Seeman

புலத்து மக்களுக்கு அறிவுரை சொல்லும் சீமானுக்கு திறந்த மடல் !

தமிழகத்தில் பிறந்து ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்துவரும் தமிழ் உணர்வாளர்களில் ஒருவராக எழுச்சி முழக்க உரைகள் மூலம் உணர்வின் எல்லைவரை சென்றுவரும் சீமான் அவர்களுக்கு வணக்கம்!

தென்னிந்தியாவின் முன்னணி இசைக்கலைஞராக விளங்குகின்ற இசைஞானி இளையராஜா அவர்களது இசை நிகழ்ச்சி கனடாவில் நடைபெற ஏற்பாடாகி இருப்பது தொடர்பிலும் அதனை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் தெரிவித்து நீங்கள் வெளியிட்டிருந்த காணொலியினை நாங்களும் பார்வையிட்டோம்.

கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது. குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்ற உங்களுக்கு அந்த உரிமை இன்னும் சிறப்பாக இருக்கின்றது என்றே கொள்ளலாம். ஆனாலும் நீங்கள் தற்போது கதைப்பதற்காக தேர்ந்தெடுத்திருக்கின்ற இரண்டு விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்கவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதால் இந்த மடலினை எழுதுவற்கான சூழல் தவிர்க்க முடியாமல் எம் மீது திணிக்கப்பட்டிருக்கின்றது. ஒன்று மாவீரர்கள், இரண்டாவது புலம்பெயர்ந்தவர்கள்.

மாவீரர் மாதத்தில் (நவம்பர் 3) இசைஞானி இளையராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவது பொருத்தம் அல்ல எனவே அதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு நீங்கள் கேட்டிருப்பது பொருத்தப்பாடற்றது. குறிப்பாக இவ்வாறான நிகழ்ச்சிகளைப் பார்த்த பின்னர் மாவீரர் நாளுக்காக மக்கள் தயாராக முடியுமா? என்று கேட்டிருக்கிறீர்கள். லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழக நடிகர்கள் சரத்குமார், ராதிகா ஆகியோர் பங்கு கொண்டிருந்ததாகவும் அதில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பார்வையாளராகக் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ள நீங்கள், இவ்வாறான நிகழ்வுகளில் பங்குகொள்பவர்கள் அனைத்தையும் மறந்துவிட்டதாகவும் இவ்வாறான நிகழ்வுகளில் பங்குகொள்ளும் இனத்தை எதிரி கொன்று குவிப்பதில் என்ன தப்பிருக்கிறது? என்று உங்களுக்கு எண்ணத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இவ்வாறான ஒரு எண்ண ஓட்டம் உங்களிடம் இருப்பது உங்கள் தொடர்பிலும் உங்கள் ஈழ ஆதரவு நிலைப்பாடு தொடர்பிலும் பலத்த சந்கேத்தினை அல்லவா மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கிறது. மாவீரர் நாளுக்கு தயாராவதற்கு எங்கள் மக்கள் மாவீரர்களை சினிமாவில் வரும் கதாபாத்திரங்களாக நினைக்கவில்லை ஐயா. அவர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் உறவுகளை தங்களுக்காக மடிந்தவர்களை தங்கள் மனதிலேயே வைத்திருக்கிறார்கள். மாவீரர் நாள் அன்று எந்த மூலையில் இருந்தாலும் தீபம் ஏற்றும் நேரம் ஒவ்வொருவர் மனங்களும் தங்களை அறியாமலேயே மாவீர்களை நினைந்துருகிக் கொள்ளும். அந்த நாளை மறந்து போவதற்கு புலத்தில் உள்ள மக்கள் ஒன்றும் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்களும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் தான். அங்கு வாழ்பவர்களின் பிள்ளைகளும், உறவுகளும் கரும்புலிகளாக, மாவீரர்களாக தாய் மண்ணில் விதையாகியிருக்கிறார்கள்.

