Mano_Ganesan

மகிந்தவின் நீண்டகாலத் திட்டம் சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசு – மனோ செவ்வி

பதின்மூன்றவாது சட்டத்தில்  இருக்கும் பிரதான அதிகாரங்களை எல்லாம் வெட்டி குறைத்து தமிழர்களுக்கு அதைத் தீர்வாகத் தந்து சர்வதேசத்தை சமாளித்துவிட்டு , இலங்கையை சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசாக மாற்றுவதே அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் திரு. மனோ கணேசன் அவர்கள் தமிழ்லீடருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசாங்கத்தின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினருடனும் இணைந்து  மக்கள் போராட்டங்களை நடத்திவரும் திரு. மனோ கணேசன் அவர்கள் சிங்களப் பேரினவாதிகளின் அக்கினிப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும்போது மக்கள் பயப்படுவதில் நியாயமுள்ளது ஆனால் தலைவர்கள் பயப்பட முடியாது. அப்படியானால், அவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது எனக் கூறும் மனோ  அவர்கள் தமிழ்லீடருக்கு வழங்கிய முழுமையான செவ்வி:

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலான விவகாரத்தினை இனவாதக் கட்சிகளும் தொடராக அரச முக்கிய பிரமுகர்களும் கையில் எடுத்திருக்கிறார்கள்? இந்த விடயம் தற்போது பிரதானமாகப் பேசப்படுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதின்மூன்றில் இருக்கும் பிரதான அதிகாரங்களை எல்லாம் வெட்டி குறைத்து விட்டு வெத்துவேட்டாக அதை தீர்வு என்று  தர அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதாவது பதின்மூன்று மைனஸ். அதற்கு மேல் எதுவும் இல்லை. அதனால்தான், அதை இன்று பேசுபொருளாக அரசு திட்டமிட்டு மாற்றியுள்ளது. அதைதான் கோதாபய, பசில், வீரவன்ச, சம்பிக்க, தினேஷ் குணவர்தன ஆகியோர் மூலமாக அரசு பேசி செய்கிறது.

தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று அரசாங்கம் ஆத்மார்த்தமாக சிந்திக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

இல்லை. உண்மையில்  உங்கள் கேள்வியில் உள்ள ஆத்மார்த்தம் என்ற சொல் இங்கே பயன்படுத்த கூடாத கெட்ட வார்த்தை.  நான் மேலே சொன்ன, பதின்மூன்று  மைனஸ் என்பதுகூட , இடைக்கால தீர்வுதான். ஐநா, இந்தியா, சர்வதேசம் ஆகியவை, தமிழர்களை பார்த்து, இதோ உங்களுக்கு தீர்வு பெற்று தந்து  விட்டோம் என்று சொல்லிவிட்டு கையை துடைத்துகொள்ள  ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். நீண்டகால திட்டம், சிங்கள பெளத்த ஸ்ரீலங்கா குடியரசு என்பதாகும். அதற்காக, ஒன்பது மாகாணங்களை  ஐந்தாக மாற்றுவார்கள். அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் விதமாக மாவட்ட எல்லைகளை மாற்றுவார்கள். அத்துடன் வன்னி பெரு  நிலத்தில்  இராணுவ குடியிருப்புகளை நிறுவுவார்கள். கவனியுங்கள், இராணுவ முகாம்கள் இல்லை, இராணுவ குடியிருப்புகள்!

தீர்வு தொடர்பில் இந்தியாவும் சர்வதேசமும் விடுத்து வருகின்ற அழுத்தங்களுக்கு இலங்கை அரசாங்கம் கட்டுப்படுமா?

அழுத்தம் என்றால். என்ன என்பதை பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற எதிர்பார்ப்புகளை  மனதில் சுமந்து   கடைசியில் ஏமாறவேண்டிவரும்.  உலக வல்லரசுகளின் முன்னுரிமை வரிசை பட்டியலில் நாம் முதல் பகுதியில் இல்லை. ஆகவே, இன்று சிரியா அன்று லிபியா, எகிப்து ஆகியவற்றிற்கு தரப்பட்ட அழுத்தங்கள் இங்கு கிடையாது.

இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு இலங்கை கட்டுப்படும் என்று நினைக்கிறீர்களா?

இந்தியாவின் கையில் அது இருக்கிறது. இந்தியாவை அசைக்கும் சக்தி தமிழக மக்களுக்கும் இருக்கிறது.

இலங்கைத் தமிழர் தொடர்பிலான விவகாரத்தில் சர்வதேச தலையீடு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழ்த் தலைமைகள் எந்த வகையிலான அரசியல் நகர்வினை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

சர்வதேச தலையீடு அதிகரித்துள்ளதா  என எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழ் தலைமைகள் என்ன செய்ய வேண்டும் என நான் இப்படி நினைக்கிறேன். 25 ம்  திகதி என் முகபுத்தகத்தில் (facebook) எழுதியிருந்தவற்றில் ஒரு பகுதியை நினைவூட்டுகின்றேன்.

…..புலிகளை அடுத்த புதிய தலைமைகளின் போக்கு மூன்று சமாந்தர வழி தடங்களில் இருக்க வேண்டும் (என நான் நினைக்கிறேன்)
ஒன்று, உள்ளூர் ஜனநாயக போராட்டம்; இரண்டு, தென்னிலங்கை சிங்கள ஜனநாயக-முற்போக்கு சக்திகளுடனான கூட்டிணைவு; மூன்று, சர்வதேச சமூகத்தை துணைக்கு அழைக்கும் செயற்பாடு
இந்த மூன்று சமாந்தர வழி தட கருத்தை நான்  நான் நீண்ட நாட்களுக்கு முன்னமேயே சொன்னேன்.  என்ன செய்வது? எம்மை, “குழந்தை பிள்ளைகள்” என நினைக்கும் தலைவர்களுக்கு நாம் சொல்வது கேட்காது.

இன்றைய தலைமை, சுலபமான அல்லது ஒப்பீட்டளவில் கஷ்டமில்லாத “மூன்றாவது” வழியை மாத்திரமே கடைபிடிக்கிறது. சமீபத்தில்கூட, கூட்டமைப்பின் அரசியல்வாதி ஒருவர், சர்வதேச சமூகம்தான் நமது (அரசியல்) தீர்வுபாதையை இனி தீர்மானிக்க வேண்டும் என பகிரங்கமாகவே நம்பிக்கையுடன் அறிவித்தார்.  அந்த நம்பிக்கை நிஜமானால் நல்லதுதான்.  ஆனால், எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.

அடுத்து வரும் மார்ச் மாதம் வரை சர்வதேச சமூகத்துக்கு அவகாசம் இருக்கிறது. இவர்கள் அமெரிக்காவையும், இந்தியாவையும் அதீதமாக நம்பி இருக்கிறார்கள்.  அதனால்தான், நான் மேலே சொன்ன முதலாம், இரண்டாம் வழி தடங்களை முன்னெடுப்பதில் கூட்டமைப்பு அக்கறை காட்டவில்லை.

 போரின் வெற்றி, பேரினவாத ஆணவத்திற்கு  அன்றாட அரசியலுக்குள் ஒரு ஏற்புடைமையை ஏற்படுத்தி விட்டது. இங்கு சிலர் நம்பி இருக்கும் ஒரே கடவுளான “சர்வதேசம்”,  நம்மை  அடுத்த  மார்ச்சில் கைவிட்டு விட்டால், அதுவும் ஒரு போர் வெற்றியாகவே தென்னிலங்கையில் கணிக்கப்படும். அப்போது, இந்த ஆணவம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்……

ஆகவே தமிழ் தலைமைகள் வரும்வரை காத்திருக்காமல், வரும்போதும் காத்திருக்காமல், வருமுன்னமேயே, மேலே நான் சொன்ன முதலாம், இரண்டாம் வழி தடங்களிலும் காத்திரமாக பயணிக்க வேண்டும். வேறு வழி இல்லை.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் உங்கள் நிலைப்பாடு?

