leader

ஒரே(டெசோ) மேடையில் இரண்டு கலைஞர்கள்!

ஈழத்தமிழன் சிந்திய இரத்தமும் கொடுத்த விலைகளும் தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத ரணங்களாய் இன்னமும் வாட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இத்தனைக்குப் பின்னும் ஈழத்தமிழர்களின் அளவிட முடியா அர்ப்பணிப்புக்களின் மேல் நின்று வயிறு வளர்க்கும் தலைமைகளும் எமது இனத்தின் மத்தியில் இருப்பதனைத்தான் தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட தாயகத்திற்கான விடுதலைப் போராட்டத்தினை அதே வழியில் வெற்றி கொள்ள முடியாது என்பதால் தான் இளைஞர்களின் கைகளுக்கு போராட்டம் ஒப்படைக்கப்பட்டது. அதன் விளைவு தான் இன்று தமிழன் என்றொரு இனம் உண்டு என்று சர்வதேசத்தினைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது. உலகின் செவிப்பறைகளில் ஓங்கி அறைந்து எமது விடுதலையின் தார்ப்பரியத்தினை வெளிப்படுத்தியது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம்.

ஆயுதப் போராட்டத்தின் வீச்சு நினைத்துப் பார்க்க முடியாது சூழ்சிப் பின்னல்களின் காரணமாகவே வீழ்த்தப்பட்டது என்றாலும் சூழ்சிப் பின்னணியில் யார் எல்லாம் இருந்திருப்பார்கள் என்பதை இனி வருங்காலங்களின் வரலாறுகள் வெளிப்படுத்தத்தான் போகின்றன. ஆயுதப் போராட்டம் வீழ்ந்தாலும் அதன் அனுதாபிகளும் உணர்வாளர்களும் உண்மையான போராட்ட முனைப்புக்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

அதேவேளை ஈழத்தமிழனின் அவலத்தினைச் சொல்லிச் சொல்லியே பிழைப்பு நடத்தும் கூட்டம் பற்றி அம்பலப்படுத்த வேண்டிய தேவை தற்போது உணரப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி டெசோ மாநாட்டினை நடத்துவதற்கு பிரமாண்டமான ஏற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றார். கலைஞர் கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்தலாம், திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்சிகளில் பிரதம அதிதியாகப் பங்கேற்கலாம்.. அது எல்லாம் ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினைக்குரிய விடயங்கள் அல்ல. ஆனால் முள்ளிவாய்க்காலில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயிர்கள் துடிதுடித்து வீழ்ந்த போது அந்த உயிர்களைக் காப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது தமிழகத்தில் எழுந்த ஆர்ப்பரிப்பு அலைகளைத் தணிப்பதற்காக அவர் ஆடிய நான்கு மணி நேர உண்ணாவிரதம் உட்பட்ட நாடகங்களை ஈழத்தமிழர்கள் மறந்துவிடப் போவதில்லை. கலைஞர் நினைத்திருந்தால் போர் உச்சம் பெற்றிருந்த போது மத்திய அரசில் பெற்றிருந்த அங்கத்துவத்தைத் தூக்கி எறிந்து அரசினை நிலைகுலையச் செய்திருப்பதுடன் வரலாற்றில் ஒரு உன்னதமான பணியினையும் ஆற்றியிருக்கலாம். ஆனாலும் அவர் முடியப்போகிறது.. முடிந்துவிடட்டும் என்று ஆற அமர இருந்து பார்த்ததோடு நின்று விடாது மூன்று இலட்சம் வன்னி மக்கள் தங்கள் வசந்தமான வாழ்க்கைத் தொலைத்து முகாம்களில தறப்பாள்களின் கீழே வாடிய போது தனது மகள் உட்பட்ட தனது விசுவாசத்துக்கு உரியவர்களை முகாம்களுக்கு அனுப்பியது மட்டுமல்லாமல் அங்கு மக்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று ஊடகங்களுக்கு கதைகளும் சொல்லுவித்தார்.

