thalaivar

பதவிக்காக மாரடிக்கும் ‘கலைஞரின் கூட்டம்’ தமிழினத்தின் விடிவெள்ளியைக் குற்றம் சொல்வதா?

கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் கவிழ்ந்து கிடக்கும் தனது ஆதரவுத்தளத்தை மீளக்கட்டியெழுப்ப ஈழத்தமிழர் விவகாரத்தினை கையில் எடுத்திருக்கிறார். எத்தனையோ பேர் தமது வயிற்றுப் பிழைப்புக்காக ஈழத்தமிழர் விவகாரத்தினை கையில் எடுக்கவில்லையா? கலைஞர் கையில் எடுத்திருப்பதுதான் தப்பானதா? என்ற கேள்வி எழலாம். ஆனால் தனது குடும்ப நலனுக்காக இனத்தையே காவு கொடுத்த கலைஞரின் பரிவாரங்கள் உலகெங்கும் தமிழினத்தின் முகவரியாக கொள்ளப்படுகின்ற தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி மகிந்த ராஜபக்சவை விடவும் கொரூரமான ஒருவராகச் சித்தரித்து கருத்து வெளியிட்டிருப்பது தமிழின உணர்வாளர்களை கொதிப்படைய வைத்திருக்கின்றது.

அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் சொந்தச் சகோதர்களே தத்தமது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தி அப்பாவிகளை கொலைசெய்து ஏமாற்றிப் பிழைக்கும் குடும்ப அரசியல் தலைவிரித்தாடும் தி.மு.கவிற்குத் தலைமை தாங்கும் கலைஞர் கருணாநிதி அரசியல் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழுவதற்காக டெசோ என்கின்ற நாடகத்தினை அரங்கேற்றியிருந்தது அனைவரும் அறிந்ததே.

தமிழ்த் தேசிய இன விடுதலைப் போரை நசுக்கி அழிப்பதற்கு பிரதான சூத்திரதாரியாக விளங்கிய இந்திய அரசு கவிழ்ந்துவிடாதிருக்க முண்டுகொடுத்திருப்பது கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க கட்சிதான். ஈழத்தமிழினத்திற்காக பதவியைத் துறந்தேன் பதவியைத் துறந்தேன் என்று கலைஞரும், கலைஞர் பதவியை இழந்தார் பதவியை இழந்தார் என்று அவரின் பரிவாரங்களும் அண்மய காலமாக கூச்சலிட்டு வருவதை அனைவரும் அறிவர்.

உண்மையில் கலைஞர் பதவி இழக்கக் காரணம் என்ன? என்று கேட்டால் கலைஞரின் உண்மை முகம் வெளிப்படும். எண்பதுகளின் இறுதிப் பகுதியில் இலங்கையில் தமிழர் தாயகத்தில் காலூன்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைகளையும் நிறைவேற்றிவிட்டுத் இந்திய இராணுவம் திரும்பியிருந்ததை யாரும் மறந்திருக்கமுடியாது. தற்போது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கலைஞரும் உரையாற்றுகிறார். இந்த நிலையில் இந்திய அமைதிப்படை இலங்கையில் மேற்கொண்டிருந்த மிருகத்தனமான நடவடிக்கைகளை நினைத்துப் பார்க்கலாம். பெண்கள், கணவன் மாருக்கு முன்பாக, பிள்ளைகளுக்கு முன்பாக வைத்து அவர்கள் கண்முன்பாகவே தமிழ்ப் பெண்கள் மிகமோசமாக பாலியல் வல்லுறவு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், கொரூரமாக உயிர்ப்பலி எடுப்புகளுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் அமைதிப்படையின் நோக்கம் நிறைவடையாத நிலையில் தாயகம் திரும்பிய இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லவில்லை என்ற காரணத்திற்காகவே கருணாநிதி பதவி இழக்க நேரிட்டது. அன்றும் ஆட்சியில் இருந்தது தற்போது தி.மு.க முண்டுகொடுத்து வைத்திருக்கின்ற காங்கிரஸ் கட்சி தான். அந்த வரவேற்பு நிகழ்விற்கு மனிதப் பண்புள்ள தமிழன் சென்றிருக்கமாட்டான் என்பதே வெளிப்படையான விடயமாகும். அந்த நிகழ்விற்கு செல்லாதன் காரணமாக தனது பதவியை இழக்க நேரிட்டதாகப் புலம்பும் கலைஞர் கருணாநிதி, அதனை தற்போது கையில் எடுத்து திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்வது அவரது போலி முகத்தினை வெளிப்படுத்தி நிற்கின்றது. அன்றை நிலையில் கூட அவர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே இந்தியப் படையினர் வரவேற்பில் பங்கேற்கவில்லை என்பதையே இன்றைய அவரது கருத்து நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. உண்மையான தமிழினத்தை நேசிக்கின்ற ஒரு தமிழன், இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு நாடு திரும்பியவர்களை வரவேற்கச் செல்லாமையால் பதவியை இழக்க நேரிட்டது என்று தம்பட்டம் அடிப்பானா?