இந்த கேள்விக்கு பதில் சொல்வது பயனற்ற வேலை. வேண்டாம், விடுங்கள். இருக்கும்.  அதிகாரங்களையே பயன்படுத்த முடியாது. இதற்கு ஒரு அடையாள எதிர்ப்பை காட்டலாம். இந்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல வழக்குகளில்  ஒன்றில் நானும் ஒரு மனுதாரர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் போதுமானவையா?

இல்லை. காத்திரமான செயல்பாடு இல்லை. காத்திருக்கும் செயல்பாடுதான் இருக்கிறது. அரசியல் தீர்வு பேச்சு வார்த்தை என்பது ஒரு தளத்திலும், அரசியல் கைதிகளின் பிரச்சினை உட்பட மனித உரிமை-மனித நேய விவகாரங்கள் என்பது இன்னொரு தளத்திலும் நடக்க வேண்டும். அதற்கு காத்திரமான ஒருங்கிணைப்பும், வேலைத்திட்டமும், வேலைப்பகிர்வும் இருக்க வேண்டும். அது ஒன்றையும் இங்கு காணோம்.

போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது அச்சம் காரணமாக மக்கள் பங்கெடுக்க தயங்குகிறார்கள் என்ற ஒரு காரணத்தினை சில தலைவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதில் இருந்து மக்கள் வெளிவரமாட்டார்களா?

உங்கள் கேள்வியில் தொக்கி நிற்கும் அர்த்தம் புரிகிறது. மக்களும் பயப்படுகிறார்கள். தலைவர்களும் பயப்படுகிறார்கள். இன்று எஞ்சியுள்ள மக்கள், ஒரு கொலைகார யுத்த அவலத்தை நேரடியாக கடந்து வந்திருக்கிறர்கள். ஆகவே மக்கள் பயப்படத்தான் செய்வார்கள். அதிலென்ன ஆச்சரியம்? மக்கள் பயப்படுகிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

ஆனால், தலைவர்கள் பயப்பட முடியாது. அப்படியானால், அவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது.  இந்த பயம் என்ற தடையை அகற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இதை நான் நீண்ட நாட்களாக சொல்லி  வருகிறேன். மீண்டும் சொல்கிறேன். வடக்கின் ஐந்தும், கிழக்கில் மூன்றுமாக எட்டு மாவட்டங்கள் உள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்ற அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், ஒரு நாள்  அடையாள அறவழி சத்தியாகிரகங்கள் ஏற்பாடு  செய்யப்பட வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், இன்று வட கிழக்கில் பதின்மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், பதினோரு மாகாணசபை உறுப்பினர்களும், பெருந்தொகை நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளர்கள். இந்த அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், கட்டாயமாக இந்த எட்டு மாவட்ட தலைநகர்களிலும் நடைபெறும் அறவழி சத்தியாகிரகங்களில் கலந்து கொள்ள வேண்டும். இது நடைபெறுமானால்,  தெற்கிலிருந்து  எனது தலைமையில் நமது கட்சியினரும், எங்களுடன் சிங்கள முற்போக்கு அணியினரும் இந்த அறவழி போராட்டங்களில் கலந்துகொள்வோம். நாங்கள் ஏற்கனவே வடக்கு சென்று இத்தகைய அறவழி போராட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டோம்.

இந்த அறவழி போராட்டங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். இது மட்டும்தான், இது ஒன்றுதான், படிப்படியாக மக்களை அச்சம் என்ற நிலையிலிருந்து வெளியே கொண்டு வரும். முதல் ஓரிரு  சத்தியாகிரகங்களை அடுத்து மக்கள் படிப்படியாக வரத்தொடங்குவார்கள். இதை எவராலும் தடுக்க முடியாது.
நான் சொல்கிறேன். இது நடக்கும். இதை நான், கோர யுத்தம் நடந்த கால கட்டத்தில் கொழும்பிலேயே செய்து காட்டியிருக்கிறேன்.

தமிழ் மக்களின் இறைமையுள்ள போராட்டம் சரியான முறையில் அனைத்துத் தரப்பிடமும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறதா?