தாயக விடுதலைப் போராட்டம் தொடக்கம் முதல் அதனைச் சுமந்து சென்றவை இரண்டு தோள்கள் என்றால், ஒன்று தாயகத்தில் உள்ள மக்கள் , இரண்டாவது புலத்தில் உள்ள மக்கள். புலத்து மக்களும் தாயகத்து மக்களும் இணைந்து விடுதலை என்ற பிள்ளையைச் சுமந்து சென்றார்கள். தாயக விடுதலைக்காக அதன் வளர்ச்சிக்காக, அதன் கட்டுமாணங்கள் ஒவ்வொன்றையும் வளர்த்தெடுப்பதற்காக, படைத்துறைகளை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு போராளிகளதும் அன்றாட செலவிற்காக, தமிழீழத்தில் செயற்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் செலவீனத்திற்காக நிறுவனங்களில் பணி செய்த பல பத்தாயிரம் பணியாளர்களின் ஊதியங்களுக்காக, தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவைகளுக்காக, அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இன்னும் எண்ணிவிடமுடியாத பல்லாயிரம் தேவைகளுக்காக செலவிடப்பட்ட நிதிப்பங்களிப்புக்களில் பிரித்துப்பார்க்க முடியாத அளவு அள்ளி இறைத்தவர்கள் புலத்தில் வாழ்க்கின்ற எம் தமிழ் உறவுகள்.

வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு பணம் எதுவும் இனாமாகக் கிடைப்பதில்லை என்பது தங்களுத் தெரிந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் எங்களுக்கில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் கண் துஞ்சாது நித்திரை முழித்து பழக்கமற்ற காலநிலையுடன் போராடி சிறுகச்சிறுகச் சேர்த்தவற்றையே தமது அன்றாட தேவைகளுக்கும் செலவழித்து தாய் நாட்டிற்காகவும் அள்ளிக்கொடுத்தார்கள். இவற்றை விடவும், தேசிய விடுதலைக்காக உழைத்தமைக்காக, அதற்காக குரல் கொடுத்தமைக்காக, அதற்காக ஒத்துழைத்தமைக்காக ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் உறவுகள் புலத்தில் இருந்து தாயகம் திரும்ப முடியாத நிலையில் தாயகத்தில் வாழும் பெற்றெடுத்த தாயை உடன்பிறந்த சுற்றத்தை தாம் வாழ்ந்த முற்றத்தை எதையுமே பார்க்க முடியாத நிலையில் இன்றுவரையில் வாழ்க்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?

லண்டன் நிகழ்வில் எம் மக்கள் பங்குகொண்டமையால் எதிரி கொன்றுகுவிப்பதில் தப்பில்லை என்று கருதுவதாகத் தெரிவிக்கும் நீங்கள்.. சரத்குமார் ராதிகா நிகழ்வில் இவ்வளவு மக்கள் கலந்துகொண்டதால் கொன்று குவிக்கப்படலாம் என்று கருதுகிறீர்களா? அதாவது கட்சி அரசியல் சார்ந்து சிந்திக்கிறீர்களா? அல்லது புலத்து வாழ் தமிழர்கள் எந்த நிகழ்விலும் பங்குகொள்ளவே கூடாது என்று கருதுகிறீர்களா? என்பதுதான் புரியவில்லை. இவ்வாறு தெரிவிக்கும் நீங்கள் அதே காணொலியிலேயே இந்த விடயத்திற்கு முரண்பட்ட விடயம் ஒன்றையும் தெரிவித்திருக்கின்றீர்கள். இளையராஜாவின் நிகழ்ச்சினை நடத்தவேண்டாம் என்று சொல்லவில்லை ஒக்ரோபர் மாதம் நடத்தலாம் அல்லது டிசம்பர் மாதம் நடத்தலாம் நவம்பர் மாதம் 2ஆம் திகதி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாள்வருகிற படியால் எவ்வாறு மறுநாள் இவ்வாறான நிகழ்வினை நடத்துவது எனக்  கேள்வி எழுப்பியிருந்தீர்கள்.