அன்று அல்ல இன்றும் கூட பதவிக்காகவே அவர் அடம்பிடிக்கிறார் என்பதை போரின் இறுதிக்காலத்தில் அவர் ஆடிய நாடகம் மிகத் தெளிவாகப் புலப்படுத்தியது. போர் நடைபெற்ற போது வன்னியில் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்த போது தமிழகத்தில் இரத்தக் கண்ணீர் ஓடியது. தமிழ் உணர்வாளர்கள் தங்கள் உடல்களை எரித்து உயிர் துறந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். புலத்தில் எங்கும் கண்ணீருடன் வீதிகளில் புலம் பெயர் மக்கள் திரண்டனர். இந்திய மத்திய அரசு நினைத்திருந்தால் பல பத்தாயிரம் அப்பாவித் தமிழ் உயிர்களையும் பல பத்தாயிரம் தமிழர்களின் அவயவங்களையும் காத்திருக்க முடியும். ஆனாலும் அதற்கான எந்தவித ஆரோக்கியமான முடிவையும் இந்திய மத்திய அரசு எடுக்கவில்லை. காரணம் இலங்கைப் போரில் தமிழ்த் தேசிய விடுதலைப் போரைச் சிதைப்பதற்கு இலங்கை அரசினைக் காட்டிலும் கூடுதலான அக்கறை செலுத்திச் செயற்பட்டது இந்திய மத்திய அரசு தான்.

மத்திய அரசின் தாங்கு தூணாக விளங்கிய தி.மு.கவின் தலைவர் கலைஞர் கருணாநிதி அதற்குள்ளும் குழந்தை அரசியல் செய்யத் தலைப்பட்டார். போரை நிறுத்தப் போவதாகவும் அதற்காக உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கதைவிட்டார். காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நான்கு மணி நேரத்தினை உண்ணாவிரதப் போராட்டத்திற்கான சுப நேரமாக அவர் தேர்ந்தெடுத்தார். இரண்டு குளிரூட்டிகள், அவர் உல்லாசமாகப் படுத்திருந்த கட்டிலின் அருகாக அவரின் அன்புத் துணைகள், பிள்ளைகள் புடை சூழ தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ள நான்கே நான்கு மணி நேரம் நிறைவில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிக்கையும் விட்டுவிட்டு எழுந்துவிட்டார். அந்த அறிக்கையினை அவரது அன்புக்கு உரியவர்கள் மட்டும் நம்பியிருக்கலாம். ஆனால் பிணங்கள் மே 18 வரை வன்னியில் தொடர்ந்தும் வீழ்ந்து கொண்டிருந்தன.

இதனிடையே அண்மையில் டெசோ ஆரவாரத்தினை அடுத்து தனது உண்ணாவிரதம் குறித்து புலம்பத் தொடங்கிய கலைஞர், தனது உண்ணாவிரத்தினை அடுத்து போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறி இலங்கை அரசு இந்திய அரசை ஏமாற்றிவிட்டதாகவும் அதனால் தான் ஏமாற்றமடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

போர் நடைபெற்ற போது போரை நிறுத்துவது தொடர்பில் எதற்காக மஹிந்த அரசின் வாக்குறுதியை நீங்கள் நம்பினீர்கள்? களத்தில் நின்று போராடிக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளைக் கேட்டிருக்கலாம். எண்பதுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பில் உங்களுக்கு நெருக்கமானவராக இருந்த பா.நடேசனே போரின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். போர் தீவிரம் பெற்ற காலத்தில் இலங்கை விவகாரம் தொடர்பில் உங்கள் பிரதிநிதியாக நீங்களே தெரிவு செய்திருந்த தங்கள் பாசமகள் கனிமொழி நடேசனுடன் தொடர்பிலிருந்தமை வெளியில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைத்திருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது. அன்று போர் நிறுத்தம் தொடர்பிலான நாடகத்தினை ஆடிவிட்டு இன்று இலங்கை அரசின் மீது குற்றம் சுமத்தும் உங்கள் அரசியல் அடிவருடித்தனத்தினை எந்த வகைக்குள் அடக்குவது?