அனைத்து தரப்பு என்பது உள்நாட்டிலா, வெளிநாட்டிலா? புரியவில்லை. உள்நாட்டில் புலிகளின் காலத்தில் “அவர்கள்” போராடுவார்கள் என மக்கள் பெருந்திரளினர் இருந்துவிட்டார்கள். புலிகளும் மக்களை முழுமையாக உள்வாங்கவில்லை. இன்று, மக்கள், குழம்பியிருக்கிறார்கள்.

வெளிநாட்டில் என்றால், தமிழகம்தான் கண்ணுக்குள் வருகிறது. உண்மையில் மேலே நான் சொன்ன, மூன்று வழித்தடங்களுக்கு அப்பால், நமது போராட்டம், தமிழக அரசியல் கட்சிகளிடம் ஆழமாக கொண்டு செல்லப்பட வேண்டும். இன்று, அங்கு போராட்டம் ஆழமாக, தன்னுயிரை மாய்க்கும் அளவிற்கு இருக்கிறது. ஆனால், கருத்து என்பது அங்கு இன்னமும் நுனிப்புல் மேய்தலாகத்தான் இருக்கிறது. தமிழகத்தை தாண்டி இந்திய தேசிய சிவில் சமூக அமைப்புகளையும் சென்று அடைய வேண்டும்.
மேற்கு நாட்டு அரசுகளுக்கு ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டிது இல்லை. (நாம் உள்நாட்டிலும், புலத்திலும் வெளியில் வந்து போராடினால் அவர்கள் அசைந்து கொடுப்பார்கள்)

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நில ஆக்கிரமிப்பு? வளங்கள் சுரண்டப்படுகின்றமை தொடர்பில் தமிழ் மக்கள், அவர்களின் பிரதிநிதிகள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், என்ன செய்யவில்லை என்பது  நான் மேலே நிறைய சொல்லி விட்டேன். மீண்டும், மீண்டும் இதை பற்றி பேசி மனங்களை சங்கடப்படுத்த வேண்டாமே.

அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினையே பெற்றுக்கொள்வோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அடிக்கடி வலியுறுத்திவருகின்றார். இந்நிலையில் ஏதாவது ஒரு தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு சிங்கள இனவாத கட்சிகளும் முஸ்லிம்காங்கிரஸ் போன்ற அரச நிலை சார்புக் கட்சிகளும் உடன்படும் என்று கருத முடியுமா?

சம்பந்தன் சொல்வது சரி. அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு என்றுத்தான் அவர் சொல்ல வேண்டும். அவருக்கு இன்று அதைவிட வேறு வழியில்லை. சிங்கள கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி மேலே பேசிவிட்டேன். மீண்டும் சொல்ல  என்ன எஞ்சி இருக்கிறது?

முஸ்லிம் கட்சிகள் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தை மையமாக வைத்து தென்கிழக்கு மாவட்டம் என்று பேசி கொண்டிருந்தார்கள். இடையில் திடீரென, நடந்து  முடிந்த கிழக்கு தேர்தல் காலத்தில், வடக்கு தமிழர் மாகாணம், கிழக்கு முஸ்லிம்  மாகாணம் என்று பேசத்தொடங்கி விட்டார்கள்.

ஆனால், இன்று சிங்கள பெளத்த அதிகாரம் அவர்களை குறி வைத்துள்ளது. தமிழர்களும் நாடு கேட்டு இன்று மாகாணம் என்று நிற்பதைபோல், அவர்களும் தென்கிழக்கு மாவட்டத்தை விட்டு விட்டு முழு கிழக்கு மாகாணமும் எங்களது என்று இனவாத ஆசையில் சொல்லப்போய், இன்று பேரினவாதிகளின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமிழர்களுடன் போராட்டத்திலும் பங்கு பெறாவிட்டால், அவர்களுக்கு தீர்வில் பங்கு கிடைப்பது கஷ்டம். தமிழர்களுக்கு விட்டு கொடுத்தாலும், இவர்களுக்கு கொடுக்ககூடாது என பிரபல பேரின அரசியல்வாதிகள் எந்த வித வெட்கமும் இல்லாமல் பகிரங்கமாக முஸ்லிம் சகோதரர்களை பற்றி பேசுவதை நான் என் காதால் நேரடியாக கேட்டுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*