ஐயா சீமான் அவர்களே!

எங்கள் தேச விடுதலைக்காக வீழ்ந்த மாவீரர்கள் அனைவரது நினைவு நாளையும் பார்த்தால் ஆண்டில் வருகின்ற அனைத்து நாட்களிலும் நினைவு நாட்கள் வரும்.. அதற்காகவே முதல் மாவீரன் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளை அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவுநாளாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேர்ந்தெடுத்தார். நீங்கள் கூறிய கருத்தினை முற்றாக நிராகரிப்பதற்காக இன்னும் சில உதாரணங்களை உங்களுக்காகக் குறிப்பிடுகின்றோம்.

ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி 2007ஆம் ஆண்டு வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நடந்திருந்தது.. உங்களுக்கு நினைவிருக்கும்.. அனுராதபுரம் விமானப்படைத்தளத்தினை இலக்குவைத்து எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சம்பவத்தில் 21 கரும்புலிகள் தம்மையே அழித்து வீரவரலாறாகியிருந்தார்கள். அதேபோல டிசம்பர் 14ஆம் திகதி தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களை விட்டுப்பிரிந்த நினைவுநாள்.. எனவே உங்கள் அரசியல் நோக்கங்களுக்காக எங்கள் மாவீர்களைக் குறிப்பிட்டு இலாபம் ஈட்டுவது பொருத்தப்பாடு அற்ற ஒன்று என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

தமிழகத்தில் இருக்கின்ற உணர்வாளர்களின் உணர்வுகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாங்கள் குறைத்து மதிப்பிடுவதில்லை. நீங்கள் குறைத்து மதிப்பிடுவதை நாங்கள் ஏற்கப்போவதுமில்லை. 80களில் போராட்டம் தோற்றம் பெற்றது முதல் இறுதிவரை அதற்காக உழைத்து இலைமறை காய்களாக வெளித்தெரியாமல் இருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலான தாய்த்தமிழக மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கின்றோம்.. ஆனாலும் உங்கள் கருத்து அவர்களில் பலரைக் கொச்சைப்படுத்துவதாகவே நாங்கள் உணர்கிறோம். நீங்கள் உங்களது உரையில் ஒரு விடயத்தினைக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இலங்கையில் நடைபெற ஏற்பாடாகியிருந்த பல நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு முற்பட்ட பலரை நீங்கள் வீடு வீடாகச் சென்று மறித்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அவ்வாறாயின் அவர்கள் அனைவரும் நிலைமையின் தார்ப்பரியத்தினை அறிந்து கொள்ளாமலா இலங்கை வருவதைத் தவிர்த்தார்கள்? அவர்கள் ஒவ்வொருவரிடமும் தமிழின உணர்வு இல்லையா? இந்திய இராணுவம் இலங்கை வந்து தமிழ் மக்கள் மீது சொல்லிவிடமுடியாத கொடுமைகளைப் புரிந்து வெளியேறிய போதும் இந்திய இராணுவத்திற்கு எதிராக பாடல்களுக்கு இசை அமைத்த கலைஞர்களும் பாடல்களைப் பாடிய பாடகர்களும் இன்றும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சினையினை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நீங்கள் மாவீர்களை கையில் எடுத்துக்கொண்டு அவர்களைக் காரணம் காட்டி மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு அனுமதிப்பது என்பது சிரமமான விடயம். மாவீரர்களை நினைப்பதற்கு அவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு யாரும் வழிகாட்டி அதனைப் பின்பற்றிச் செயற்பட வேண்டிய ஒரு இழிவான நிலையில் புலத்துவாழ் தமிழினம் இல்லை என்பதை தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உங்களது காணொலியில் மிகப் பௌவியமாக இசைஞானி இளையராஜா அவர்களது மனம் நோகாதபடி பார்த்துக்கொண்டு கதைத்திருக்கிறீர்கள். ஒரு இடத்திலும் அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி அவரைக் கேட்டுக்கொள்ளவே இல்லை. மாறாக அதனை ஏற்பாடு செய்தவர்களும் அதற்குச் செல்பவர்களுமே குற்றவாளிகள் போல தோற்றங்காட்டப்பட்டிருக்கிறது. உங்களது துறை சார்ந்தவர் என்பதாலும் தமிழ்த் திரைத்துறையில் மிக உயர்வான இடத்தில் இருப்பவர் என்பதாலும் நீங்கள் அவர் தொடர்பில் பக்குவமாக கருத்துச் சொல்லியிருக்கலாம். அதில் நியாயமும் இருக்கலாம். உங்களைப்போலவே புலத்துவாழ் எம் மக்களும் அவர் மீது அளவுகடந்த பக்தியும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள். மாவீரர்களைக் காரணம் காட்டி ஈழத்தமிழ் உணர்வாளர்களுக்கும் அவ்வாறான கலைஞர்களுக்கும் இடையில் நீங்கள் இடைவெளியினைத் தோற்றுவித்துவிடக்கூடாது என்பதே எங்கள் ஆதங்கம்.  மாவீரர் நாள் வருகின்ற மாதம் என்பதைச் சொல்லி அவரது நிகழ்ச்சியினைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்துவது இளையராஜாவை நேசிக்கின்ற அதேநேரம் ஈழத்தமிழ் விடுதலையை நேசிக்கின்ற தமிழ் மக்களின் மனதினைக் கூட குழப்பிவிடலாம். எமது விடுதலைக்காக ஆதரவுக்கரம் நீட்டுகின்ற ஒரு உறவினைக்கூட நாம் இழந்துவிடக்கூடாது என்பதும் எங்களது எதிர்பார்ப்பாகும்.

