leader

பணத்திற்கு “கலாநிதி“ பட்டம்! யாழ்.பல்கலைக்கழகத்தில் பெறலாம்?!

தமிழ் இனத்தின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற போதிலும் தமிழினத்தினைப் பழிவாங்கும் நடவடிக்கைகளும் அந் நடவடிக்கைளுக்கு துணை நிற்கும் தமிழினத்தின் சில சக்திகளும் ஒத்துழைக்கின்ற செயற்பாடுகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. நில ஆக்கிரமிப்பு அத்துமீறிய குடியேற்றம் எனத் தொடரும் நடவடிக்கையின் தொடராக தமிழ் மக்களின் கல்வியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தலைதூக்கியிருக்கின்றன. 

தமிழ் மக்களின் அடையாளமாக குறிப்பாக கல்வியிலும் அறிவார்ந்தவர்கள் பலரதுதோற்றுவாயாகக் கருதப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் பணத்திற்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்குகின்ற நடவடிக்கை தொடர்பிலான திடுக்கிடும் தகவல்கள் தமிழ்லீடருக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான நவீன பல்பொருள் விற்பனை நிலையம் மற்றும் திருமண மண்டம் ஒன்றினை நடாத்திவருகின்ற தியாகி எனப்படும் தியாகேந்திரன் என்பவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈபிடியின் கல்வி அபிவிருத்திக்குழு ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது.

இந்த நடவடிக்கையில் ஈபிடிபியின் கல்வி அபிவிருத்திக் குழு முக்கியஸ்தரும் நல்லூர் கோட்டக்கல்வி அதிகாரியுமான மாணிக்கராசா மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியரான இரா.செல்வவடிவேல் மற்றும் ஆங்கில ஆசிரியர் சுதர்சன் ஆகியோர் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றனர். குறித்த நபர்கள் பாடசாலை அதிபர்கள் கல்வி சார் அதிகாரிகளிடம் மாதிரிப் படிவம் ஒன்றைக் கையளித்து அதில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று தியாகேஸ்வரனுக்கு கலாநிதிப்பட்டத்தினை யாழ்.பல்கலைக்கழகம் வழங்கவேண்டும் எனத் தெரிவித்து அவர்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வலியுறுத்தலுக்கு அமைய யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரியரட்ணம் மற்றும் பாடசாலை அதிபர்கள் கோரிக்கைக் கடிதங்களை அனுப்பிவைத்திருப்பதாகத் தெரியவருகின்றது. பணத்திற்காக ஈபிடிபி இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமையும் பொருத்தமற்ற நபர்களுக்கு மதிப்பிற்குரிய பட்டங்களை வழங்குவதன் மூலம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட யாழ்.பல்கலைக்கழகம் தனது தனித்துவத்தினை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டிருப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் சிலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்களை மாற்றி அதன் ஊடாக சீரான கட்டமைப்புக்களை உடைய பாடசாலைகளைச் சிதைப்பதற்கான முயற்சியிலும் வல்லாதிக்க சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கு பிரதானசூத்திரதாரிகளாக ஈபிடிபியினர் ஈடுபட்டிருகின்றனர். அந்த வகைக்குள் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்.இந்து மகளிர் கல்லூரி, யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி உட்பட்ட உயர் கல்லூரிகளின் அதிபர்களை உரிய காரணங்கள் எதுவும் இன்றி இடமாற்றத்திற்கு உட்படுத்தி கல்லூரிகளின் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டிருகின்றன.

அதிபர்கள் பதவிகளில் இருந்து விலக்கப்படுகின்ற போது பாடசாலைக் கட்டமைப்புக்களில் பிறழ்வு நிலை ஏற்பட்டிருக்கின்றது. யாழ். இந்து மகளிர் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு நல்லூர் கோட்டக்கல்வி அதிகாரியாகவும் ஈபிடிபியின் கல்வி அபிவிருத்திக் குழுவின் முக்கியஸ்தராக விளங்கிவருகின்ற மாணிக்கராசா என்பவரே காரணமாக இருந்தார் என்பது பகிரங்கப்பட்டிருந்தது.  ஒரே வளாகத்தில் கல்வி அலுவலகமும் கல்லூரியும் செயற்பட்டுவந்திருந்தன. கல்லூரிக்குச் செல்கின்ற மாணவிகளை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்தமையை மாணவிகள் அதிபரிடம் முறையிட்டிருந்தனர். இதுதொடர்பாக அதிபர் தெரிவித்த எதிர்ப்பினை அடுத்து அதிபர் பழிவாங்கப்பட்டதுடன் அதிபருக்கு ஆதரவு தெரிவித்த மாணவிகளை வடமாகாண ஆளுநர் சந்திரசிறீ நேரடியாக அழைத்து மிரட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரான  மாணிக்கராசா தான் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பதவியினைக் கைப்பற்றுவதற்காக அங்கிருந்த அதிபரின் பதவியினைப் பறித்தெடுத்ததாக தெரியவந்திருக்கின்றது. இதேபோல வேம்படி மகளிர் கல்லூரியிலும் அரசியல் தலையீட்டினை மேற்கொண்டு அங்கிருந்த நிர்வாகச் செயற்பாடு சிதைக்கப்பட்டிருக்கின்றது. இதனை விடவும் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவிலும் முற்றுமுழுதான அரசியல் தலையீடு இடம்பெற்றிருந்தமை பரமரகசியமாகும்.  இவ்வாறான அரசியல்  அசிங்கங்களை அரங்கேற்றுவதற்காக கல்விச் சமூகத்தின் உயர் பீடங்களை கையிலெடுத்திருக்கின்ற ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் இடம்பெறப்போகும் மற்றொரு பயங்கரத்தினை கண்டு கொள்ளவில்லையா? அல்லது கண்டும் காணாமல் துணை நிற்கிறதா? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அதிகாரங்கள் இன்னும் சில வருடங்களில் சிங்கள மாணவர்களின் கைகளுக்கு மாறும் அபாய நிலை ஏற்பட்டிருக்கின்றமையே அந்தப் பயங்கரமாகும். அடுத்த ஆண்டு யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயில்வதற்காக யாழ்ப்பாணம் வருகின்ற சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அறுபதைவிட அதிகம் என்று தெரியவந்திருக்கின்றது. இதன் தொடராக அடுத்த அடுத்த ஆண்டுகளில் சிங்கள மாணவர்களின் யாழ்.பல்கலைக்கழகத்திற்கான அனுமதி எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என்றும் சிங்கள மாணவர்களின் அதிகரிப்பின் மூலம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பெரும்பான்மை சிங்களமயமாகின்றபோது தமிழ் மக்களின் வலுவான சக்தியாக விளங்குகின்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் சக்தியும் சிதறுண்டு போகும் அபாய நிலையும் உணரப்பட்டிருக்கின்றது.

சிங்கள இனவாதம் திட்டமிட்ட வைகையில் மிக நேர்த்தியாகவும் சாமர்த்தியமாகவும் தமிழினத்தின் மீதான ஆழமான சிதைப்பினைமேற்கொண்டுவருகின்றது. பதவிக்காகவும் பணத்திற்காகவும் தம்மை விலை கொடுத்திருக்கின்ற கல்வித்துறையில் உயர் பதவிகளில் உள்ளோரும் அரசியலில் உள்ளோரும் சில நாள் கனவுகளுக்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் விலைபேசும் நிலையினை என்று கைவிடுவோர்களோ அன்று தான் தமிழினத்திற்கான உண்மையான விடுதலை கிடைக்கும் இதுவே உண்மை.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*