leader

கிழக்குத் தேர்தலில் தோற்றது எதனால்? இனியாவது உரியவர்களுக்கு உறைக்குமா?!

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வன்முறைகளை பிரயோகித்து வெற்றியீட்ட முயற்சித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட 6217 வாக்குகளே கூடுதலாக பெற்றுள்ளது. கிழக்கு மாகாண ஆட்சியை ௭ங்களுக்கு வழங்குமாறு தேர்தல்கால பிரசாரங்களின்போது நாம் தமிழ் பேசும் மக்களிடம் கோரிக்கை விடுத்தோம். ௭மது கோரிக்கையை ஏற்று ௭மது மக்கள் அந்த ஆணையை வழங்கியுள்ளனர்.’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்குத் தேர்தலின் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்த செய்தியின் சாராம்சம் அது.

தேர்தல் பரபரப்பு மிகத் தீவிரமாக கிழக்கில் இடம்பெற்றிருந்தாலும் அதனுள் நடைபெற்ற வெளிவராத பல திடுக்கிடும் விடயங்கள் எங்களின் கவனத்திற்கு வந்திருக்கின்றன. அது பற்றிய திறந்த விமர்சனங்களை முன்வைப்பதற்கு தமிழ்லீடர் முனைகிறது. கிழக்குத் தேர்தல் களத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சி சார் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகளில் ஒன்றாகிய தமிழரசுக்கட்சி நடந்து கொண்ட விரும்பத்தகாத நடவடிக்கைகள் காரணமாகவே கிழக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோட்டைவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.

இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த ஆறாயிரத்து இருநூற்று பதினேழு வாக்குகள் வித்தியாசம் என்பது தமிழரசுக்கட்சி தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்ட செயற்பாட்டின் விளைவாகவே அமைந்திருக்கின்றது என்பதற்கான சான்றுகள் தமிழர்கள் மத்தியில் அதிர்ப்தியினைத் தோற்றுவித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகள் அங்கத்துவம் பெறுகின்ற போதிலும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட முடியாது ஏனைய கட்சிகள் முன்நிறுத்தும் வேட்பாளர்களுக்கு குறைந்தளவு வேட்பாளர் சந்தர்ப்பங்களே வழங்கப்படும் என்பதில் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி உறுதியாக இருந்திருக்கின்றது. வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான கூட்டம் திருமலையில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற போது சம்பந்தன் இந்த விடயத்தினை மிகத் தெளிவாக ஏனைய கட்சித் தலைவர்கள் மத்தியில் தெரிவித்திருக்கின்றார். ஏனைய கட்சிகளை தமிழரசுக்கட்சிக்கு நிகராக வைத்து நோக்க முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வேட்பாளர்கள் உட்பட்ட எந்த விடயத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்பட முடியாது என்று சம்பந்தன் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.

கிழக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டு அங்கு தேர்தல் நடைபெற்று முடிந்த போதிலும் அங்கு நடைபெற்ற முரண் நிலைகள் கட்சிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. வேட்பாளர்கள் தெரிவின் போது மிக அதிக எண்ணிக்கையானவர்களை தமது கட்சிக்கு ஊடாகவே நிறுத்த முடியும் என்பதை அவர்கள் தமது பிரதான நோக்காக் கொண்டிருந்தனர். உதாரணமாக எடுத்துக் கொண்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான செல்வம் அடைக்கல நாதன் தனது சிபாரிசினில் ஒருவரை மட்டும் வழங்க முடியும். இன்னும் ஒரு திறமையானவரை அல்லது தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய ஒருவரைச் சிபார்சு செய்வதற்கு அவருக்கு அனுமதியில்லை. இந்த விடயம் உதாரணத்திற்காகக் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் விகிதாசாரங்களை நோக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும். அவர்களில் ஒன்பது வேட்பாளர்களை தமிழரசுக்கட்சியினரே நியமித்தினர். ஏனைய ஐவரை மட்டுமே நான்கு கட்சிகளும் நியமிக்க முடிந்தது. இருப்பினும் அங்கு தமிழரசுக்கட்சி முன் நிறுத்திய வேட்பாளர்கள் ஒன்பது பேரில் ஒருவர் மட்டுமே தெரிவாகியிருந்தார். ஏனைய கட்சிகளால் நிறுத்தப்பட்ட ஐந்து வேட்பாளர்களில் நால்வர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கது.

அதுபோல திருகோணமலை மாவட்டத்தில் கூட்டமைப்பினால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 13. அவர்களில் பத்து வேட்பாளர்களை தமிழரசுக்கட்சி நியமித்திருந்தது. ஏனைய கட்சிகளுக்கு மூவரை நியமிப்பதற்கு மட்டுமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதேவேளை தம்மால் நியமிக்கப்பட்ட ஒரு வேட்பாளருக்கு சந்தர்ப்பம் இறுதி நேரத்தில் மறுக்கப்பட்டதாக ஈபிஆர்எல்எப் குற்றம் சுமத்தியிருக்கின்றது.  அதேபோல அம்பாறை மாவட்டத்தில்  பதினேழு  வேட்பாளர்களில் பதின் மூன்று பேரை தமிழரசுக்கட்சியே நியமித்திருந்தது.

