leader

இராணுவத்தை எதிர்த்து மீண்டும் நிரூபித்த முல்லை மண்!

தமிழர் தாயகத்தின் மீதான சுரண்டல் பல்வேறு வடிவங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில் அவை தொடர்பில் கேள்வி எழுப்பியர்களை இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கமுற்பட்ட சம்பவம் ஒன்றும் அதற்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகவே எதிர்ப்புத் தெரிவித்த சம்பவமும் முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கில் பெறக்கூடிய அனைத்து வளங்களையும் வாரிச்சுருட்டிக்கட்டிக் கொண்டு தென்னிலங்கைக்கு செல்லும் நடவடிக்கையில் அரசாங்கமும் இராணுவமும் பெரும்பான்மை இன மக்களும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்கு உதாரணமாக முக்கியமான போக்குவரத்து வீதிகள், வழிபாட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மையப்படுத்தி விற்பனை நிலையங்களை நிறுவுதல் அந்தப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகளினது உழைப்பையும் வருவாயையும் சுரண்டுதல், தமிழர் தாயகக் கடற்பரப்பில் அத்துமீறி தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் துணையுடன் மீன் வளத்தினைச் சுரண்டுதல், விவசாய நடவடிக்கைகளில் தலையிட்டு நுகர்வோரின், உற்பத்தியாளர்களின் நிதிகளை சுரண்டுதல், அரச திணைக்களங்களில் சிங்கள மொழியினைத் திணிப்பதன் மூலம் தமிழ் மொழியின் வீரியத்தினை வீழ்த்துதல், தமிழர் தாயகத்தில் உள்ள காணிகளை பெருமளவு பணத்தினைச் செலுத்தி சிங்கள மயமாக்கல், அரச அதிகாரிகளின் துணையுடன் பொதுவான காணிகளை இராணுவத்திற்கும் சிங்களவர்களுக்கும் எழுதிப் பெற்றுக்கொள்ளல் போன்ற மிக மோசமான நடவடிக்கைகள் மிக வேகமாக நடைபெற்றுவருகின்றன.

வெவ்வேறு விதம் விதமான நடவடிக்கைகள் வெவ்வேறு முனைப்புக்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமையால் பேரினவாதச் சுரண்டல்களின் தாக்கத்தின் விளைவுகள் பெரிதாகத் தெரியவரவில்லை. ஆனாலும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தால் இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழர் தாயகத்தில் தமிழர் வாழ்ந்தார்களா? என்று சந்தேகப்படும்படியான நிலை தோற்றம் பெறுவதற்கான அபாயச் சூழலே காணப்படுகின்றது.  இதன் தொடராக முல்லைத்தீவு நகரை அபிவிருத்தி செய்தல் என்ற போர்வையிலான மற்றொரு சுரண்டலுக்கான முனைப்பு நேற்று (03-10-2012) நடைபெற்ற போது அது தொடர்பில் கேள்வி எழுப்பிய அரச அதிகாரி ஒருவரை இராணுவப் பிரிகேடியர் தாக்க முற்பட்ட சம்பவமும் அதற்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவமும் நிகழ்ந்திருக்கின்றது.

முல்லைத்தீவு நகர அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளவருமாறும் முல்லைத்தீவு மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கின்றது. கரைதுறைப் பற்று பிரதேச செயலரின் அழைப்பினை ஏற்று மக்கள் பிரதிநிதிகள் நேற்று (03-10-2012) பிற்பகல் இரண்டு மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் ஒன்றுகூடியிருந்தனர். அதன் போது இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் அதிகாரிகளும் அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்றிருக்கின்றனர். நிகழ்வு தொடங்கியதும் நகர அபிவிருத்தி தொடர்பிலான திட்ட வரைபு ஒன்றினை மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் காட்டி அது தொடர்பில் விளகத்தையும் வழங்கினர். அவர்களின் திட்டத்தின் அடிப்படையில் முல்லைத்தீவு நகரை உள்ளடக்கி கடற்கரையோரமாக 350 மீற்றர் தூரத்தை பெற்றுக்கொண்டு அந்தப் பகுதியை சுற்றுலா மையமாக்குதல், அங்கு விடுதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மதுபானச் சாலைகள் உட்பட்டவற்றை அமைப்பது எனத் தெரிவித்து உரையாற்றியிருக்கின்றனர்.

இதன் போது இடைமறித்த முல்லைத்தீவு காணி உத்தியோகத்தர் சோ.சேந்தன் குறித்த விடயங்கள் தொடர்பில் உரையாற்றுகின்றீர்கள். அவ்வாறாயின் அந்தப் பகுதிகளில் குடியமர்ந்திருக்கின்ற 2000ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் நிலை என்ன? அவர்கள் எங்கே செல்வது என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார். உடனடியாக அங்கு கருத்துத் தெரிவித்த இராணுவப் பிரிகேடியர் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது என்றும், இது தொடர்பில் பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்ததுடன், அங்கு கூடியிருக்கின்ற மக்களை நான்கு குழுக்களாகப் பிரிக்க முற்பட்டிருக்கின்றார். 1. அனர்த்த முகாமைத்துவம். 2. மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகள், 3. சுற்றுலாத்துறை அபிவிருத்திச் செயற்றிட்டம், 4. நகர முன்னேற்றம் ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நான்கு குழுக்களாகப் பிரிந்து செயற்படுமாறு தெரிவித்திருக்கின்றார். இந்த நடவடிக்கை மக்களைப் பிரிப்பதன் ஊடாக எதிர்ப்புக் குறைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் எனவே அதன் மூலம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்று இராணுவத் தரப்பு எண்ணியிருக்கின்றது. இருப்பினும் அதற்கு மக்கள் பிரதிநிதிகள் உடன்பட மறுத்திருக்கின்றனர். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் எனவே எமது பகுதிகளில் நடைபெறுகின்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் எனவே நாங்கள் பிரிந்து செல்ல முடியாது என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

