கு அறியும். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் தொடங்கப்பட்ட விகடனின் பயணம், இன்றைய ஈழப் போராட்டம் வரை… அடக்கப்பட்ட மக்களின் குரலாகவே என்றென்றும் இருக்கும்.

சிங்களப் பேரினவாதம் தீவிரம் அடையத் தொடங்கிய காலகட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய மூன்று தமிழர்கள் சந்தித்த துயரத்தைப் பதிவுசெய்ததில் இருந்து, இன்று வரை ஈழத் தமிழ் மக்களுடைய துயரங்களைத் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறது விகடன்.
நான்காவது ஈழப் போர் என்றும் இறுதி யுத்தம் என்றும் சொல்லப்பட்ட 2007 – 2009 காலகட்டம் மிகக் கொடூரமானது. ‘அங்கு நடக்கும் அவலங்களை உலகெங்கும் உரக்கச் சொல்ல யாராவது இல்லையா?’ என்பதே அப்போது எல்லோரின் ஆதங்கமும்… ‘ஈழத்தைப் பார்க்காதே, ஈழம்பற்றிப் பேசாதே, ஈழம்பற்றி எழுதாதே’ என்று அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அந்தக் காலத்திலேகூட, துயர் மிகுந்த ஈழத்  தமிழ் மக்களின் கண்ணீரை உலகத் தமிழர்களின் வாசல்களில் கொண்டுவந்து கொட்டியது விகடன் குழுமம்தான்.

எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காமல், விகடன் குழுமம் எழுதிய வீரியமான எழுத்துகள், மத்திய – மாநில ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை, அதிகார மையங்களை அசைத்துப் பார்த்தன. அந்த யுத்தத்தின் ஒவ்வோர் அசைவையும் விகடன் வெளியிட்டது. போர் முற்றுப்பெற்றதாக இலங்கை அரசு அறிவித்த பின்னால், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைத்துவைக்கப்பட்டதையும், சரண் அடைந்த போராளிகள் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்யப்பட்டதையும், அங்கு இருந்த தமிழ் மக்கள் அனைத்து வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு தவித்ததையும் தொடர்ந்து பதிவுசெய்தது விகடன் மட்டும்தான். இன்றைக்கும் உலகத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே நிறுத்தப்பட வேண்டும் என்ற  செய்திகளை வெளியிட்டுவருகிறோம். இவற்றின் தொடர்ச்சி ஆகத்தான் வித்யா ராணியின் பேட்டியும்  இடம்பெற்றது.

ஆயிரமாயிரம் துயரங்களில் ஒரு ரத்த சாட்சிதான், வித்யா ராணி. அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்ததும், அவரைப் பற்றி முழுமையாக அறிந்த பிறகுதான், அதை வெளியிடுவதற்கு முடிவுசெய்தோம். பொருளாதாரத் துன்பம் மட்டும் அல்ல; உயிருக்கே அச்சுறுத்தலான சூழ்நிலையில் இருக்கும் அவருடைய அடையாளத்தைச் சொல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நிலையில், அவருடைய  அடையாளத்தை மறைத்தே வெளியிட முடிவு எடுத்தோம். தன்னுடைய சொந்த வாழ்க்கை சோகத்தின் மூலமாக, ஈழத்தின் இப்போதைய தமிழ் சமூகத்தின் நிலைமையை அந்த சகோதரி கண்ணீருடன் விவரித்தார். வளையல் தாங்கிய வளைக்கரங்களில் ஆயுதம் தரித்து, எதிரியை அவனுடைய கோட்டைக்குள் சென்று சந்தித்த துணிச்சல் பெண்ணான நம் சகோதரி, 2009 மே மாதத்தில் இருந்து, என்ன ஆனார் என்பதே அந்தப் பேட்டி.

பேட்டியைப் படித்ததும் இரண்டு விதமான எதிர்வினைகள் விகடனுக்கு வந்தன. ”போர் நடத்திக் கொன்றவர்கள்… இப்போதும் எம் மக்களை அணுஅணுவாகக்  கொல்கிறார்களே! அந்த சகோதரிக்கு எல்லா உதவிகளும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். கோடிக்கணக்கான தமிழ் மக்கள் அவருக்கு ரத்த சொந்தங்களாக இருக்கும்போது, ஒரு சகோதரி பாலியல் தொழில் செய்யும் பாவம் நம்மைத்தான் வந்து சேரும்” என்று மனம் உருகிக் கடிதங்கள் எழுதிய, தொலைபேசிக் கதறிய, உதவிகள் செய்யத் துடித்த தமிழ் மக்கள் ஏராளம். இன்னொரு பக்கம், ”இப்படி ஒரு பேட்டியை விகடன் வெளியிட்டு இருக்க வேண்டுமா? ‘ஈழப் போர் முடிந்துவிட்டது. இனிமேல் தமிழர்கள் எதுவும் செய்ய முடியாது’ என்ற கருத்தாக்கத்தை மகிந்த ராஜபக்ஷே உருவாக்க நினைக்கிறார். அதற்கு அடித்தளம் இடுவதுபோல இந்தப் பேட்டி அமைந்துவிட்டது” என்று இன்னொரு சாராரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்துவிட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.

