leader

மீள்குடியேற்றப் போர்வையில் மரணப் பொறிக்குள் தள்ளப்படும் வன்னி மக்கள்!

இன்னும் சில வாரங்களுக்குள் வவுனியா செட்டிகுளம் நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்பட்டு விடுவர் என்று மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் அறிவித்திருக்கின்றார். இதேபோன்று மீள்குடியேற்றம் தொடர்பிலான செய்திகள் நாளாந்தம் ஊடகங்களை ஆக்கிரமித்தாலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் வெளித்தெரியாத பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்லீடர் அம்பலப்படுத்துகின்றது.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்த கிராமங்களில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் தொடர்பிலான தகவல்கள் பெரிய அளவில் வெளிவரவில்லை. அவற்றில் சில சம்பவங்களைக் குறிப்பிடுகின்றோம்.

புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் நந்திக்கடலுக்கு மிக நெருக்கமாக மல்லிகைத்தீவு என்றொரு கிராமம் உள்ளது. குறித்த கிராமத்தில் வாழும் மக்கள் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழேயே வாழ்ந்து வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அதே நாள் ஒரு குடும்பப் பெண் தனது காணியில் தனது குடும்பத்தாருக்கு தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பு மூட்டியிருக்கின்றார். அதன் போது அடுப்பின் கீழிலிருந்த வெடிபொருள் ஒன்று வெடித்துச் சிதறியிருக்கின்றது. சம்பவத்தில் அவருடைய நெஞ்சுப் பகுதியைத் துளைத்த வெடிச்சிதறலால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கின்றார்.

அதே போல ஆனந்தபுரத்தினை அண்மித்த சிவநகர் ஏழாம் வட்டாரம் பகுதியில் இரண்டு இடங்களில் காணிகளை துப்புரவு செய்த மக்கள் குப்பைகளுக்கு தீயிட்ட பொழுது குண்டுகள் பாரிய சத்தங்களுடன் வெடித்துச் சிதறியிருக்கின்றன.

இந்த விடயங்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும் தமிழ்லீடர் சம்பவங்களை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறான நிலைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? என்று நோக்கினால் குறித்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதற்குப் பதிலாக காணிகளில் உள்ள பற்றைகளுக்கு தீயிட்டு இராணுவத்தினர் எரித்திருக்கின்றனர். அவ்வாறு எரிக்கப்பட்டதன் பின்னர் மக்களை மீள்குடியேற அனுமதித்திருக்கின்றனர்.

வன்னியின் இறுதிப் போரில் மிக உக்கிரமான சண்டை நடைபெற்ற பகுதி ஆனந்தபுரம் என்ற கிராமத்தினை மையமாகக் கொண்ட பகுதி என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அவ்வாறான மிகத் தீவிரமான போர் இடம்பெற்ற பகுதியில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் மக்களை அனுமதித்திருப்பதன் மூலம் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையாக இந்தச் சம்பவங்கள் இருக்கக் கூடுமா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இதேவேளை மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்படுகின்ற மக்களுக்கு எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் நிறைவு செய்து கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சிறு சிறு கொட்டில்களைக் கட்டிக்கொண்டு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. தமது காணிகளை விட்டு வெளியே சென்று காட்டுப் பகுதிகளில் தடிகளை வெட்டிக்கொள்வதிலும் அச்சம் காணப்படுகின்றது. காடுகளுக்குள் செல்வதற்கு இராணுவம் அனுமதி மறுக்கின்றமை மற்றும் காடுகளுக்குள் வெடிபொருள் ஆபத்துக்கள் இருக்கலாம் போன்ற அச்ச நிலைகள் காரணமாக மக்கள் காடுகளுக்குச் சென்று மரம் தடிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

தொடர்ந்தும் முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களின் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்கள் தமது அனைத்துத் தேவைகளையும் தொடக்கத்தில் இருந்தே தேடிக்கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. கிராமங்களில் தொழில்களை உடனடியாகத் தொடங்க முடியாத நிலை, கிணறுகளையோ கழிப்பிடங்களையோ சுற்றி அடைப்பதற்குக் கூட ஓலைகள் இல்லாத நிலையில் அந்த மக்கள் வாழ்க்கையை கழிக்கவேண்டிய நிர்க்கதியான சூழல் காணப்படுகின்றது. வீடுகளே இல்லாத நிலையில் தற்காலிகக் கொட்டில்களில் வாழும் மக்கள் இரவு வேளைகளில் அச்சமான சூழல் காரணமாக விடியும் வரை விழித்திருந்தே காலத்தைக் கழிப்பதாக கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