மீண்டும் கரையோர நில சுவீகரிப்பு விவகாரம் பேசப்பட்டிருக்கின்றது. அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நட்டஈடு வழங்கமுடியும் அதற்கு ஒத்துழைக்குமாறு பிரதேச செயலரும் இராணுவத்தினரும் வலியுறுத்தியிருக்கின்றனர். முல்லைத்தீவு மக்களைப் பொறுத்த மட்டில் அவர்களது வாழ்க்கை என்பது கடற்கரையை அண்டியதாகவே அமைந்துவருகின்றது. அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டால் அவர்களது வாழ்க்கையில் பாரிய பாதிப்பு ஏற்படும் எனவே அது சாத்தியமற்ற விடயம் என முல்லைத்தீவு காணி உத்தியோகத்தர் சேந்தன் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்றார். உடனடியாக ஆத்திரமடைந்த பிரிகேடியர் அவரைத் தாக்குவதற்காக ஓடிச் சென்றிருக்கின்றார். அங்கு நின்றிருந்தவர்களால் அவர் மீதான தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் உரையாற்றிய கரைதுறைபற்றுப் பிரதேச செயலர், அங்கு கூடியிருந்தவர்களை முரண்டுபிடிக்கவேண்டாம் என்றும் இந்தத் திட்டத்திற்கு உடன்படுமாறும் கேட்டதுடன், கரையோரத்தில் 350 மீற்றர் தூரத்தினை வழங்க முடியாதுவிட்டால் 125 மீற்றர் அளவு தூரத்தினை கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் பிரதிநிதிகள் எந்தச்சந்தர்ப்பத்திலும் இதற்கு உடன்பட முடியாது என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கின்றனர். இதனைவிடவும் முல்லைத்தீவு அபிவிருத்தித் திட்டத்தினை மூன்று இடங்களில் முன்னெடுப்பதற்கான திட்டம் இருப்பதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு நகர அபிவிருத்தித் திட்டம், வற்றாப்பளை கலாச்சார அபிவிருத்தி திட்டம் மற்றும் நாயாற்று அபிவிருத்தித் திட்டம் என்ற மூன்று திட்டங்களும் நடைமுறைப்படுத்த ஆலோசித்திருப்பதாகவும் அரச அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதன் போது வற்றாப்பளை கலாசார அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அங்கு சுற்றுலா மையம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டால் இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்ற குறித்த ஆலய வளாகத்தில் மதுபான சாலைகள், சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்று கலாச்சாரம் சீரழிக்கப்படுமே தவிர அங்கு கலாசாரம் அபிவிருத்திபெறாது என்பது நோக்கத்தக்கவிடயமாகும்.

இது இவ்வாறு இருக்க, முல்லைத்தீவு அபிவிருத்திச் சங்கத் தலைவர்களில் ஒருவரும் போருக்கு முன்னர் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவராக சேவையாற்றியவருமான ரவிகரன் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரின் முன்னிலையில் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருக்கின்றார். நாங்கள் குடும்பத்தினர், எங்களுக்கும் மனைவி, பிள்ளைகள் உள்ளனர். தீர்மானங்களை இறுதி செய்தபின்னர் சம்பிரதாயபூர்வமாக எங்களை அழைத்து உங்கள் கருத்துக்களைத் திணிக்கவேண்டாம். நீங்கள் முடிவுகளை எடுத்தால் அவற்றினை நடைமுறைப்படுத்துங்கள். எங்கள் முன்னிலையிலேயே எங்களுக்காக குரல் கொடுக்கின்ற அரச உத்தியோகத்தருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது. அவருக்கே அந்த நிலை ஏற்படும் போது எங்களைப் போன்ற அப்பாவி மக்கள் பிரதிநிதிகளுக்கு எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் என்று காரசாரமாகத் தெரிவித்திருக்கின்றார். இந்தச் சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதே இராணுவ அதிகாரியும் இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினரும் அந்தக் கலந்துரையாடலில் கூடியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

முல்லைத்தீவு அபிவிருத்தி என்ற பெயரில் கடற்கரையோர வளங்களைச் சுரண்டுதல், அங்கு ஏற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கான நிதியினைச் சுரண்டுதல், அதற்காக சிங்கள நிறுவனங்களையும், சிங்களத் தொழிலாளர்களையும் பணிக்கமர்த்தல், அந்தப் பகுதிகளின் கலாசாரங்களைச் சீரழிப்பதற்கான அனைத்து வித நடவடிக்கைளயும் மேற்கொள்ளல் போன்ற அனைத்து உள்நோக்கங்களுடன் கூடிய ஒரு முனைப்பு முல்லைத்தீவு மக்களால் பகிரங்கமாக எதிர்க்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான விடயம் என்றாலும் கூட எதிராகக் குரல் கொடுத்தவர்களின் எதிர்காலம் என்ன? என்பதுதான் இப்போது உள்ள கேள்வியாகும்.  இதேபோல முல்லைத்தீவிற்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்கு எதிராக படகில் செல்வோம் என்று கேட்டபோது அண்மையில் அத்துமீறிக் குடியேறியிருக்கின்ற சிங்களவர்களுக்கு எதிராக நாயாற்றுக்குச் செல்வோம் வருகிறீர்களா? என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கேட்டுத் திருப்பி அனுப்பிய முல்லைத்தீவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பின்னால் உணர்வுள்ள தமிழிர்கள் வலுவாக நிற்பதன் மூலம் அவர்களின் உணவூட்டும் கடலையும், மண்ணையும் காத்துக்கொள்ளலாம் என்பது உண்மை.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*