இறுதியில் நடைபெற்ற தேர்தலிலும் கட்டிப்பிடித்திருந்த முதலமைச்சர் கதிரையையும் அவர் பறிகொடுக்கும் அவல நிலையினைச் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவாக மீண்டும் ஈழத்தமிழர்களின் அனுதாபி என்ற மாயையை தமிழக மனங்களில் தோற்றுவித்து அடுத்த தேர்தலில் முடிந்த அளவு கதிரைகளைப் பிடுங்கி எடுக்கவேண்டும் என்பதே கலைஞரது உண்மையான நோக்கமாகும். அதற்காக அவர் செயற்படுவது அனைவருக்கும் பட்டவர்த்தனமாக தெரிந்த விடயமாகும். தமிழீழத்திற்கான மாநாடு என்ற தொனிப் பொருளை மையமாக வைத்து மாநாடு நடத்தப்பட்டாலும் அதற்கான பிரகடனத்தை செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ள கலைஞர் இனியும் காலம் தாழ்த்தி எப்போது செய்யப் போகிறார் என்பது தான் புரியவே இல்லை. ஆனாலும் பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கு அமைய தனது போராட்டத்தினை வெற்றியடையச் செய்வதற்கு அவர் இன்னொரு கலைஞரின் உதவியினையும் நாடியிருக்கின்றார். அவர் இரா.சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு மக்களின் பெரும்பான்மை விருப்புக்குரிய கட்சியாகத் தெரிவு செய்யப்பட்டாலும் அதன் போக்குத் தொடர்பிலான பகிரங்க விமர்சனங்கள் தாயக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. அது தொடர்பிலான விரிவான பார்வையினை அடுத்த ஆசிரியப் பார்வையினூடே நோக்கலாம்.

நிற்க, தாயகக் கலைஞர் சம்பந்தன் தலைமையிலான நான்குபேர் அடங்கிய குழு ஒன்று தமிழகக் கலைஞர் நடத்தும் மாநாட்டில் பங்கேற்கும் என்ற தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. தாயகக் கலைஞர் சம்பந்தன், சர்வதேச ஊடகங்களிலும் தென்னிலங்கை ஊடகங்களிலும் தமிழ் மக்களின் மீட்பர் என்ற தோற்றங்காட்டினாலும் உண்மையில் அவர் தமிழினத்திற்கு எதிரானவர் என்பதை பல்வேறு சான்றாதாரங்களுடன் நிறுவிவிட முடியும். சுதுமலையில் தமிழீழப் பிரகடனம் மேற்கொண்ட போது அதில் பிரதான பங்கு வகித்திருந்த தமிழ் கட்சிகளில் சம்பந்தன் அங்கத்துவம் பெற்றிருந்த கட்சியும் ஒன்றாகும். அதன் பின்னான போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான போராளிகளின் உயிர்க்கொடைகள் தமிழீழத்தினை நோக்கியதாகவே அமைந்திருந்தது. ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் ஓய்வுபெற்றிருந்தாலும் அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை கைக்கொள்வர் என்ற நோக்கின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் அதன் தலைவர் சம்பந்தனும் அவரது கட்சி முக்கியஸ்தர்களும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்கள் போலச் செயற்படத் தலைப்பட்டிருக்கின்றனர். டெசோ மாநாட்டிற்கான அழைப்பினை கலைஞர் கருணாநிதி அனுப்பியதும், ‘தமிழீழம் தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படாது என அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது, எனவே பிரிவினை வாதத்தினை வலியுறுத்தாமையால் அந்த மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் பரிசீலிக்கிறோம் என்ற சாரப்பட சம்பந்தன் உடனடியாகவே தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