கேளிக்கைகள் கொண்டாட்டங்களில் புலத்தில் வாழ்பவர்கள் கலந்கொள்கிறார்கள் என ஆதங்கப்பட்டுக்கொள்ளும் நீங்கள் அந்த விழாக்களில் பங்கேற்போர் உள்ள சினிமாத்துறையில் தானே நீங்களும் இருக்கிறீர்கள், என்பதை ஏன் புரிந்துகொள்ளவில்லை. அல்லது ”ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி” என்ற கிராமத்து பழமொழிக்கு அமைய செயற்படுகின்றீர்களா? என்ற சந்தேகமும் தோன்றுகிறது.. மாவீரர்களையும் புலத்துவாழ் எம்மவர்களையும் கையிலெடுத்து நீங்கள் கதைக்க முற்பட்டதன் விளைவாகவே நாங்கள் இவ்வாறு எழுத நேர்ந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே இறுதியாக உங்களிடம் வினயமாக ஒரு  வேண்டுகோள்,

எங்கள் விடுதலைக்காக நீங்கள் தொடர்ந்தும் கொடுத்துவருகின்ற குரல்களுக்காக தலைவணங்குகிறோம். ஆனாலும் எங்கள் மாவீரச் செல்வங்களின் பெயர்களைச் சொல்லி எங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்லமுற்பட வேண்டாம் ஈழத்தமிழ் மக்கள் ஒவ்வொருவது வாழ்வியலிலும் ஒன்றித்தவர்கள் மாவீரர்கள். மாவீரர்களை வழிபடுவதற்கான வழிகாட்டுதல்களை யாரும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய தேவை இல்லை. காலத்தால் அழியாத சிரஞ்சீவிகளைச் சொல்லி எவராவது கதை சொல்ல முற்பட்டால் எதிர்த்து நிற்போம். எதிர்த்தெழுவோம்.

நன்றி

தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*