வித்யா ராணி அந்தப் பேட்டியில் கூறி இருப்பவை துக்கப்பட்டு நிற்கும் ஒரு தனி மனுஷியின் அவலக் குரல். தன் இனத்துக்காகத் துப்பாக்கி ஏந்திய நாள் முதல், ஆயுதங்களைக் கைவிட்டு, ஆதரவற்றுக்கிடக்கும் இந்த நாள் வரை நடந்து இருப்பதைத்தான் அவர் பகிர்ந்துகொண்டார். அதைச் சொல்வதற்கான அத்தனை உரிமைகளும் அந்த சகோதரிக்கு உண்டு.

எல்லா இரவும் விடியும் என்பது நம்பிக்கை. ஆனால், ஒரு கொடிய இரவைக் கடக்கும் கண்ணீரை, அந்தக் காயங்களின் கதறல்களை மறுதலிப்பது… அநியாயம் நண்பர்களே. கடந்த காலத் தோல்விகளில் இருந்து பாடம் படிக்காமல், எதிர்கால வெற்றி என்றைக்கும் சாத்தியமாகாது என்பதே நிதர்சனம்.

குன்றின் மீது நின்று யானைப் போர் பார்ப்பதற்கும் யானையின் காலடியில்கிடந்து துடிப்பவர்களுக்குமான வித்தியாசத்தை சகோதரி சுட்டிக்காட்டினார். இந்த யதார்த்தங்களையும் உணரத் தவறினால், இலங்கையில் மிச்சம் இருக்கும் ஈழத் தமிழர்களை இன்னும் இன்னும் பேராபத்துகள் சூழும் என்பதுதான் அந்த சகோதரியின் அச்சத்தின் வெளிப்பாடு.

எதிரும் புதிருமாகக் கிளம்பும் எல்லாக் கருத்துகளையும் மக்கள் மன்றத்தில், இதய சுத்தியோடு என்றென்றும் விகடன் பகிரும். ஒடுக்கப்பட்ட மக்களின் நியாயங்களைப் பேச விகடன் எப்போதும் களம் தரும் என்பதற்கான சாட்சி, இன்றும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் கோடானுகோடி வாசகர்களே!

அன்புடன்

-ஆசிரியர்

ஆனந்த விகடன்

தமிழ்லீடர் ஆசிரியர் பீடக் குறிப்பு:

மீண்டும் மீண்டும் உண்மைக்குப் புறம்பான நியாயப்படுத்தலை முன்வைக்கத் துடிக்கும் விகடன் ஆசிரியருக்கு,

எந்தச் சந்தர்ப்பத்திலும் கடந்தகாலத்தில் நீங்கள் ஆற்றிய பணி தொடர்பில் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் நீண்டகால ஊடக அனுபவம் வாய்ந்தவர் என்ற வகையில் நீங்கள் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிட்ட ஒரு நபரின் பொய்யான விடயத்தினை நியாயப்படுத்துவதற்கு எடுத்திருக்கின்ற நேர்மைக்கு மாறான செயற்பாட்டினை ஏற்கமுடியாது.

உங்கள் பதிலின் அடிப்படையில், உடனடியாக அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு கருத்துச் சொல்வதாகத் தெரிவித்திருக்கும் நீங்கள், ஏராளம் உறவுகள் உதவி செய்யத் துடிப்பதாகக் குறிப்பிடுகின்றீர்கள். ஆனால் அந்தப் பெண்ணை மீட்டு ஒரு சுயமான தொழிலைச் செய்வதற்கான ஒரே ஏற்பாட்டினை ஏன் செய்திருக்க முடியாது? அல்லது உதவி செய்வதற்கு முன்வந்த உங்களுக்கு நம்பிக்கைக்கு உரிய ஒரு தமிழக உறவினைக் கூட உங்கள் பார்வைக்கு நல்லவராகத் தெரியவில்லையா? பாதுகாப்பைச் சொல்லிக்காட்டிக்கொண்டு அந்தப் பெண்ணை அதே நிலையில் விடுவதற்கு நீங்கள் முற்படுவதன் நோக்கம் என்ன?