வாசகர்கள் மிகத் தெளிவாக ஒரு விடயத்தினை அவதானிக்கலாம். இலங்கை அரசின் அதி உயர் மட்டங்களில் உள்ளவர்கள் இலங்கையின் ஒருமைப்பாடு தொடர்பில் கதைப்பதிலும் அதிகமாக சம்பந்தனும் அவருக்கு நெருக்கமான ஒரு சிலரும் நாங்கள் ஒரு போதும் தமிழீழத்தைக் கேட்கவில்லை, தமிழ் மக்கள் ஒரு போதும் தமிழீழத்தினைக் கேட்கவில்லை. இலங்கையில் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினையே வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்து வருகின்றனர். இதன் உள் நோக்கம் என்ன? இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்றினைக் குறிப்பிட முடியும். வன்னியில் போர் தீவிரம் பெற்றிருந்த போது போரைத் தடுத்து நிறுத்த கருணாநிதி முனைப்புக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும் அதற்கு நிகரான குற்றச்சாட்டினை சம்பந்தன் மீதும் சுமத்த முடியும். போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும் கூட்டமைப்பின் தலைவராகவே சம்பந்தன் இருந்தார். இலங்கையின் மிக மூத்த அரசியல் வாதிகளில் ஒருவராக இலங்கை ஜனாதிபதியாலேயே மதிக்கப்படுகின்ற ஒருவர் போரை நிறுவதற்கான எத்தகைய முனைப்புக்களை மேற்கொண்டார் என்பதை அம்பலப்படுத்த முடியுமா? முடிந்திருந்தால் ஏதாவது ஒரு தூதரகத்தின் முன்னால் உண்ணாவிரதம் இருப்பது பற்றி யோசித்ததாவது உண்டா?

கலைஞர் முன்னெடுக்கும் எந்தப் பெறுமதியுமற்ற போலி மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்களிடம் ஏற்பட்டு வருகின்ற தமது கட்சி தொடர்பிலான விரக்தி நிலையினைப் போக்க முடியும் என்று சம்பந்தர் கருதுகிறார் என்றே எண்ண முடியும். அதேபோல ஈழத்தமிழர்களினை வைத்து அரசியல் செய்து மீட்டும் அதிகாரங்களை ஏப்பமிடத் துடிக்கும் கலைஞர் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகளே வந்திருக்கின்றனர் என்று அரசியல் செய்யலாம் என்று நினைத்திருக்கலாம். இருப்பினும் இரண்டு கலைஞர்களது நாடகங்களுக்குள் அகப்பட்டிருப்பது ஈழத்தமிழ் மக்களின் ஈகங்கள் தான்.

புலத்தில் வௌ;வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ் உணர்வாளர்களுக்காக ஒரு வரி, ஒரே ஒரு வரி ஆறுதல் அறிக்கை வெளியிட நினைக்காத கூட்டமைப்பிற்குத் தலைமை தாங்கும் சம்பந்தன் மிக மோசமான அரசியல் பித்தலாட்டம் நடத்தும் கருணாநிதியின் மாநாட்டிற்குச் செல்வதன் மூலம் எதனைச் சாதிக்கப்போகிறார். ஜெனீவாவில் உலக நாடுகள் முன்வந்து ஈழத்தமிழர் பிரச்சினைகளுக்காக பிரேரணை முன்வைத்து இலங்கை அரசுடன் பொருதிய போது அந்த நாடுகளுடன் கை கோர்த்து ஈழத்தமிழர் பிரச்னையின் தார்ப்பரியத்தினை எடுத்துச் சொல்ல வக்கற்ற நிலையில் இருந்து கொண்டு தமது முயற்சியின் பலனாகத்தான் ஜெனீவாத் தீர்மானம் வென்றது என்று அறிக்கை வெளியிட்டிருந்தமையையும் வரலாறு மறக்காது.

புலத்தில் பல்வேறு போராட்டங்களை தமிழ் உணர்வாளர்கள் முன்னெடுத்துவருகின்ற நிலையில் அந்தப் போராட்டங்கள் தாயகத்தில் உள்ள தமிழ் மக்களுக்காகத்தான் நடக்கின்றன என்பதை எண்ணிப் பார்ப்பதற்கு சம்பந்தனுக்கும் அவரது எம்பிக்களுக்கும் மனங்கள் இடங்கொடுப்பதில்லை. கட்சிக்கு பணம் சேர்ப்பதற்காக மட்டும் புலத்தில் உள்ளவர்களை நாடுவார்கள். தாயகத்தில் போரால் குடும்பத் தலைவர்களை இழந்த பெண்களில் பலர் விபச்சாரம் செய்தே தமது பிள்ளைகளையோ குடும்பத்தினையோ பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வாறான அவலங்களைப் போக்குவதற்கு பொதுவான கட்டமைப்பு எதனையும் உருவாக்குவதற்கு எந்த விதமான முனைப்புக்களையும் செய்யாத சம்பந்தன் தமையிலானவர்கள் தமிழகத்தில் கலைஞர்கள் சங்கமிப்பில் கலந்து கொண்டு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் கதைப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது?

