kesarieditor

சம்பந்தன்,வித்தி குழுவால் பழிவாங்கப்பட்ட வீரகேசரி ஆசிரியர்!

தமிழ் மக்களின் உரிமைப் பயணத்தினை தற்போது தோளில் சுமந்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தனது நோக்கத்தினைக் கைவிட்டு கதிரைக் கனவுக்காக போராடுகிறதோ என்று எண்ணத் தோன்றும் வகையில் செய்படத் தலைப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னான தமிழ் மக்களுக்கிடையிலான பிளவுகளைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்திப் பயணிக்கவேண்டும் என்பதே உண்மையாக தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் அவாவாகும். ஆனாலும் தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஒரு சிலர் தமது நோக்கத்தினை கைவிட்டு கட்சி அரசியல் செய்யவும் அடுத்த முறையும் கதிரைகளைக் கைப்பற்றவும் என்ன எல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்வதற்குத் தலைப்பட்டிருகின்ற அவலத்தினை அம்பலப்படுத்த முற்படுகின்றது தமிழ் லீடர் ஆசிரியர்பீடம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகள் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற நிலையில் அதற்குள் பல கருத்து முரண் நிலைகள் காணப்படுகின்றன. அவற்றைக் களைந்து ஒரே சக்தியாகப் பயணிக்கவேண்டும், நேர்மையான ரீதியில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தாயகத்தில் வெளிவரும் ஊடகங்கள் சில எழுதி வருகின்றன. அந்த வகையில் இலங்கையின் முதன் நிலை தமிழ் பத்திரிகையாக விளங்கி வருகின்ற வீரகேசரியின் வார இதழ் ஆசிரியர் வி.தேவராஜ் இந்த விடயத்தில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் செயற்பட்டு வந்தார். வீரகேசரி வார வெளியீட்டில் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழரசுக்கட்சி மேற்கொள்ளும் தில்லுமுல்லுகள் தொடர்பிலும் அவற்றினைக் கைவிட்டு பொது நிலைக்கு தமிழரசுக்கட்சி முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி எழுதி வந்திருந்தார்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத தமிழரசுக்கட்சியினர் இதனைத் தடுத்துநிறுத்துவதற்கான சதிவலையினைப் பின்னியிருக்கின்றனர். அவர்களது தாய் வீடாகக் கொள்ளப்படுகின்ற இந்தியாவின் உதவியினை நாடியிருக்கின்றனர். கடந்த வாரம் இந்திய உயர்ஸ்தானிகரலாயத்திற்கு தலைவர் சம்பந்தன், மாவைசேனாதிராசா, தேசியப்பட்டியல் சுமந்திரன் ஆகியோரு வடமாகாண சபை முதல்வர் கனவில் இருக்கும் வித்தியாதரனும் சென்றிருக்கின்றனர். அதன் போது தமிழரசுக்கட்சிக்கு எதிராக தேவராஜ் எழுதிய கட்டுரைகளை அவர்கள் ஆதாரப்படுத்தி வீரகேசரி வார வெளியீட்டில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். அதனை அடுத்து வீரகேசரி நிறுவனப்பணிப்பாளர் குமார் நடேசனை அழைத்த தூதரக அதிகாரி தேவராஜை பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்.

இருப்பினும் வீரகேசரியின் வரலாற்றில் மிகக் கூடிய காலம் பணியாற்றி அதன் வெற்றிக்காக உழைத்த தேவராஜை பதவிவிலக்க முடியாது என்ற காரணத்தால் பதவி உயர்வு என்ற போர்வையில் வேறு பதவியினைக் கொடுத்து அவரை அந்தப் பதவியில் இருந்து தூக்கியிருக்கிறார்கள். ஆக, 20 வருடங்களுக்கு மேலாக உயிர் அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் அனைத்தையும் கடந்த நிலையிலும் அயல் நாட்டில் பிறந்திருந்தாலும் தமிழன் என்ற உயரிய குணத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்திற்காக எழுதியமையால் தேவ்ராஜ் தண்டிக்கப்பட்டிருக்கின்றார். ஒற்றுமையை வலியுறுத்திமையால் தமிழரசுக்கட்சி மிக மூத்த பத்திரிகையாளன் ஒருவருக்கு கொடுத்த பரிசு பழிவாங்கலாக அமைந்திருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றொரு சக்தியே இருக்கக்கூடாது விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் வலுப்பெற்ற அந்தக் கட்சியினை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் தமிழரசுக்கட்சி ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இல்லை என்பதற்கு இன்னொரு விடயத்தினையும் ஆதாரப்படுத்த முடியும் அண்மையில் சக்தி தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் தமிழரசுகட்சியின் நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

குறித்த ஊடகங்கள் அரச சார்பு அல்லது பெரும்பான்மை இனச்சார்பு ஊடகங்களாக இருந்தாலும் கூட அதில் சொல்லப்பட்ட சில விடயங்கள் தமிழரசுக்கட்சியின் கதிரைக்கனவினை ஆட்டங்காண வைப்பவையாக அமைந்துவிடுமோ என்று அஞ்சிய தலைவர் சம்பந்தனும் எதிர்காலத் தலைவராகச் சொல்லப்படுகின்ற சுமந்திரனும் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து தமக்கு எதிராக ஊடங்கள் செயற்படுவதைக் கட்டுப்படுத்துமாறு கோரியிருக்கின்றனர். இந்த விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினரும் சக்தி தொலைக்காட்சி முக்கியஸ்தருமான சிறீரங்கா வெளியில் சொல்லி கிண்டல் அடித்திருக்கிறார்.

ஆக, எதனைச் செய்யவேண்டும், எதற்காகச் செய்யவேண்டும் என்ற நிலைகளுக்கு அப்பால் கதிரைகளுக்காக எதனையும் செய்வோம் என்ற இறுமாப்புடன் தமிழரசுக்கட்சி செயற்பட்டுவருகின்றமை கண்டிக்கத்தக்கது. தமிழினத்திற்காக காலங்காலமாக இரத்தச் சகதிக்குள் நின்று உழைத்த வீரகேசரி வார வெளியீட்டின் முன்னாள் ஆசிரியர் வீ.தேவராஜே பழிவாங்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தும் ஊடகர்கள், கூட்டமைப்புப் பற்றாளர்களை தமிழரசுகட்சியின் தீவிரவாதிகள் என்ன எல்லாம் செய்வார்களோ?

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*