இவ்வாறான மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு தமிழ்ப் பெண். உங்கள் தாயாக இருந்தால், உங்கள் மனைவியாக உங்கள் சகோதரியாக இருந்தால் நீங்கள் இவ்வாறான தொழிலுக்குச் செல்வதற்கு அனுமதிப்பீர்களா? சர்வதேசத்தின், தொண்டு நிறுவனங்களின் துணையுடன் குறித்த பெண்ணை மீட்டெடுப்பதற்கு உங்கள் குழுமத்திற்கோ வசதியில்லயா? அல்லது இருந்தும் சுவாரசியமாக எழுதுவதற்கு விடயம் கிடைத்தால் போதும் என்று எண்ணுகிறீர்களா?

அவ்வாறு ஒரு நபர் இருந்தால் தானே உதவி செய்ய முடியும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனாலும் அப்பாவி வாசகர்கள் இது தொடர்பில் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவற்றினைக் குறிப்பிடுகின்றோம்.

அதனைவிடவும், தாயகத்தில் இன்னமும் உணவுக்கே வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணுடன் எவ்வாறு தொடர்பு கொள்ள முடிந்தது? (ஈபிடிபியின் நம்பிக்கைக்கு உரியவரான உங்கள் கதாசிரியர் தற்போதும் பெங்களுரில் தான் இருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும்) பசிக்காக விபச்சாரம் குறித்த செய்யும் அவரிடம் தொலைபேசி வசதி இருக்குமா?

உங்கள் எழுத்தாளர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்பது பகிரங்கமான விடயம். அவர் ஒரு உணர்வுள்ள தமிழனாக இருந்தால் அந்தப் பெண்ணிற்கு உதவி பெற்றுக்கொடுத்து அவரை மீட்டெடுக்க முயன்றாரா? அவர் அந்தப் பெண்ணிற்கு உதவி செய்வதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி ஒன்றையாவது உங்களால் குறிப்பிட முடியுமா?

“பலபேர் பலதும் கதைப்பாங்கள் எண்டு எனக்கு முதலே தெரியும் தம்பி… அதுதான் என்னத்துக்குப் பேட்டி எல்லாம் எண்டனான். இப்ப இதப் படிச்சுப்பிட்டு கத்துறவையைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவைக்கு நான் பிச்சை எடுத்தா, பிரச்சினை இல்ல. ஆனா, நான் விபச்சாரம் செய்தா அது பிழையாமாம். இத யாரிட்ட சொல்லி நான் அழ? விடு தம்பி… நான் விபச்சாரியாவே இருந்திட்டுப் போறேன்!”

(குறித்த வசனத்திலேயே ஈழத்து பேச்சு மொழியும் தமிழகப் பேச்சு மொழியும் கலக்கப்பட்டிருக்கின்றது – இதற்குள் ஆசிரியரின் கற்பனை சிறகு விரித்திருப்பது புலனாகிறது)

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று விபச்சாரத்தை ஒரு இலகுவான விடயமாக ஒரு ஈழத்துப் பெண்ணும் எடுத்துக்கொள்ளமாட்டாள்.

உங்கள் கவனத்திற்கு,

உங்கள் சஞ்சிகைக்கான பேட்டியினைத் தயாரித்திருந்தவர், தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுடன் தமிழகத்திலும் தாயகத்தில் உள்ள அரசியல் வாதிகளை கொச்சைப்படுத்தும் நோக்குடனேயே குறித்த பதிவினை மேற்கொண்டிருக்கின்றார். என்பதற்கான ஆதாரங்களை எமது ஆசிரியர் பீடம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது.

செவ்வியின் தொடக்கத்திலேயே,

”உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை… ‘இதுதானடா தமிழா… இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்”

யாருடைய முகத்தில் அறைய பேட்டிக்குச் சம்மதித்தார் என்பதை எழுத்தாளர் விளக்க முடியுமா? பொதுவான செவ்வியாக இருந்தால் இந்த விடயத்தினை குறிப்பிட்டு உங்கள் செவ்வி தொடங்கியிருப்பதன் நோக்கம் என்ன?

ஒரு கற்பனையை எழுதிவிட்டு அதற்காக மீண்டும் மீண்டும் பொய்களைக் கொண்டு நியாயங்கற்பிக்க முயலவேண்டாம்..

உங்கள் சஞ்சிகையின் வியாபாரம் என்னும் சிறக்க வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..

நன்றி

தமிழ்லீடர்

தொடர்புபட்ட செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*