இதனை விடவும் மிகப் பெரிய வரலாற்றுத் துரோகத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் நிகழ்த்தியிருக்கின்றது. சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தாமாக முன்வந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதற்கான ஆதரவு அலைகள் தமிழகத்திலும் புலத்திலும் எதிரொலித்தன. சர்வதேசமும் அது தொடர்பில் கவனம் செலுத்த முற்பட்டது. உடனடியாக சிறையில் வாடும் அப்பாவிக் கைதிகளின் விடுதலையைத் தடுப்பதற்கும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கும் விரைந்து செயற்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டமைப்பினை இரண்டு பிரவுகளாகச் செயற்படுத்தி அரசியல் நாடகம் ஆடினார் சம்பந்தன். அதற்கு கூட்டமைப்பு எம்பிக்கள் தாளம் போட்டனர்.

கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட்ட எம்பிக்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தினைத் தொடங்கிய சிறைக் கைதிகளைச் சந்தித்த சுமந்திரன், சிறீதரன், அப்பாத்துரை விநாயக மூர்த்தி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நம்பி உண்ணாவிரதத்தினைக் கைவிடும்படியும் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்போம் என்றும் சொல்லி அப்பாவிக் கைதிகளை ஏமாற்றி உண்ணாவிரதப் போராட்டத்தினை இடை நிறுத்தினர். கூட்டமைப்பு வழங்கிய ஒரு மாதம் இரு மாதமாகி தற்போது பலமாதமாகிவிட்டது. இறுதியில் அரசியல் கைதிகளை அடித்து உதைத்து சித்திரவதை செய்து கொன்று, கோமா நிலைக்குத்தள்ளி, முடவர்களாக்கியிருக்கிறது பேரின அரசு. இனிவருங்காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் எந்த ஒரு போராட்டத்தினையும் நிகழ்த்த முடியாத அளவிற்கு அவர்களை அச்சமூட்டும் வகையில் இந்தக் கெடுபிடி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதற்கும் வழமை போல அரசாங்கத்தின் மீதும் படைத்துறை மீதும் குற்றம்சாட்டிவிட்டு அரசியல் செய்ய முடியாது. இதற்கான முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பே எடுக்கவேண்டும். கைதிகளைத் தடுத்துநிறுத்துவத்கான கோரிக்கையை தமிழ் மக்கள் சார்பில் யாரும் முன்வைத்திருப்பதற்கு வாய்பில்லை. அரசாங்கத்தைக் காப்பாற்றவே கூட்டமைப்பு இவ்வாறான மிக மோசமான செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கின்றது என்றே கருத முடிகிறது.

தேர்தல் காலங்களில் மாவீரர்களையும், மண்ணையும் வீர வசனங்களையும் கூறி மக்களை உணர்வின்பால் தள்ளி வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பொடி நடையாக சென்றுவிடுவார்கள். மீண்டும் தேர்தல் வந்தால் மட்டும் ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் படையெடுப்பார்கள். இதுதான் தற்போது கிழக்கில் நடந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லையே கிராமங்களில் மக்களைச் சந்திக்கச்செல்வதாக இருந்தால் மக்களுக்கு உதவி செய்கிறார்களோ இல்லையோ, புகைப்படக் கருவிகளைச் சுமந்து செல்லத் தவறுவதில்லை.

ஈழத்தமிழினம் ஏதிலிகளாக அரசியல் அநாதைகளாக விடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் டெசோ மாநாட்டுப் பொம்மை நாடகத்தில் கலைஞர்கள் கருணாநிதியும், சம்பந்தனும் புதிதாக எதனைச் சாதித்துவிடப் போகிறார்கள் என்பது தற்போது உள்ள கேள்வியாகும்.

-தமிழ் லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*