அதேபோல போர் தீவிரம் பெற்றிருந்த காலப்பகுதியில், மத்திய அரசில் அங்கம் பெறும் தி.மு.க நாடாமன்ற உறுப்பினர்கள் பதவி விலகத்தயாராக இருக்கின்றனர். அவர்கள் எந்த வேளையும் பதவி விலகிவிடுவர் என்றெல்லாம் மிரட்டினார். ஆனாலும் இறுதிவரையில் அவர்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. மாறாக மிருகக் காட்சிச் சாலையில் விலங்குகளைப் பார்வையிடுவதற்குச் செல்வது போல கலைஞரின் ஈழத்தமிழர் விவகாரங்களைக் கண்காணிப்பதாகச் சொல்ல்படுகின்ற கனிமொழி உட்பட்ட எம்பிக்கள் வவுனியா மெனிக்பாம் முகாமிற்குச் சென்று சுற்றிப்பார்த்துச் சென்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் விருந்துண்டு நாடு திரும்பி அறிக்கை விட்டதை ஈழத்தமிழ் மக்கள் மறப்பதற்குத் தயாரில்லை.

கலைஞர் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு விசுவாசமாகச் செயற்பட்டவர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கூற முடியும். குறிப்பிடப்படுகின்ற உதாரணத்தினை விடவும் மேலதிமாக எதனையும் கூறவேண்டிய அவசியம் இல்லை. ‘தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒரு சிறந்த அரசியல் தலைவர்” என்ற சாரப்பட போர் நடைபெற்ற காலப் பகுதியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஆக, தமிழினத்தின் பிரதான எதிரி இன்னொருவரை மனமார புகழும் போது புகழப்படுகின்ற நபர் எந்த வகையில் அந்த இனத்தின் மீட்பராக அல்லது அந்த இனத்திற்கு நன்மை விளைவிப்பராக இருக்க முடியும்? கதை, திரைக்கதை, வசனத்தில் சிறந்தவராக கை தேர்ந்தவராக விளங்கினாலும் அரசியலில் சரியான முடிவினை சரியாக எடுக்கத்தவறுகின்றமை காரணமாகவே கலைஞர் பதவி இழப்புக்களை சந்திக்க நேரிட்டிருக்கின்றது என்பதை அவர் இன்று வரையில் ஏற்றுக்கொள்வாரோ என்பது கேள்விக்குரிய விடயமாகும். ஈழப்பிரச்சினைக்காக ஏற்கனவே பதவியை இழந்ததாகச் சொல்லிக் கொள்கின்ற அவர், இறுதிப் போரின் போது சரியான முடிவினை எடுத்திருந்தால் வரலாற்றில் மிகப் பெரிய மனிதாகப் போற்றப்பட்டிருப்பார்.