இதற்கு அடுத்த கட்டமாக தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கு சேர்ப்பதற்கு பதிலாக மற்றொரு அசிங்கமும் கிழக்கில் அரங்கேறியிருந்தது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பரப்புரைகளில் ஈடுபடுவதற்கு மாறாக கட்சிகளில் போட்டியிடுவோருக்கு எதிரான நடவடிக்கையினை தமிழரசுக்கட்சி முன்னெடுத்திருந்ததாகவும் தெரியவருகின்றது. கூட்டமைப்பில் போட்டியிட்ட ஏனைய கட்சிகள் முன்நிறுத்தியவர்களைப் புறக்கணிக்குமாறும் அவர்கள் கடந்த காலங்களில் துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் நேரடியாகவே மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது. இருப்பினும் அவ்வாறு மக்களால் நிராரிக்குமாறு கோரப்பட்டிருந்த வேட்பாளர்கள் நால்வர் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தெரிவான ஐவரில் ஒருவர் மாத்திரமே தமிழரசுக்கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர் என்பது இன்னொரு முக்கியவிடயமாகும். இதன் அடிப்படையில் தமது கட்சியே பிரதான இலக்கு என்பதே அவர்களின் நோக்காக இருந்ததே தவிர மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று தமிழரசுக்கட்சி எண்ணிவிடவில்லை.

நடைபெற்ற பரப்புரை மேடைகளில் மாற்றுக்குழுக்கள் போல கூட்டமைப்பு தலைமைகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடந்து கொண்டிருந்ததாக சம்பவத்தினை நேரடியாக அவதானித்த மட்டக்களப்பின் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பில் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களை ஆத்திரப்படுத்தும் நடவடிக்கையினையும் தமிழரசுக்கட்சி மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களில் ஒருவரான குணம் என்பவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியிருந்தார், அதேபோல பிள்ளையான் கட்சியினைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை உள்வாங்கியமை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் விரக்தி நிலையினைத் தோற்றுவித்திருப்பதாக தெரியவருகின்றது.

தமிழரசுக்கட்சி தன்னிச்சிசையாக மேற்கொள்கின்ற தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளுக்கு அதனுள் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தீவிரமாக ஒத்துழைத்து வருவதாக அரசியல் உயர் மட்டங்கள் பேசிக்கொள்கின்றன. கிழக்குத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு போட்டியிட்ட ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் எனத் தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமது கையாட்களுடன் ஈடுபட்டிருந்ததாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவித்தன. வடக்கில் இருந்து சென்ற எம்பியுடன் யாழ், மற்றும் வன்னி இளைஞர்களும் இணைந்து அனைத்து இயக்கங்களையும் நிராகரிக்க வேண்டும் என்றும் தமிழரசுக்கட்சி நிறுத்தியவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாக மற்றைய கட்சிகள் குற்றம்சுமத்தியிருக்கின்றன.

ஒட்டு மொத்தத்தில் கிழக்கு மக்கள் வெறுப்படைய நேர்ந்தமை, வேட்பாளர்களை நிறுத்திவிட்டு அவர்களுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டமை உட்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவே கிழக்கில் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். தமிழ் மக்களின் தலைவிதியை சுயலாபங்களுக்காக ஒரு சிலர் தீர்மானிக்கின்ற நிலை மாறுமா? என்பது சந்தேகமே?

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தடுமாறும் போக்கினை அடுத்து எதிர்காலத்தில் தமிழரசுக்கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் பயணிக்க எண்ணியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இவ்வாறான அனர்த்தம் நிகழ்வதற்கான சாத்தியம் உணரப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைக்கான பரீட்சார்த்த முயற்சியாகவே கிழக்கில் தமிழரசுக்கட்சி நடத்திய தேர்தல் அத்துமீறலை கொள்ள முடியும். கிழக்கை இழந்தது போன்றதான அபாய நிலையை வடக்கு எதிர்கொள்ளாது என்பதற்கு என்ன நிட்சயம்? ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்ற பழமொழியின் சாரம் இலங்கை இனவாத அரசாங்கத்திற்கும் பொருந்தும்.

சர்வதேச அரங்கில் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான அத்திவாரம் பலமாக இடப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் ஒற்றுமையினை பலத்தினை நிருபிக்க வேண்டிய நிலையில் இருக்கும் அரசியல் தலைமைகள் தமது அர்ப்ப சொற்ற அரசியல் கனவுகளுக்காக தமிழ் மக்களின் வாக்குப் பலத்தினை சிதறிடித்து எதனைச் சாதிக்கப்போகிறார்கள்?

இன்னும் எதுவும் முடிந்துவிடவில்லை. அனைத்துக் கட்சிகளையும் கலைத்துவிட்டு ஒரே கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்து பயணித்தால், புலத்தில் இருந்து கிடைக்கின்ற நிதியினை சரியாகப் பங்கிடலாம். தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு உதவலாம்.. உண்மையாக தேசியத்திற்காக உழைப்பவர்களை அரசியல் தலைவர்களாக மாற்றலாம்.. இதுவே உடனடியாக செய்யவேண்டிய தலையாய பணி என்பதை தமிழரசுக்கட்சியும் அதனூடாகக் கதிரைக் கனவு காண்பவர்களும் புரிந்து நடக்கவேண்டும் இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

 -தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*