வசதியோடும் வனப்போடும் வாழ்ந்த மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ்வை மீளத் தொடங்கி முன்னெடுக்கும் சூழலில் மக்களின் எஞ்சிய வீட்டு யன்னல்கள், அவர்கள் விட்டு வெளியேறிய வாகனங்கள் அனைத்தையும் இரும்பிற்காக பிடுங்கிச் செல்லும் இரும்பு வியாபாரிகளும் தென்னிலங்கையில் இருந்து சென்று வன்னியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்களும் முடிந்த அளவில் அனைத்து இரும்புப் பொருட்களையும் வன்னியில் இருந்து அபகரித்து செல்ல முற்படும் அதேவேளை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதுகளில் திருடுவதற்கும் தயங்குவதில்லை அவர்களிடம் இருந்தும் தாம் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் சிறிய அளவிலான பொருட்களையாவது காத்துவிடவேண்டும் என்ற ஏக்கமும் வன்னியில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்ட மக்களிடத்தில் காணப்படுகின்றது.

இதேவேளை வன்னியில் அதிக தூரத்துக்கு ஒரு வீடு என்ற நிலையே காணப்படுவதால் அங்கு அச்சம் நிறைந்த பொழுதுகளையே கழிக்கவேண்டிய நிலை இளம் பெண்களையும், பெண் பிள்ளைகளையும் கொண்ட குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. தனித்துச் செல்லும் பெண்கள் இராணுவ நிலைகளையோ, இராணுவத்தினரையோ கடந்து செல்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தனியாகச் செல்லும் இளம் பெண்களிடம் இராணுவத்தினர் வலிந்து தமது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைக் கையளித்து வருவதாக பெற்றோர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். இதேபோன்று இராணுவத்தினர் வழங்கும் தொந்தரவுகளை அச்சம் காரணமாகவும் சமூகத்தில் நிலவும் மரியாதையின் நிமித்தமும் பலர் வெளிப்படுத்த முற்படுவதில்லை என்று தெரியவருகிறது.

இன்னும் அளவிட முடியாத நெருக்கடிகளுக்குள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தள்ளப்பட்டிருக்கின்ற வன்னி மக்களை மீட்டெடுத்து  அவர்களை மீண்டும் தமது பழைய நிலைக்கு இட்டுச் செல்லும் பாரிய பொறுப்பினை தமிழ்த் தலைமைகள் முன்னெடுக்க முன்வருவார்களா?

நான்கு மேடைகளில் நான்கு வீரவசனம் பேசி மக்களை உணர்வின்பால் உந்தி வாக்குகளைப் பெற்றுக்கொண்டாலோ, நான்கு பென்சில்களையும், ஐந்து மண்வெட்டிகளையும் மக்களுக்கு கொடுத்துவிட்டு அதனைப் படம் பிடித்து இணையத்தளங்களில் வெளியிட்டாலோ மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை. நாங்கள் தனி ஈழம் கேட்கவில்லை, எங்களுக்கு வடக்கு – கிழக்கு இணைப்பு வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் மட்டும் நின்றுவிட்டால் போதுமா?

முதலில் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முற்பட வேண்டும். அதனைவிடுத்து கட்சிக்குள் இருக்கும் பிடுங்குப்பாடுகளை வளர்த்துக்கொள்ள எதிர்க்கட்சியினர் போல ஆளுக்கு ஆள் அடித்துக் கொண்டு வசைபாடிக்கொண்டு தனிப்பட்ட நபர்களுக்கு ஆள்பிடிப்பதில் பலன் இல்லை. கட்சி அரசியலை விடுத்து மக்களுக்கான அரசியலை செய்வதற்கு தமிழ்த் தலைமைகள் முன்வரவேண்டும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை கையிலெடுத்து தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*