இதனை விடுத்தாலும் அண்மையில் டெசோ மாநாடு நடைபெற்ற பெற்றிருந்தது. தமிழீழ ஆதரவு மாநாடு என்ற அடை மொழியுடன் டெசோ காணப்பட்டாலும் தமிழீழம் தொடர்பிலான தீர்மானத்தை ஒத்திவைத்த கலைஞரால் அதே நாள் ஆய்வரங்கம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. குறித்த ஆய்வரங்கத்தின் போது கலந்துகொண்ட இரண்டு ஈழத்தமிழர்களில் ஒருவர் ஆய்வரங்கில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். அவர் தனது கருத்தில், இலங்கையில் தீர்வினை முன்வைப்பதற்கு பொருத்தமான விடயமாக இலங்கை அரசினாலும் இந்தியாவினாலும் சொல்லப்படுகின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தினால் தமிழினத்திற்கு எந்தவிதமான நலனும் கிடைக்கப்போவதில்லை. எதுவுமே அற்ற ஒரு விடயத்தினை கைவிட்டு அதிகாரம் உள்ள தீர்வு ஒன்றினை முன்மொழிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்ற சாரப்பட உரையாற்றியிருக்கின்றார். உடனடியாகவே மூக்கை நுழைத்த தி.மு.க முக்கியஸ்தர் டி.ஆர்.பாலு மற்றும் கலைஞரின் உத்தம புத்திரி கனிமொழி ஆகியோர் குறித்த ஈழத்தமிழரின் உரையினை இடையூறு செய்ததுடன் 13ஆவது திருத்தச் சட்டமே பொருத்தமானது என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆக, எதுவுமே இல்லாத 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் நிலையில் கலைஞர் கருணாநிதிதியின் குழுவினர் முண்டியடிக்கும் நிலையில் டெசோ என்ற பெயரிலான கருணாநிதியின் புதிய பராசக்தி மூலம் அவர் எதனைப் பெறுவதற்கு எத்தனிக்கிறார்.

டெசோ மாநாட்டில் பங்குகொள்வதற்கு என இலங்கையில் இருந்து சென்றிருந்த இடதுசாரிக் கொள்கை உடைய கட்சி ஒன்றைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரட்ண உரையாற்றிக்கொண்டிருந்த போது அவரது உரையையும் இடை நிறுத்தியிருக்கிறார்கள். இலங்கையில் நடப்பவற்றை சொல்வதற்குக் கூட அவர்களின் அரங்கம் அனுமதிக்கவில்லை எனில், தி.மு.க எதனைப் பெற்றுக்கொடுக்கப் போகிறது தமிழினத்திற்காக?
ஒட்டு மொத்தத்தில் தமது அரசியல் நலனுக்காக ஈழத்தமிழர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் தி.மு.க தற்போது தமிழீழ விடுதலைப் பயணத்தைத் தோளில் சுமந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை மிகப் பாரிய இன அழிப்பினை மேற்கொண்டிருந்த மஹிந்தராஜபக்சவை விடவும் மிக மோசமான ஒரு கொலையாளி என்று கூறியிருப்பதன் திமிர்த்தனம் எதனைப் பின்னணியாகக் கொண்டது. டெசோ மாநாடு நடைபெற்றதால் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு அணியினரிடம் இருந்து அந்நியப்பட்டுவிடுவோமா? என்ற அச்சம் காரணமாக கலைஞர் கருணாநிதியே தலைவர் பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்தி உரையாற்றுமாறு ஆலோசனை வழங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது?

எண்பதுகளின் இறுதியில் இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைத்துச் செயற்பட்ட இந்திய மத்திய அரசு இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண அதிகாரத்தினை பெற்றுத்தருவதாகவும் அதற்கு தலைவர் பிரபாகரன் அவர்களையே முதலமைச்சராக நியமிப்பதாகவும் தெரிவித்திருந்த நிலையிலும் பிரபாகரன் அவர்கள் அதனை நிராகரித்திருந்தார். அவர் தி.மு.க தலைவர் கலைஞர் போல ஒரு போதும் பதவிக்காக ஆசைப்படவில்லை என்பதை கலைஞரின் பரிவாரங்கள் புரிந்து கொள்ளவேண்டும். உங்கள் அரசியலுக்காகவும், உங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவும் முடிந்த எல்லாவற்றையும் செய்து வருகிறீர்கள், அது குறித்து ஈழத்தமிழ் மக்களுக்கு கவலை இல்லை. ஆனால் ஈழத்தில் வீழ்ந்த உயிரற்ற உடலங்களின் மீதும், எண்ணிப்பார்க்க முடியாத தியாங்கள் மீதும் ஏறிச் சவாரி செய்வதற்கு தயவு செய்து எண்ணிக் கொள்ள வேண்டாம். உரிய நேரத்தில் உதவாத நீங்கள் இனி வரும் காலங்களிலாவது ஈழத்தமிழ் மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை என்றாலும் கையிலெடுக்கவேண்டாம் என்று ஈழத்தமிழ் மக்கள் சார்பில் தமிழ்லீடர் கேட்டுக்கொள்கின்றது.

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*